உப்புச் சப்பில்லாத விஷயம்!
அன்புள்ள சிநேகிதியே,

நான் அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் ஏதேனும் விஷயத்தைப் பற்றி உங்களுக்கு இந்தப் பகுதிக்கு எழுத வேண்டும் என்று நினைப்பேன். முடியவில்லை. இந்தத் தடவை அதிக நாள் தங்க வேண்டியிருந்ததால் நேரமும் கிடைத்தது. அதற்கேற்பப் பிரச்சனையும் விஸ்வரூபமாகத் தெரிகிறது.

எங்களுக்கு 3 குழந்தைகள். இரண்டு பெண்கள்; ஒரு பிள்ளை. இரண்டாவது பெண்ணும், பிள்ளையும் இங்கே படிக்க வந்து தங்களுக்கு இஷ்டப்பட்டவரை கல்யாணம் செய்து கொண்டுவிட்டார்கள். பையன் ஒரு குஜராத்தியைப் பண்ணிக் கொண்டான். பெண், நம் தமிழ்நாட்டுப் பையன். ஆனால் வேறு ஜாதி. முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. அப்புறம் பேரன், பேத்தி என்று பிறக்க மனதைத் தேற்றிக்கொண்டு இங்கே மகனுடன் கொஞ்ச நாள், பெண்ணுடன் கொஞ்ச நாள் என்று ஒரு மாதம், ஒன்றரை மாதம் தங்கிவிட்டுப் போய்விடுவோம்.

இந்தத் தடவை என் கணவர் ரிடயர் ஆகி, கன்சல்டன்சி வேலையும் குறைத்துக்கொண்டதால் மூன்று மாதம் பிளான் செய்தோம். முதல் ஒரு மாதம் பிள்ளை வீட்டில் இருந்தோம். நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இருப்பே கொள்ளவில்லை. என்ன ஊர், என்ன மனிதர்கள். பைத்தியமே பிடித்துப் போய்விட்டது. உப்பு, சப்பில்லாத விஷயம்தான். அதைத்தான் எழுதுகிறேன். உப்பு, சப்பில்லாத சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது? தெரியாமல்தான் கேட்கிறேன், இங்கே எல்லோருமே இப்படியா இல்லை எங்களுக்கு வாய்க்கப்பட்ட குடும்பங்கள் இப்படியா என்றே புரியவில்லை. என் மருமகள் சாம்பார், மோர்க்குழம்பு, அப்பளம், கூட்டு, கறி என்றே பேச மாட்டாள். எல்லாமே கொழுப்பு, கொலஸ்ட்ரால், புரோட்டின் இப்படித்தான். ஒரு அட்டவணையைக் கையில் வைத்துக்கொண்டு, சதா "கேலரி" கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறாள். ஒரு சூட்கேஸ் நிறைய அவ்வளவு ஊறுகாயும், முறுக்கும், பட்சணமும் எடுத்துக்கொண்டு வந்தேன். பாவம், என் பையனுக்கு நப்பாசை. அவளுக்கு பயப்படுகிறான். ஒரு அப்பளம் பொரிக்க முடியவில்லை. என் கணவரின் நாக்கை நான் நன்றாக வளர்த்து விட்டிருக்கிறேன். நல்ல காரமாக வறுத்து அரைத்த சாம்பார், கத்திரிக்காய் வதக்கல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று. முதலில் எங்களுக்காவது பண்ணிக்கொள்ள அனுமதி கொடுத்தாள். அதற்கப்புறம் என் சாப்பாட்டைச் சாப்பிட்டு வளர்ந்த பையன் ஆயிற்றே, அவன் மிகவும் ஆசையாகக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்டுக்கொள்வான். அவள் ஒரு முழி முழிப்பாள். எனக்குப் பாவமாக இருக்கும். அதேபோல இந்தக் குழந்தைகள் நான் கொண்டு வந்த முறுக்கையும், சீடையையும், காலி பண்ணிவிட்டு சரியாகச் சாப்பிட அடம்பிடித்தால், அவர்களுக்கு ஆவேசத்துடன் ஒரு பிரசங்கம். எங்களைக் கோபிக்க முடிவதில்லை. அந்தக் கோபத்தை கணவன், பசங்களிடம் காட்டி, மீதியை அப்படியே குப்பையில் போட்டு விட்டாள். ஆனால் நானும் நம்ம ஊர் சமையலை நிறுத்திவிட்டேன். அவள் செய்த 'சாலட்', 'கீன்வா', 'மக்கி ரொட்டி' என்று சாப்பிட முயற்சி செய்தோம். முடியவில்லை. என் கணவர் "நீ எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள். என்னால் முடியாது. நான் இந்தியாவிற்குப் போய் விடுகிறேன்" என்று போராட்டம் செய்தார்.

