சான் டியகோ: திருக்குறள் போட்டி
ஏப்ரல் 26, 2014 அன்று தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, சான் டியகோ தமிழ் அகாடமியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் போட்டி கார்மல் மவுண்டென் ரிக்ரியேஷன் சென்டரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். பிரபாகர், டாக்டர். சோமநாதன், திருமதி. இந்திராணி சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெற்றோர்களும் குழந்தைகளுமாய் நூறு பேர் வரை விழாவுக்கு வந்திருந்தனர். மூன்று வயதிலிருந்து பதின்மூன்று வயதிற்குட்பட்ட சுமார் நாற்பது குழந்தைகள் திருக்குறளை ஆர்வத்துடன் ஒப்பித்தனர். அதிகபட்சமாக நாற்பது குறள்கள் வரை ஒப்பித்ததோடு, சில குறள்களைத் தமிழில் விளக்கினர். பங்கேற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழும், பரிசுகளும் அளிக்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் பிரபாகர் தமது உரையில் தமிழின் தொன்மையையும் தமிழர்கள் உலகின் எல்லா மூலைகளிலும் பரவி இருப்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னார். தமிழ் கற்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். சோமநாதன் தமது உரையில் பெற்றோர்கள் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழையும், தமிழ்க் கலாசாரத்தையும் தம் குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

சான் டியகோ தமிழ் அகாடமி தன்னார்வலர்களால் நடத்தப்படும், லாப நோக்கற்ற அமைப்பு. குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுப்பது இதன் முதன்மை நோக்கம். வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6:45 மணி முதல் 8:15 மணி வரை, SunDance Elementary School, சான் டியகோவில் குழந்தைகளுக்கு ப்ரீ-ஸ்கூல் முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.

மேலதிகத் தகவல்களுக்கு
வலையகம்: tamilforkids.com/tamilschool/index.php

© TamilOnline.com