மரு. வரலட்சுமி நிரஞ்சன்: 'வாழ்க்கை ஒரு பயணம்'
இது சிந்திக்க வைக்கும் கவித்துளிகளின் தொகுப்பு. இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்; மருத்துவர்; தமிழ் ஆர்வலர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். தொழிலையும் குடும்பத்தையும் கவனிக்க நேரம் ஒரு அரிய பொருளாக இருக்கும் நிலையிலும் இந்தக் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். அதுவுமில்லாமல் தமிழ்நாடு அறக்கட்டளை குடையின் கீழ் செயல்படும் 'அன்பாலயம்' என்ற குழந்தைகள் அமைப்பிற்கு இந்த நூல் ஈட்டும் நிதியைக் காணிக்கையாக்க முன்வந்துள்ளார். பாராட்டத்தக்க விஷயம்.

கவிதைகள், உறவுகள், உணர்வுகள், உருவம், உள்ளம், உயிர் என்று தனித்தனி தலைப்புகளின் கீழ் வகுக்கப்பட்டிருக்கின்றன. புதுக்கவிதை பாணி. யாருக்கும் எளிதாகப் புரியும். யதார்த்தமாக இருக்கிறது. வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் ஒளியின் பார்வை இருக்கிறது. நமக்குள்ளே தோன்றும் முரண்பாடுகளைக் கண்டு கொள்ளுகிறது.

"தனித்து இருந்தால் தவிக்கும் மானிடம்
துணையுடன் இருந்தால் தனிமை தேடும்"


சில கவிதைகளில் பல பரிமாணங்களிலிருந்து அர்த்தம் தேட வாய்ப்பிருக்கிறது. வலியைப் பற்றி எழுதும்போது

"வலி அறிவதே வாழ்வதின் அடையாளம்
வேதனை உணர்வதே உயிரின் ஆதாரம்"


என்கிறார்.

பிடித்த உருவம் என்ற கவிதையில்,

"என்னில் இருக்கும் உன்னைப் பிடிக்கும்
உன்னைப் பிடித்த என்னைப் பிடிக்கும்"


பல பார்வைகளிலிருந்து இந்த வரிகளை அலசலாம்.

தமிழுக்குச் சேவை - தமிழ் ஆர்வலர்கள் அதுவும் இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் நல்ல கலாசாரம் எந்த மண்ணிலும் ஆழமாக வேர்களை உருவாக்கும்.

இந்தப் புத்தகத்தின் விலை $10 என்று போட்டிருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் தென்றலின் மூலமோ, நேரடியாக மரு. வரலட்சுமி நிரஞ்சனுடன் தொடர்பு கொண்டோ பிரதியைப் பெற்றுக்கொள்ளலாம். கவிதைகளை ருசிக்கலாம்.

ஒரு பத்து டாலர், 'அன்பாலயத்தில்' மாற்றுத்திறன் படைத்த ஒரு கடவுளின் குழந்தைக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்கிறது என்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கத்தான் செய்யும்.

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com