அரிசோனா: ஸ்ரீ மகாகணபதி ஆலய கும்பாபிஷேகம்
2014 மே 9 முதல் 11ம் தேதி வரை அரிசோனா ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. திருக்கோவில் அமைந்துள்ள முகவரி: 51293 W. Teel Road, Maricopa City, AZ 85139. தமிழக அரசு விருது பெற்ற சிற்ப கலா நிபுணர் பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி அவர்களின் மேற்பார்வையில் ஆகம வாஸ்து நெறிப்படி நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தின் மூன்று கட்டங்கள் முழுமையடைந்துள்ளன.

ஸ்ரீ தங்கம் பட்டர் அவர்கள் தலைமையில், ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள், ஸ்ரீ சத்யநாராயண சுவாமி, ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஆகிய விக்கிரகங்களுக்குப் பிராணப் பிரதிஷ்டையும், விமானங்களுக்குக் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது.

சூரி குணாலா-சுஜாதா குணாலா தம்பதிகள் கோவிலுக்கு நிலத்தை அன்பளிப்பாகக் கொடுக்க, சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் மகாகணபதி சிலையை வழங்கினார். சத்குரு போதிநாத வேலன் சுவாமி கும்பாபிஷேகத்திற்கு விஜயம் செய்து கௌரவித்தார். திருமிகு. ரமேஷ் நடராஜன், மௌளி சுப்பிரமணியன் ஆகியோருடன் பல தன்னார்வத் தொண்டர்களின் பக்திமிக்க பணியினால் இந்த அற்புத ஆலயம் சாத்தியமாயிற்று.

தொடர்புகொள்ள: தொலைபேசி - 520-568-9881

ஹரிஹர சுப்பையா,
அரிசோனா

© TamilOnline.com