கம்பதாசன்
கவிதை, சிறுகதை, நாடகம், நடிப்பு, திரைப்பாடல், இசை எனக் கலையின் பல தளங்களிலும் சிறப்பான பங்களிப்பைத் தந்தவர் கம்பதாசன். இவர் திண்டிவனம் அருகே உள்ள நாகலாபுரத்தில் சுப்பராயலு பத்தர்-பாலாம்பாள் தம்பதியினருக்கு செப்டம்பர் 15, 1916 அன்று பிறந்தார். இயற்பெயர் அப்பாவு. தந்தை பொம்மைகள் செய்து விற்பவர். வறுமைச் சூழலால் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. கம்பதாசனின் பள்ளிப்படிப்பு துவக்கக் கல்வியோடு நின்றுபோனது. தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்தார். அதேசமயம் தனது தனிப்பட்ட ஆர்வத்தால் சித்தர் இலக்கியம், கோவை, உலா, அந்தாதி போன்ற இலக்கிய நூல்களைப் பயின்றார். தமிழ் மொழியில் தேர்ந்தார். பாடும் திறனும், குரல் வளமும், தோற்றப் பொலிவும் இவருக்கு இருந்தது. அதனால் நாடகங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதுவதோடு, நடிக்கவும் வாய்ப்புக்கள் வந்தன. 'வள்ளி திருமணம்', 'அரிச்சந்திர மயான காண்டம்', 'திரௌபதி வஸ்திராபகரணம்', 'பவளக்கொடி' போன்ற நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றார். நாடகத்துக்காக சி.எஸ். ராஜப்பா என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். தானே பாடல்கள் எழுதி, இசையமைத்துப் பாடவும் செய்தார். ஹார்மோனியம் வாசிப்பதிலும் தேர்ந்தவராக இருந்தார்.

சென்னையில் திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. 'திரௌபதி வஸ்திராபகரணம்', 'சீனிவாச கல்யாணம்' போன்ற படங்களில் நடித்தார். தமிழ்மீது கொண்ட காதலால் ஓய்வு நேரத்தில் மேலும் தமிழ் கற்றார். கம்பன் கவிதைகளில் திளைத்தார். கம்பன்மீது கொண்ட பற்றால் கம்பதாசன் ஆனார். பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பயின்று தாமும் அதுபோல் கவிதைகள், பாடல்கள் எழுதத் தலைப்பட்டார். திரைப்படப் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. 1940ல் வெளியான 'வாமனாவதாரம்' படத்தில் இவரது பாடல் முதன்முதலாக இடம் பெற்றது. தொடர்ந்து 'மகாமாயா', 'ஞானசௌந்தரி', 'மங்கையர்க்கரசி', 'சாலிவாகனன்', 'லைலா மஜ்னு', 'வனசுந்தரி', 'சியாமளா', 'அமரதீபம் எனப் பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. பி.யு. சின்னப்பாவுக்கு இவர் எழுதிய பாடல்கள் குறிப்பிடத்தக்கன. தமிழில் மறுமலர்ச்சிப் பாடல்களை எழுதிய முன்னோடி என்று கம்பதாசனைச் சொல்லலாம். பக்திப் பாடல்களும், பஜனைப் பாடல்களும் அதிகம் இடம்பெற்று வந்த அக்காலகட்டத்தில் சமூக நீதியை வலியுறுத்தும் பல பாடல்களை எழுதிப் புகழ்பெற்றார். அக்காலத்திலேயே பாடல் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கியவர் கவிஞர் கம்பதாசன். 'வானரதம்' என்ற படத்தில் இவர் எழுதிய பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருக்கிறார்.

"பாரதி, பாரதிதாசன், கம்பதாசன் முவருமே பிறவிக் கவிஞர்கள்" என்பார் வ.ரா. "என் கவிதை ஆர்வத்தை ஆரம்ப காலத்தில் வளர்த்தவர்களில் மிக முக்கியமானவர் கம்பதாசன்" என்கிறார் கண்ணதாசன் தனது வனவாசத்தில். "கவிஞர்களிலேயே மிடுக்கும் ஆற்றலும் அமைந்த ஒரு கவி என்றால் அது கம்பதாசன்தான். வங்கக்கவி ஹரீந்தரநாத் சட்டோபாத்யாயா அவர்களால் மிகவும் புகழப்பட்டவர்" என்கிறார், எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். "சூழலுக்கேற்பப் புனையப்படுவதுதான் திரைப்பாடல் என்ற போதும் அதில் தனக்கான முத்திரைகளை, முகவரிகளைப் பொறித்து விடுவதில் கைதேர்ந்தவர் கம்பதாசன்" என்கிறார் கவிஞர் யுகபாரதி.

ஆனால் கம்பதாசனை வெறும் திரைப்பாடலாசிரியர் என்ற சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி அவர் கவிஞராக, நாடக ஆசிரியராக, சிறுகதை ஆசிரியராக தனது திறனை நிரூபித்திருக்கிறார். கவிதைகளாகட்டும், திரைப்பாடல்களாகட்டும், சிறுகதைகளாகட்டும் சந்த, உவமைச் சிறப்போடு ஏழைகளின் அவல வாழ்வையும், அவர்கள் எதிர்கொள்ளும் சோகத்தையும் முன்வைத்துப் பாடிய முன்னோடி அவர். பட்டுக்கோட்டை கலியாண சுந்தரத்திற்கும் கண்ணதாசனுக்கும் முன்னோடி கம்பதாசன்தான் என்றால் அது மிகையல்ல.

