டெட்ராயிட்: 'ஆண்டாளை அறியாயோ'
மே 4, 2014 அன்று டெட்ராயிட் பெருநகரிலுள்ள பாலாஜி வேத மையத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு 'ஆண்டாளை அறியாயோ' என்ற நாட்டிய நாடகம் அரங்கேறியது. கடந்த 35 ஆண்டுகளாக, பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, சரித்திர, புராண நாடகங்களை இயக்கி நடித்துள்ள டாக்டர். வெங்கடேசன், நடனக்கலையில் அனுபவமிக்க திருமதி. தேவிகா ராகவனுடன் இணைந்து இதனை அளித்தார்.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் உலகுக்களித்த கோதைப்பிராட்டி ஆண்டாளின் வாழ்க்கையை இசையோடு அளித்தது இந்த நடன நாடகம். விஷ்ணுசித்தராக நடித்ததுடன், கதை வசனம் எழுதி, தயாரித்து, இயக்கியிருந்தார் திரு. வெங்கடேசன். ஆண்டாளாக நடித்த சிதாராவும் அவரது தமக்கை சஞ்சனாவும் சிறப்பாக நடித்தும், ஆடியும், பார்வையாளர் மனதில் இடம்பெற்றனர்.

இவர்களுடன் நடித்த, சதீஷ், ஆனந்த், தேசிகன், நிரஞ்சன், அக்கூர் மற்றும் பிறரும் தத்தம் பங்கைச் சிறப்பாகச் செய்தனர். இசை, ஒலியமைப்பு, ஒளியமைப்பு ஆகியவை நாடகத்திற்கு மெருகேற்றின. இவற்றில் சிவா மற்றும் சதீஷ் கைவண்ணம் போற்றத்தக்கது. இம்முயற்சிக்கு ஆணிவேராக இருந்து, ஒருங்கிணைத்த திருமதி. அம்புஜா வெங்கடேசன் அவர்களின் உழைப்பு பாராட்டத் தக்கது. பாலாஜி வேத மையத்திற்கு உதவிய இந்த நடன நாடகம், மனமகிழ்வும், நிறைவும் தந்த அதே சமயத்தில் பக்திக்கும், தமிழுக்கும் செழுமை தந்தது.

டாக்டர். ராஜ் ராஜாராமன்

© TamilOnline.com