மழை வெள்ளமும், நிவாரண அரசியலும்
மும்பை, கொல்கத்தா, பெங்களூர் வரிசையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னை மக்களையும் திக்குமுக்காட வைத்தது. ஒரே நாளில் 27 செ.மீ. மழை பதிவாகிச் சென்னை நகரம் ஏரியாகக் காட்சியளித்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது மட்டு மல்லாமல் அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

சென்னையில் மட்டும், மழை தொடங்கிய சில நாட்களுக்குள் சுமார் 1,078 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நான்கு வருடங்களாகத் தொடர் வறட்சியையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் சந்தித்து வந்த தமிழகத்தில் இம்முறை வடகிழக்குப் பருவமழை வரலாறு காணாத மழையாக மாறிவிட்டது.

சென்னையின் முக்கிய சாலைகள், சுரங்கப்பாதைகள் அனைத்திலும் வெள்ள நீர் தேங்கியது. குடியிருப்புகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கியமாக வடசென்னை அதிகளவில் பாதிக்கப்பட்டது. அதுபோல் புறநகர்ப் பகுதிகளான வேளச் சேரி, மடிப்பாக்கம், மதுரவாயல், அம்பத்தூர், பூந்தமல்லி என்று பல இடங்கள் மழை யினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.

வெள்ளம் புகுந்த வீடுகளில் தவித்த மக்களை மீட்கச் சென்னை மாநகராட்சி இயந்திரமும், மீட்புப் படையினரும் துரிதமாகச் செயல்பட்டனர். அதுமட்டு மல்லாமல் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் அமைச்சர் களுடன் முதல்வர் ஜெயலலிதா உடனடி யாகப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முழுவீச்சில் நடைபெற வழி வகைசெய்தார்.

மூன்று ஆண்டுகாலத் தொடர் வறட்சி யினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் இம்முறை மேட்டூர் அணை தாமதமாக திறக்கப் பட்டாலும் ஒரு போக சம்பா சாகுபடி கிடைக்கும் என்று எண்ணிய விவசாயி களுக்கு காவிரி டெல்டா மற்றும் கர்நாடகா வில் பெய்த கனமழை பெருத்த அதிர்ச்சியை அளித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியது. பலத்த மழையின் காரணமாகக் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து மிக உபரி நீரை ஏராளமாகத் திறந்து விட்டது. போதாததற்குத் தமிழக நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையும் சேர்ந்து 2.25 லட்சம் கனஅடி தண்ணீர் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த வெள்ளத்தினால் நிறையக் கிராமங்களும், விளைநிலங்களும் நீரில் மூழ்கின.

காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் நகருக்குப் பெரிய அபாயம் ஏற்பட்டது. ஆனால் கூடுதலாகத் திறந்துவிடப்பட்ட தண்ணீரை திருப்பிவிட்டதால் ஸ்ரீரங்கம் தப்பியது.

இதற்கிடையில் சென்னையில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தி னருக்கும் நிவாரணமாகத் தலா 2,000 ரூபாய் ரொக்கம், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அத்தோடு சாலைகள், பாசன அமைப்புகள், ஏரிகள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றை உடனடியாகப் பழுது பார்க்க 50 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

நிவாரண நிதி, பொருள்கள் வழங்குவதில் பல்வேறு இடங்களில் குளறுபடிகள் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரணம் கேட்டுப் பொது மக்கள் சென்னை நகரின் பல்வேறு சாலைகளில் மறியல் செய்த வண்ணம் இருப்பது அன்றாடச் செய்தியாகிவிட்டது. இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் நிவாரண நிதி பெறுவதற்காக வந்திருந்த பெண்களில் ஆறுபேர் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தது துரதிஷ்டவசமானது.

அரசு அதிகாரிகளின் அலட்சியமும், நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறு படிகளுமே இத்தகைய நிகழ்வுகளுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் நிவாரணம் வழங்குவதற்கு அரசு அனைத்து கட்சிக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதற்கிடையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ஒரு லட்சம் வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒருவர் விடாமல் நிவாரண உதவி கிடைக்கும் என்று முதல்வர் மறுபடியும் உறுதிகூறினார்.

பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய உடனடியாக மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் தேசியப் பேரிடர் நிதியில் இருந்து ரூ. 1,120 கோடி உதவியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டி.எஸ். மிஸ்ரா தலைமையிலான நடுவண் குழு ஒன்று தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வந்தது. தமது அறிக்கை இன்னும் 10 நாட்களுக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று மிஸ்ரா தெரிவித்தார்.

இயற்கைப் பேரிடர்களால் கணக்கற்ற மக்கள் தவிக்கும் போதாவது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தமது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு, கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com