புரோஸ்டேட் (Prostate) அல்லது ஆண்மைச் சுரப்பியின் வீக்கம், அதில் அடைப்பு, அதனால் ஏற்படும் நுண்ணுயிர் கிருமித் தாக்கம், அதில் ஏற்படும் புற்றுநோய் முதலியன பற்றி இங்கு பார்க்கலாம். புரோஸ்டேட் ஆணின் இனவுறுப்புகளைச் சார்ந்தது. ஒரு நெல்லிக்காய் அளவில் இருக்கும் இந்த உறுப்பு விந்துகளை அதிகரிக்க ஒரு திரவம் உற்பத்தி செய்கிறது. இது சிறுநீர்ப் பையின் அடிப்புறம் இருப்பதால் இதன் அளவு பெரிதானால் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட நேரிடலாம். 50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்தச் சுரப்பி வீங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, சில உபாதைகள் ஏற்படலாம்.
ஆண்மைச் சுரப்பி வீக்கத்தின் அறிகுறிகள் - சிறுநீர் மெலிதாக, அடிக்கடி, தடைபட்டு வெளி வருதல் - அவசரமாக, அடக்க முடியாமல் சிறுநீர் வருதல் - போகும்போது சற்றுக் கால தாமதமாகச் சிறுநீர் வெளிவருதல் - அடிக்கடி, குறிப்பாக இரவு வேளைகளில், சிறுநீர் கழிக்க நேரிடுதல் - முக்கி, முக்கிச் சிறுநீர் கழிக்க வேண்டி வருதல் - சிறுநீர் கழித்து முடித்த பின்னும், உடனே மீண்டும் கழிக்கத் தோன்றுவது - சிறுநீர் கழிக்கும் போது அடிவயிறு வலித்தல் - சொட்டுச் சொட்டாக சிறுநீர் போதல் இந்த வகை உபாதை எதுவுமே இல்லாமல் திடீரென்று ஒருநாள் கொஞ்சமும் சிறுநீர் கழிக்க முடியாமல், வலி ஏற்படுதலும் நிகழலாம்.
பரிசோதனைகள் இந்த நோயைக் கண்டறிய, தீவிரம் புரிந்துகொள்ள, ஆசன வாய் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் PSA பரிசோதனை, மீயொலி (Ultrasound), சிறுநீர் கழிவோட்டப் பரிசோதனை, சிறுநீர் பை உட்பரிசோதனை (Cystoscopy), சுரப்பியின் திசுச் சோதனை போன்றவை தேவைப்படலாம்.
புரோஸ்டேட் சுரப்பி அழற்சி (Prostatitis) இது மேற்கூறிய உபாதைகள் இருந்தாலும், இல்லாதுபோனாலும் சிலருக்கு அடிவயிற்றில் வலி, காய்ச்சல், சிறுநீர் போகும்போது எரிச்சல், பசியின்மை, சோர்வு போன்ற உபாதைகளுடன் புரோஸ்டேடைடிஸ் ஏற்படலாம். இது ஆண்மைச் சுரப்பியில் நுண்ணுயிர்க் கிருமி தாக்குவதால் ஏற்படுகிறது. இது உடனடியாகப் பாதிக்கலாம். இவர்களை மருத்துவமனையில் சேர்க்க நேரிடும். சிறுநீர்ப் பாதையில் அடைப்பு மிகுதியாக இருந்தால் சிறுநீர் வெளியேறக் குழாய் போடவேண்டி வரும். இதனாலும் வலி அதிகமாகலாம். இவர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் தர வேண்டியதாகும். இவற்றை IV மூலமாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ கொடுப்பர். தீவிரம் அதிகமானால் சிரையக வழியே (IV) மருந்து கொடுக்க வேண்டி வரும். இந்த மருந்துகளை நான்கு முதல் ஆறு வாரம்வரை உட்கொள்ள வேண்டும். குறைவாக எடுத்தால் நுண்ணுயிர்க் கிருமித் தாக்கம் மீண்டும் வரலாம்.
சிகிச்சை வீக்கம் குறையவும், சிறுநீர்ப் போக்கு சீராவதற்கும் Finasteride, Doxazosin,Tamsulosin போன்ற மருந்துகள் கொடுக்கப்படலாம். இவற்றைத் தினமும் உட்கொள்ள வேண்டும். தீவிரம் அதிகமானால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அறுவை சிகிச்சையிலும் பலவிதங்கள் உள்ளன. நோயின் தீவிரத்திற்கேற்ப அறுவை சிகிச்சை மாறுபடும்.
புரோஸ்டேட் புற்றுநோய் வீக்கம் புற்று நோயாக இருக்குமோ என்ற ஐயம் இருந்தால், திசுச்சோதனை (biopsy) தேவைப்படும். PSA (Prostate-specific Antigen) அளவு அதிகமாக இருந்தால் இந்தப் பரிசோதனை தேவைப்படும். நுண்ணுயிர்த் தொற்று இருந்தாலும் PSA அளவு அதிகமாக இருக்கலாம். மருந்து கொடுத்த பின்னர் திரும்பவும் இதைப் பரிசோதித்து, அளவு குறையவில்லை என்றால் மீண்டும் திசுப் பரிசோதனை செய்ய வேண்டிவரும். புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால், இதற்குப் பலவகை சிகிச்சைகள் உள்ளன. ஆரம்பநிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், புற்றுநோய் பரவாமல் தடுக்க முடியும். கதிர்வீச்சு (Radiation) சிகிச்சை தேவைப்படலாம். நாற்பது வயது ஆனபின்னர், குறிப்பாக, இந்த நோய் குடும்ப வரலாறு உள்ள ஆண்கள் புரோஸ்டேட் பரிசோதனை செய்து கொள்வது பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
தடுப்பு முறைகள் ஆண்மைச் சுரப்பிப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்வது? * 6 முதல் 8 கோப்பை தண்ணீர் அருந்துவது நல்லது * சிறுநீரை அடக்காமல் உடனுக்குடன் கழிப்பது நல்லது * மாலை, இரவு வேளைகளில் நீர்/பானம் குறைவாக அருந்தினால் இரவு வேளையில் சிறுநீர் கழிப்பது குறையும் * முக்கி முக்கிப் போகாமல், அதன் போக்கில் விடுவது நல்லது. சிறுநீர் கழித்த பின்னர் மீண்டும் செல்ல வேண்டி வரலாம். * அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். * மதுப் பழக்கம் உள்ளோர், மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்
மூலிகைகள் சா பால்மிடோ (Saw palmetto) என்ற மூலிகை இதற்கு உதவலாம். இது பொடியாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது. நோய் முற்றிலும் குணமான பின்னர் மருத்துவ ஆலோசனைப்படி தாம்பத்ய வாழ்வைத் தொடரலம்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |