NETS: சித்திரை விழா
மே 2, 2014 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் சித்திரை விழாவை நாஷுவா சௌத் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. நெட்ஸ் தலைவர் திரு. இராஜ் வேல்முருகன் வரவேற்றார். இதில், சன்டிவி புகழ் திரு. ராஜா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் தலைமையில் "வாழ்க்கைக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பது உறவா? நட்பா?" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம், பாஸ்டன் வாழ் நாடகக் குழுவினரின் சிறப்பு நாடகம், பாஸ்டன் இசைக் குயில்களின் இசை நிகழ்ச்சி இவற்றோடு கோலப் போட்டியும், முதல்முறையாக நெட்ஸ் சந்தையும் இடம்பெற்றது.

'கரண்டி பிடிக்கும் கம்ப்யூடர் கனவான்கள்' என்ற நகைச்சுவை நாடகத்தில் தொடங்கி, தொடர்ந்தது இசைநாடகம். அடுத்து வந்த இசைக் குயில்களின் இன்னிசையில் பாடல்களின் தேர்வு மிக அருமை.

பட்டிமன்றத்துக்காகத் திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் மேடையேறிய போது கைதட்டல் விண்ணைப் பிளந்தது. உறவு அணி (பூங்கொடி, கோபிநாத், பமிலா, மாலா) மற்றும் நட்பு அணி (நாராயணன், அருண், ரமேஷ், வேல்முருகன்) ஒவ்வொருவராகக் களமிறங்க ஆரம்பித்தது சரவெடி. தங்கள் வாதங்களை இவர்கள் அள்ளி வைக்க, அதை நடுவர்கள் கிண்டல் செய்ய, சுவாரசியம் கூடியது. இறுதியில் இரு நடுவர்களும் 'உறவு' மற்றும் 'நட்பின்' முக்கியத்துவத்தை அழகாக கூறி நல்ல தீர்ப்பு ஒன்றை அளித்தனர்.

சந்தையில் இருந்த ஃபோட்டோ ஸ்டூடியோ, டீக்கடை ஆகியவற்றில் பார்வையாளர்கள் குடும்பத்தோடு ஃபோட்டோ எடுத்தும், நம்ம ஊரு சாயலில் டீ, வடை, பஜ்ஜி, சமோசா ரசித்து உண்டும் சித்திரை விழாவை நிறைவு செய்தனர். திரு. கமலநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு, நன்றியுரையும் வழங்கினார்.

பமிலா,
பாஸ்டன்

© TamilOnline.com