வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: பருந்துப் பார்வை
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA) நாடுதழுவிய தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பாகும். தமிழ்ச் சங்கங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பேராளார்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்டு பேரவை செயல்படுகிறது. 1987ம் ஆண்டு ஃபிலடெல்ஃபியா மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், ஐந்து தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து இந்தப் பேரவையை உருவாக்கின. தமிழ்ச் சங்கங்கள் வெறும் பொழுதுபோக்கு மன்றங்களாக அல்லாமல் தமிழ் மொழி வாழவும், வளரவும் வழிகாணவும், நம் குழந்தைகளுக்குத் மொழியோடும் பண்பாட்டோடும் தொடர்பு வைக்கவும் உதவும் நோக்கத்தில் பேரவை செயல்படுகிறது.

அமெரிக்கக் கலை, பண்பாட்டு வெளியில், தமிழர் தமது பெருமைமிகு மொழி, கலையை தலைமுறைகள் தாண்டி தனித்துவத்தோடு தொடர்வதில் பேரவையின் தமிழ் விழாக்கள் (Annual Tamil Conventions) பெரும்பங்கு ஆற்றியுள்ளன. பேரவை அமெரிக்காவில் பதிவுபெற்ற, வணிக நோக்கற்ற, வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகும்.

தமிழ்ப்பணிகள்
2005ல் முதல் முறையாக அமெரிக்காவில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தியது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இந்த மாநாட்டின் கட்டுரைகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டன. 2013ல் வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பன்னாட்டுப் புறநானூறு மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டது. 2003ல் தமிழ் கற்பிக்கும் கோடைக்கால முகாம் நடத்தப்பட்டது.

தமிழ் யூனிகோடு வரிசையில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய உலக யுனிகோடு நிறுவனத்துக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. பேரவை நிர்வாகக் குழுவும் தமிழக அரசின் பரிந்துரைகளை ஆதரித்து உலக யூனிகோடு நிறுவனத்துக்கு தன் கருத்துக்களை அனுப்பியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பெர்க்கலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பீடம் ஏற்படுத்த பணம் திரட்டி உதவியது.

கடந்தகால நிகழ்ச்சிகள்
பேரவை மாநாடுகளில் ஒரு பக்கம் மக்கள் விரும்பும் திரைப்பட அடிப்படையிலான நிகழ்ச்சிகள் இருந்தாலும், இன்னொரு புறம் பாரம்பரியக் கலைகளையும், கிராமியக் கலைகளையும் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கே.ஏ. குணசேகரன் குழு, புஷ்பவனம் குப்புசாமி குழு, மு. இராமசாமி குழு, புதுச்சேரி ஆறுமுகம் குழு, திண்டுக்கல் சக்தி தப்பாட்டக் குழு தவிர, வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம், கல்கியின் 'சிவகாமியின் சபதம்' போன்றவை இதற்குச் சான்று பகரும். அது மட்டுமல்லாமல் விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மாந்தரின் சிக்கல்களைச் சித்திரிக்கும் கலைஞர்களை அழைத்துச் சிறப்பிப்பதன் மூலம் சமூக சீர்கேடுகளைக் களைய வேண்டுமென்பதைச் செயலில் காட்டி வருகிறது.

எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், பிரபஞ்சன், சிவகாமி IAS, சுஜாதா, சிவசங்கரி, எஸ். ராமகிருஷ்ணன்; தமிழாராய்ச்சியாளர்கள் கா. சிவத்தம்பி, பழனியப்பன்; தமிழறிஞர்கள் தமிழண்ணல், சிலம்பொலி சு. செல்லப்பன், மதிவாணன், சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தன், இளங்குமரனார், அருள்மொழி; சொற்பொழிவாளர்கள் வைக்கோ, தியாகு, பர்வீன் சுல்தானா, உ. சகாயம் IAS, சுப. வீரபாண்டியன், மயில்சாமி அண்ணாதுரை, ஓவியர் புகழேந்தி; தலைவர்கள் நல்லகண்ணு, சி. மகேந்திரன், அன்புமணி, கிருஷ்ணசாமி; கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், வைரமுத்து, தமிழன்பன், சேரன், தாமரை, நா. முத்துக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன்; தமிழிசைப் பாடகர்கள் சுதா ரகுநாதன், வாணி ஜெயராம், ஆத்மநாதன், மகாநதி சோபனா, சாருலதா மணி, டி.கே.எஸ். கலைவாணன், நித்யஸ்ரீ மகாதேவன்; திரையிசைக் கலைஞர்கள் இளைய ராஜா, பரத்வாஜ், சங்கர் மகாதேவன், சித்ரா, சின்ன பொண்ணு, சின்மயி, மனோ, பிரகதி, அனுராதா, பாப் சாலினி, சீனிவாஸ்; ஆன்மீகப் பெரியோர் குன்றகுடி ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், போரூர் அடிகளார்; திரை இயக்குநர்கள் பாரதிராசா, தங்கர் பச்சான், சமுத்திரகனி; நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், நாகேஷ், பசுபதி, ஜீவா, விக்ரம், சிவகுமார், கார்த்திக், சரத்குமார், சிவ கார்த்திகேயன், சார்லி; நகைச்சுவைக் கலைஞர்கள் மதுரை முத்து, ரோபோ சங்கர், மயில்சாமி எனப் பலரையும் அழைத்து வந்துள்ளது. பேரவையின் வெள்ளி விழா 2012ம் ஆண்டு மேரிலாந்து மாநிலம் பால்டிமோர் நகரில் கொண்டாடப்பட்டது.

தமிழ் விழா 2014
2014 தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா மிசௌரி மாநிலம் செயின்ட் லூயிஸ் நகரில் ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளது. இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்: தோல்பாவைக் கூத்து; தமிழர் வரலாற்று நாட்டிய நாடகம் 'மாவீரன் தீரன் சின்னமலை'; 'சிலம்பின் கதை' தெருக்கூத்து; பறை நிகழ்ச்சி; சிலம்பம், குத்துவரிசை; தமிழன், தமிழச்சி, தமிழ்த் தேனீ போட்டிகள்; தமிழிசை, இலக்கிய விநாடி வினா, பாட்டரங்கம், பட்டிமன்றம்; தொழில் முனைவோர் கருத்தரங்கம்; வர்மக்கலை, சிற்பம், சோழர் கட்டிடக்கலை, சித்த மருத்துவம் பயிற்சிப் பட்டறைகள்; இளையோர் தொண்டு அமைப்பின் கருத்தரங்கம்; தமிழ் வாழ்வியல் சார்ந்த குறும்படப் போட்டி; பல்வேறு மாநிலத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் அணிவகுப்பு; தமிழ் அமெரிக்க முன்னோடி விருதுகள்; சூப்பர் சிங்கர் திவாகர், சோனியாவுடன் கணேஷ் கிருபாவின் மெல்லிசை; இயக்குநர் சங்கர், நடிகர் நெப்போலியனுடன் முன்னணி திரைப்பட கலைஞர்களின் நிகழ்ச்சி; விஜய் தொலைக்காட்சி அமுதவாணனின் நையாண்டி நிகழ்ச்சி; அறிஞர்கள், எழுத்தாளர்கள் சொற்பொழிவுகள்.

நீங்கள் குடும்பத்தோடு வந்து கலந்துகொள்வதோடு உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள்.

மேலதிக தகவலுக்கு:
www.fetna.org
www.fetna2014.com

பொற்செழியன்,
மிசௌரி

© TamilOnline.com