'இவ்வளவு நாள் இருந்துவிட்டு பெண்ணைப் பார்க்காவிட்டால் எப்படி?' என்று சமாதானம் செய்து பெண் வீட்டிற்குக் கொஞ்சம் முன்னாலேயே கிளம்பி விட்டோம். பெண், மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் காரம் பிடிக்கும். முன்னால் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தபோது நான்தான் சமைப்பேன். குழந்தைகளும் பருப்பு, நெய் சாதம், தயிர் சாதம் என்று ஆசையாகச் சாப்பிடுவார்கள். இந்தத் தடவை போனபோது எனக்கு கல்சுரல் ஷாக். வீட்டுக்குள் நுழைந்த போதே மீன் மணம் வீசியது. போன வருடம் மாப்பிள்ளையின் அம்மா, அப்பா வந்து தங்கியபோது பிள்ளைக்குப் பிடித்தது போல சிக்கன், மட்டன், மீன் என்று அந்த அம்மாள் வெளுத்துக் கட்டியிருக்கிறாள். குழந்தைகளுக்கும் அந்தச் சுவை பிடித்துப் போயிருக்கிறது. என் பெண் இன்னும் வெஜிடேரியன் ஆகத்தான் இருக்கிறாள். அவள் எதுவும் செய்வதில்லை. ஆனால், இந்த ஊரில்தான் ஆண்கள் எல்லா வேலையும் செய்கிறார்களே, அவர் கிச்சனில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். என் பெண்ணோ, "அம்மா, நான் தனி பாத்திரம் தருகிறேன். நீங்கள் இருக்கும்வரை இவரும் 'சமைக்கவில்லை' என்று சொல்லியிருக்கிறார்" என்று என்னைச் சமாதானப்படுத்தினாள். ஆனால், வெளியிலிருந்து வாங்கி வந்த அந்த ஃப்ரைடு சிக்கனும், மக்டோனல்ட் ஹாம்பர்கரும் இவர்கள் வாங்கி, பாதி கடித்துச் சாப்பிட்டுவிட்டு, மீதியை ஒரே ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, எவ்வளவுதான் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனது கேட்பதில்லை. எதையும் சாப்பிடவும் பிடிக்கவில்லை. தினமும் இவரோடு போராட்டம் தான். 'உடனே கிளம்பு. பெண்ணாவது, பிள்ளையாவது. இவர்களை நம்பி நாம் இல்லை. கடைசிக் காலத்தில் ஒரு நல்ல சாப்பாட்டிற்கு வழியில்லாத வீடு எதுக்கு?' என்று சண்டை போடுகிறார். என் மாப்பிள்ளையும் நல்ல மாதிரிதான். ஆனால் ரொம்ப கண்டிஷன்ஸ் போடமுடியாது. தன்னால் முடிந்தவரை என் பெண்ணும் அப்பாவைச் சரிசெய்யப் பார்க்கிறாள். நான் கிடந்து திண்டாடுகிறேன். தினந்தினம் சூட்கேஸைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருக்கிறார். சில்லறை விஷயம் போலத்தான் தெரியும் பிறருக்கு. ஆனால் நரகவேதனை. நீங்கள் என்ன உபாயம் சொல்ல முடியும்?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

இது சில்லறை விஷயம் அல்ல. பில்லியன் பில்லியனாக டாலரில் சாப்பிடுவதற்குச் செலவு செய்கிறோம். நமக்குப் பழக்கமில்லாத வாசனையோ, ருசியோ நமக்கு பிடிப்பை ஏற்படுத்த முடியாத ஒரு mental conditioning-ஐ இருத்தி வைத்துக் கொள்கிறோம். இந்த வயதுக்கு மேல் இதை மாற்றிக் கொள்ளுங்கள் என்றாலும் முடியாது. ஆனால் compromise கண்டிப்பாக இருந்தால்தான், பேரன், பேத்திகள், மகன், மருமகள், மகள், மருமகன் போன்ற உறவுகளை நம்மால் அனுபவிக்க முடியும். எந்த ஒரு குடும்பத்தில் நாம் காலடி எடுத்து வைத்தாலும் அவர்களுடைய grand rules-க்கு நாம் கட்டுப்பட வேண்டும். நம் குழந்தைகளுக்கே குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு எது தேவையோ உசிதமோ அதைத்தான் செய்து கொள்வார்கள். நம்மால் கண்டிக்க முடியாது. நாம் கண்டுகொண்டு இங்கிதத்தோடு அணுகவேண்டும். அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லையென்றால், நாம் அவர்களுடன் தங்கும் நாட்களைக் குறைத்துக்கொண்டு நிறைவாக இருந்துவிட்டு வர வேண்டும். எதுவுமே புரியாமல், தெரியாமல் இருக்கும்போதுதான் குழப்பம், குறைபாடுகள் எல்லாம். புரிந்துவிட்டால், வழிகளை நாமே தேடிக் கொள்வோம். அவ்வப்போது நாக்கு கேட்கும் சுவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், மனிதர்களுக்கு frustration வரத்தான் செய்யும். நாளடைவில் பாசத்தின் ருசிக்கு முன்னால் உணவின் ருசி அடிபட்டுப் போய்விடும். நிரந்தரமாகத் தங்கும்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகள் உறவில் பெரிய பள்ளங்களை ஏற்படுத்தும். தற்காலிக வருகையில் தற்காலிகப் பிரச்சனைதான் இது. உங்கள் கணவர் சூட்கேஸ் மூடித் திறப்பது அந்தச் சமயத்தில் ஏற்படும் ஒரு எரிச்சல்தானே தவிர, இருக்கும் நாளை இங்கே கழித்து விட்டுத்தான் போவீர்கள். என்னதான் மனதுக்குள் இனி அமெரிக்காவுக்கு வரப்போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டாலும், அடுத்த ஆண்டு 'அம்மா' என்று பாசக்குரல்கள் அழைக்கும்போது, காரசாரப் பிரச்சனைகள் மறந்து போய், மறுபடியும் பிரயாணத்திற்கு தயாராகி விடுவோம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com