சிங்கப்புலி
ஓர் அடர்ந்த காட்டின் ராஜாவாகச் சிங்கம் இருந்தது. மந்திரி யானை, தளபதி புலி. ஒருநாள் சிங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. குரங்குகள் மூலம் அந்தச் செய்தி எல்லா மிருகங்களுக்கும் போய்ச் சேர்ந்தது.

மறுநாள் காலை. எல்லா மிருகங்களும் சீக்கிரமே எழுந்து வந்து சிங்கத்தின் குகைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தன. மந்திரியாகிய யானை பேசத் துவங்கியது. "காட்டின் செல்வங்களே! நமது சிங்க மகாராஜாவுக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அதனால் அடுத்த மகாராஜாவாக யாரை நியமிக்கலாம் என்பதற்குத்தான் உங்களை வரச் சொன்னேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்" என்றது.

"நரியையும் முயலையும் மட்டும் இன்னும் காணோம்!" என்றன குரங்குகள்.

"நீங்கள் செய்தி சொல்லிவிட்டீர்கள் தானே?" என்று கேட்டது சிங்கராஜா

"ஆம். மகாராஜா. முக்கியமான கூட்டம். விடியற்காலையிலேயே வந்துவிட வேண்டும் என்று சொன்னோமே!" என்றன குரங்குகள்.

"அவை இரண்டும் ஒன்றாகத்தான் வந்து கொண்டிருந்தன. மேலே இருந்து நான் பார்த்தேனே" என்றது கழுகு.

"அப்படியா, சரி, சரி... கூட்டம் முடிவதற்குள் வந்து விடாதா என்ன?" என்று சொன்ன யானை, மற்ற மிருகங்களைக் கருத்து சொல்லச் சொன்னது.

"மந்திரியாரே, நீங்களே ராஜாவாக ஆனால் எங்களுக்கெல்லாம் சந்தோஷம்" என்றன சில மிருகங்கள். சில, "தளபதியாக இருக்கும் புலியார் மன்னராக வந்தால்தான் நல்லது. காட்டுக்கும் எங்களுக்கும் அவர் நல்ல பாதுகாவலராக இருப்பார்" என்றன.

இப்படியே சில மணி நேரம் விவாதம் நடந்தது. இறுதியில் "புலியே மன்னராக இருக்கட்டும்" என யானை ஒதுங்கிக் கொண்டதால், அடுத்த மன்னராக தளபதியான புலி தேர்ந்தெடுக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து எல்லா மிருகங்களும் கலைந்து செல்ல ஆரம்பித்தபோது மெள்ள அங்கே வந்தது நரி. காட்டின் கட்டுப்பாட்டை மீறி, தன்னுடன் வந்த முயலைக் கொன்று தின்றுவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிபோல அங்கு வந்து நின்றது அது.

அதைப் பார்த்த சிங்கம், "நரியே, உனக்கு என்ன அலட்சியம்! முக்கியமான கூட்டம் என்று சொல்லியும் ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்?" என்று கேட்டது சீற்றத்துடன்.

உடனே பயந்ததுபோல் நடித்த நரி, "மன்னா, நான் விடிகாலையிலே கிளம்பி விட்டேன். நடுவழியில் சிங்கம் ஒன்று என்னைப் பிடித்துக்கொண்டு விட்டது. அதிலிருந்து தப்பிப் பிழைத்து இங்கே வந்து சேர்வதற்குள் நான் பட்ட பாடு.. அப்பப்பா...." என்றது.

"நீ என்ன சொல்கிறாய்? இந்தக் காட்டில் வசிக்கும் ஒரே சிங்கம் நான் மட்டும்தானே. இன்னொரு சிங்கம் இருந்திருந்தால் நான் அதை மன்னராக ஆக்கியிருப்பேனே!"

"இல்லை மன்னா. இன்னொரு சிங்கம் இருக்கிறது. நீங்கள் என்னுடன் வந்தால் காட்டுகிறேன். ஒரு பெரிய குகைக்குள் அது இருக்கிறது."

உடனே சற்று யோசித்த சிங்கம், "இல்லை. நான் வரவில்லை. எனக்கு உடல்நலமில்லை. இதோ அடுத்த மன்னராக நியமிக்கப்பட இருக்கும் புலி உன் கூட வரும். அதனிடம் அந்த சிங்கத்தைக் காட்டு. மற்றவற்றைப் புலி பார்த்துக் கொள்ளும்." என்றது.

சிங்கத்தின் பதிலைக் கேட்ட நரி திகைத்துப் போனது. புலியோ, "ம்... ம்... சீக்கிரம் வா. எனக்கு மிகுந்த பசியாக இருக்கிறது" என்றது.

வேறு வழியில்லாமல் புலியுடன் நடந்தது நரி. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று வழியெல்லாம் யோசித்துக்கொண்டே போனது. சிறிது தூரம் சென்றதும் "எங்கே அந்தச் சிங்கம்? காட்டு" என்றது புலி.

"இல்லை. இங்கேதான். இன்னும் சற்று தூரத்தில். பார்க்க சிங்கம் மாதிரிதான் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சம் புலி மாதிரியும் கூடத் தெரிந்தது. அநேகமாக சிங்கப்புலியாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றது நரி, சாமர்த்தியமாக.

"என்ன சிங்கப்புலியா? என்ன உளறுகிறாய் நீ!. அப்படி ஒரு மிருகமும் இருக்க வாய்ப்பில்லையே!"

"இருக்கிறது. அதோ பாருங்கள். ஆழமான அந்தக் குகைக்குள்தான் அது ஒளிந்திருக்கிறது" என்று சொன்ன நரி, பாழடைந்து, தரையோடு தரையாக இருந்த ஆழமான ஒரு கிணற்றைக் காட்டியது.

புலி அருகே சென்று எட்டிப் பார்த்தது. கிணற்று நீரில் அதன் பிம்பம் தெரிந்தது.

உடனே நரி, "பார்த்தீர்களா? புலி மாதிரிதானே தெரிகிறது!. என்னை அது ரொம்பப் படுத்தி விட்டது. இப்போது கீழே ஒளிந்திருக்கிறது. நீங்கள் உடனே பாய்ந்து கொல்லுங்கள்" என்றது.

"ஓஹோ... என்னை முட்டாள் என்று நினைத்து விட்டாயா நரியே! முதலில் சிங்கம் என்றாய். பின்னர் புலி மாதிரி இருந்த சிங்கம், சிங்கப்புலி என்றாய். யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? இது குகையல்ல; கிணறு என்பதும், எட்டிப் பார்த்தால் நீரில் என் பிம்பம் தெரியும் என்பதும் கூட எனக்குத் தெரியாதா என்ன? வழியில் வரும்போதே முயலின் ஈரமான எலும்புகளைப் பார்த்தேன். காட்டின் கட்டளையை மீறி முயலைக் கொன்று தின்றுவிட்டு நீ ஆடும் நாடகம் எனக்குத் தெரியாதா என்ன? என்னையும் இப்போது தந்திரமாகக் கொல்லப் பார்க்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்..." என்று கூறிய புலி, நரியை ஓங்கி அறைந்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டது.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com