மே 10, 2014 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த ஏழாவது ஆண்டு வில்லாபார்க் புனித அலெக்சாண்டர் பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு மாணாக்கர்களின்
எண்ணிக்கை மிகுதியாக இருந்தமையால் காலை, பிற்பகல் என இரு பிரிவுகளாக நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்வின் தொடக்கமாக முதல் பகுதி தமிழ்ப்பள்ளிகளின் மாணாக்கரின் திருக்குறள் மற்றும் தமிழ்தாய் வாழ்த்துக்கள் இசைக்கப்பட்டன. பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாபு 2009 மே 17 அன்று
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தோருக்கு நினைவுகூர்ந்து, தமிழுக்கும், தமிழினத்திற்கும் உயிரீந்தோர்க்கு நன்றி கூறுமுகமாக 2 நிமிட அமைதி காத்தபின் வரவேற்புரை நிகழ்த்தினார். காலை நேர நிகழ்வுகளை கெர்ணி,
டெசுபிளெய்ன்சு, டேரியன், மன்ஸ்டர், மில்வாக்கி பள்ளிகள் தவிர நேப்பர்வில் பள்ளி ஒன்றில் பயிலும் மாணாக்கர்கள் தமிழ்மொழி, கலசாரம் சார்ந்த நிகழ்வுகளைக் குறிக்கும் நிகழ்ச்சிகளை வழங்கினர்.
பிற்பகல் இரண்டாம் பகுதி நேப்பர்வில், சாம்பர்க் பள்ளிகள் நாட்டுப்புறப் பாடல்கள், 'ஒரு நாள் பெற்றோர்கள்' நாடகம் ஆகியன தந்து மகிழ்வித்தனர். திருக்குறள் கூறும் திறனில் 721 குறள்களைப் பிழையின்றிக்
கூறி, குறள் ஒன்றிற்கு ஒரு டாலர் வீதம் பெற்றார் 12 வயது செல்வன். நித்தின் சுப்பிரமணி. பத்து வயதிற்கு கீழமைந்த குழுவில் 655 குறள்களைப் பிழையறக்கூறி முதல் பரிசு பெற்றார் செல்வன். உரோகித்.
நடிப்பில் சொல்கண்டு கூறல், எழுத்தைச் சொல், சொற்றொடர் என மாற்றுதல், சொல்லைத் தொடருதல், குறள் அதிகாரப் பொருளுணர்ந்து சிறுகதை வடித்தல், பழமொழி காணல் எனப் பலவற்றிலும் பங்கேற்று
மாணாக்கர்கள் பரிசு பெற்றனர்.
இப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் தன்னார்வ ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றிக் காணிக்கைகள் அளிக்கப்பட்டன. நன்றியுரையோடு ஆண்டு நிகழ்வு நிறைவெய்தியது.
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய்ஸ் |