சில ஆண்டுகளுக்கு முன், சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ள காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், காஞ்சி பரமாச்சார்யாள் முகாமிட்டிருந்தார். என் தங்கை மீனாளுக்கு, உடல் நலத்தோடு, மனநலமும் குன்றியிருந்தது. சரிவரச் சாப்பிட மாட்டாள்; பிரமை பிடித்த மாதிரி இருப்பாள். அவளை அழைத்துக் கொண்டு, எங்கள் தாயார், ஆச்சி மற்றும் பிள்ளைகள் எல்லாரும் சென்றோம்.
பரமாச்சார்யாளைத் தரிசித்து, தங்கை மீனாளின் உடல்நலம் பற்றி சொன்னேன்.
எல்லாவற்றையும் கேட்டு, அவளையும், என்னையும் பார்த்து, "அவளைத் தினமும் திருமுருகாற்றுப்படை படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாயிடும்..." என்றார்.
"அவளுக்கு அவ்வளவாகப் படிக்கத் தெரியாதே...." என்று, மெல்ல சுவாமிகளிடம் சொன்னேன்.
"அதனால் என்ன... பாதகமில்லை. தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு. இல்லேன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே... திருமுருகாற்றுப்படை அவள் காதில விழுந்தா போதும்..." என்றார்.
பரமாச்சார்யாள் சொன்னவாறே, தங்கை மீனாளை, திருமுருகாற்றுப்படை நூலைப் படித்துவரச் சொன்னோம். ஒரே மாதத்தில், அவள் பூரண குணம் அடைந்தாள். மனக்கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது, தெய்வத்தின் திருவருள்தான்.
- வானதி திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய, 'வெற்றிப் படிகள்' நூலிலிருந்து. |