எங்கள் ஊரில் நடந்த திருவிழா அது. என்னை அம்மா பட்டாடை உடுத்தி அலங்கரித்து அனுப்பினாள். கோயிலுக்குச் சென்று என்னை மறந்து நான் இறைவனை நினைத்திருந்த அந்த வேளையில் என் வேட்டியை யாரோ பற்றி இழுப்பது போல இருந்தது. நான் யார் என்று திரும்பிப் பார்த்தேன். என் நண்பர் என் வேட்டியைப் பிடித்து அதன் மழமழப்பைக் கைகளால் சுவைத்துக் கொண்டிருந்தார். தீப ஆராதனையும் முடிந்தது. திரும்பினேன். நண்பர் தன் மாமாவிடம், "மாமா, எனக்கு இதுபோல வேட்டி வாங்கிக் கொடுங்கள்" என்று கேட்டார். மாமாவும் ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தவர், அவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆகவே நண்பர் சற்று ஆத்திரமடைந்து அதிகமாகக் கூச்சலிட்டுத் தனக்கு அது போன்ற வேட்டி வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பாவம் என்னைப் போன்ற சிறுவனான அவரும் அக்கோயிலை, வழிபாட்டை மறந்து அழகிய வேட்டியில் ஆசை கொண்டது தவறு அல்லவே, என்றாலும் வழிபாட்டுக்கு இடையில் அவர் செய்த தொந்தரவு தாளாமல் அவர் மாமா அவர் முதுகில் ஓங்கி இரண்டு அறை அறைந்தார். நண்பர் மேலும் ஓவென்று அழுது மீண்டும் தனக்கு அது போன்ற வேட்டி வேண்டும் என்று கூச்சலிட்டு அழுதார்.
ஐயர் திரு நீறு அளித்தார். அனைவரும் பெற்றுக் கொண்டனர். நண்பர் மட்டும் விசித்து விசித்து அழுது கொண்டே 'அது போல வேட்டி வேண்டும்' என்று முனகிக் கொண்டிருந்தார். அவர் மாமா அவரைத் தனியே அழைத்து "அவர்கள்தாம் பணக்காரர்கள். அதுபோன்ற உயர்ந்த துணிகளை எல்லாம் வாங்க முடியும். நாம் அதற்கு எங்கே போவது?" என்று சமாதானப்படுத்தினார் என்று பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆகா! இந்தப் பிஞ்சு உள்ளங்களில்தாம் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டை எப்படித்தான் தூவுகிறார்களோ என்று நினைத்தேன். நாங்கள் எங்கள் ஊரில் அப்படி ஒன்றும் செல்வந்தர்கள் அல்லர். எனது அன்னையார் சற்றுத் தாராளமாகச் செலவு செய்து சிறக்க வாழ வேண்டும் என நினைக்கிறவர்கள்; அவ்வளவுதான். அது மற்றவர்களுக்கு வேறுவிதமாகப் பட்டது.
அன்றுமுதல் நான் உயர்ந்த ஆடை அணிகளை உடுப்பதை விரும்பவில்லை. இறைவன் திருமுன்பு என் நண்பர் எனக்குக் காட்டிய பாடம் மனதில் நிலைபெற்று விட்டது. அன்றுதொட்டு இன்றுவரை பட்டாடைகளையும், படாடோப வாழ்வையும் விரும்பாது கூடியவரை எளிய வாழ்விலே வாழ்ந்து வருவதாக எண்ணியே என் நாட்களைக் கழிக்கின்றேன். என் வாழ்வின் திருப்புமையங்களுள் அது ஒன்று என்று அன்றைக்கு என்னால் எண்ண முடியாவிட்டாலும், அறிவறிந்த பிறகு நான் அவ்வாறுதான் எண்ணி அமைந்தேன் என்பது உண்மை.
- பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் எழுதிய 'இளமையின் நினைவுகள்' நூலிலிருந்து... |