"கனவு" என்னும் கவிதையில் வானத்தை,

"செக்கச் சிவந்தது - வானம்
செக்கச் சிவந்தது - ஏழை
விக்கிவிடும் மூச்சில் வீசும் நெருப்பைப் போல்
செக்கச் சிவந்தது"


என்று ஏழைகளின் அவலத்தை உவமிக்கிறார். அதே கவிதையில்,

"வழிந்தது காலில்
இரத்தம் வழிந்தது - உழவர்
கருத்த விழியில் கசிந்தூறும் நீரைப்போல்
இரத்தம் வழிந்தது


என்று, என்றும் மாறா உழவர்களின் வாழ்வியல் அவலத்தைச் சுட்டுகிறார். கம்பதாசன் சோஷலிசத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார். அதைத் தமது படைப்புகளில் எதிரொலித்தார்.

'கம்' என்றால் அழகு; 'பா' என்றால் பாட்டு ஆகவே அழகான பாட்டின் தாசன் நான் என்பதாக தன் பெயருக்கு விளக்கமளித்துக் கொண்ட கம்பதாசன், அதற்கேற்றவாறு அழகழகான கவிதைகளைத் தந்திருக்கிறார். தன் கவிதைபற்றி அவர் "கம்பதாசன் கவிதைகள்" என்ற தன் நூலின் முன்னுரையில்,

"சின்னஞ் சிறுகவிதை - மலர்மேல்
சிந்தும் பனித்துளிபோல்
சின்னஞ் சிறுகவிதை - உழவன்
சிந்தும் விதைநெல் போல்
சின்னஞ் சிறுகவிதை - அகலின்
தீப ஒளியதுபோல்
சின்னஞ் சிறுகவிதை - குழந்தை
செவ்விதழ் முத்தம் போல்"


என்று வகைப்படுத்துகிறார்.

கம்பதாசன் சுமார் நானூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். 'விதியின் விழிப்பு', 'முதல் முத்தம்', 'அருணோதயம்', 'அவளும் நானும்', 'பாட்டு முடியுமுன்னே', 'தொழிலாளி', 'புதுக்குரல்' போன்றவை இவரது கவிதைத் தொகுப்புகள். முதல் முத்தத்திற்கு பாராட்டி வாழ்த்துரை வழங்கியிருப்பவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். கவிதைகளோடு 'காவியம்' என்ற தலைப்பில் நெடுங்கவிதைகளையும் எழுதியிருக்கிறார். 'இரத்த ஓவியம்', 'காதலும் கண்ணீரும்', 'புத்தன் புனர்ஜென்மம்', 'சாவுக்கு விருந்து' போன்றவை குறிப்பிடத்தக்கன. இவரது கவிதைகளில் முந்நூறிற்கும் மேற்பட்டவற்றைத் தொகுத்து 'கம்பதாசன் கவிதைகள்' என்ற பெயரில் புலியூர் கேசிகன் வெளியிட்டுள்ளார். 'ஆதிகவி', 'சிற்பி' என்பன கம்பதாசன் எழுதிய நாடக நூல்களாகும். இவரது சிறுகதைகள் 'முத்துச் சிமிக்கி' என்ற பெயரில் தொகுக்கப் பட்டுள்ளன.

கம்பதாசன் சுயமுயற்சியில் கற்று ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு எனப் பல மொழிகள் அறிந்தவராக இருந்தார். அது பிற மொழிப்படங்களை தமிழில் மொழியாக்கம் செய்ய அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. கதை-வசனத்திலும் தேர்ந்தவர் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழ்ப் பணிக்காக இவருக்குத் தமிழக அரசின் 'கலைமாமணி' விருது கிடைத்தது.

மலையாளக் கவிஞர் வள்ளத்தோள், தமிழ் இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் ஆகியோர் கம்பதாசனின் நெருங்கிய நண்பர்கள். வள்ளத்தோளின் மகளும், நடனக் கலைஞருமான சித்திரலேகாவை இவர் மணம் செய்துகொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை இனிக்கவில்லை. மணம் முறிந்தது. அடுத்தடுத்த மண முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அதிகம் சம்பாதித்தும் அதைச் சேர்த்து வைக்கும் எண்ணமில்லாததாலும், தான் ஈட்டிய பொருளின் பெரும்பகுதியை ஏழைகளுக்கும், நண்பர்களுக்கும் அளித்து உதவியதாலும் ஈட்டியதை இழந்தார். மதுவுக்கு அடிமையானார். காசநோயால் உடல்நலம் சீர்கெட்ட இவர், மே 23, 1973 அன்று சென்னையில் காலமானார்.

இவர் மறைவுக்குப் பின் இவரது கவிதைகளின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்த சிலோன் விஜயேந்திரன், இவர் கவிதைகளையும் வாழ்க்கைக் குறிப்புகளையும் தொகுத்து 'கம்பதாசனின் கவிதைத் திரட்டு' என்ற பெயரில் ஒரு ஆய்வு நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்)

"கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே"


நௌஷத் இசையமைப்பில் பி. சுசீலா பாடிய இந்தப் பாடலை எழுதியவர் கம்பதாசன்தான். இதுபோன்ற பாடல்களும் இசையும் இருக்கும்வரை கம்பதாசனின் புகழும் நிலைத்திருக்கும்.

அரவிந்த்

© TamilOnline.com