ஏப்ரல் 26 அன்று லிவர்மோர் சிவா விஷ்ணு கோயிலுக்கு நிதி திரட்டும் வகையில் இந்து சமயம் மற்றும் கலாசாரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த 'ராகமாலிகா' கர்நாடக இசை நிகழ்ச்சி, லிவர்மோர் சிவ-விஷ்ணு கோயில் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருமதி. சாந்தி ஸ்ரீராம், திரு. ஸ்ரீராம் பிரம்மானந்தம் ஆகியோர் நடத்திவரும் 'நாதாலயா' இசைப்பள்ளி மாணவ மாணவியரும், திரு. ஸ்ரீகாந்த் சாரி நடத்தி வரும் 'நாத நிதி' மாணவியரும் பங்கேற்று இசை விருந்தளித்தனர்.
ஆர்த்தி வெங்கட், ப்ரியா குண்டவஜலா, ப்ரணவி சாமர்த்தி, வைகுந்த ஜெகன்னாதன் ஆகியோர் பாடினர்; சுபா ஜகன்னாதா, ஓம் ஸ்ரீ பரத் ஆகியோர் வீணை இசை வழங்கினர்; அருண் ஸ்ரீராம், சுவாமிநாதன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மிருதங்கம் வாசித்தனர். நிகழ்ச்சியில் முத்துசாமி தீக்ஷிதர், ஆதி சங்கரர், சுவாமி தயானந்த சரஸ்வதி, ஸ்வாதித் திருநாள் மகாராஜா போன்றவர்கள் இயற்றிய கீர்த்தனைகள் பாடப்பெற்றன. ராகமாலிகா பற்றிய விவரங்கள், இசை விவரக் குறிப்புகள் போன்றவற்றை மல்டிமீடியா மூலம் வழங்கியது சுவையாக இருந்தது. நிகழ்ச்சியின் மூலம் 5000 டாலருக்கும் மேலாக நிதி திரட்டி வழங்கப்பட்டது.
செய்திக் குறிப்பிலிருந்து... |