நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் என்ற ந.மு. வேங்கடசாமி நாட்டார், திருவையாற்றில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார்-தைலம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 12, 1884 அன்று பிறந்தார். இயற்பெயர் சிவப்பிரகாசம். தந்தையார் ஒரு விவசாயி. தமிழார்வம் மிக்கவர். இல்லத்தில் நைடதம், ஆத்திசூடி உள்ளிட்ட நூல்களின் சுவடிகளை வைத்திருந்தார். தந்தைவழி விவசாயத்தை மேற்கொண்ட வேங்கடசாமி, கற்கும் ஆர்வம் மிகுந்ததால் வீட்டிலிருந்த ஏட்டுச் சுவடிகளைத் தாமாகவே கற்கத் துவங்கினார். புராண, இதிகாச நூல்களையும், இலக்கண, இலக்கிய நூல்களையும் சுயமுயற்சியால் கற்றுத் தேர்ந்தார். தந்தையும் இவருக்கு ஆசானாக இருந்து போதித்தார். அக்காலத்தில் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவி தமிழ்ப்பணி ஆற்றி வந்தார் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். நாட்டாரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்த, தந்தையின் நண்பரான ஐ. சாமிநாத முதலியார், வேங்கடசாமியை அப்பள்ளியில் சேர்ந்து பயிலக் கூறினார். அதன்படி மதுரை தமிழ்ச்சங்கப் பள்ளியில் பயின்று, 'பண்டிதர்' ஆனார் வேங்கடசாமி. ஆறாண்டுகள் பயில வேண்டிய கல்வியை மூன்று ஆண்டுகளிலேயே நிறைவு செய்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதால் பாண்டித்துரைத் தேவரின் பாராட்டையும், தங்கப் பதக்கத்தையும் வென்றார். தொடர்ந்து திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுத் திறம்படப் பணியாற்றினார். அடுத்துக் கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

தமது பணிக்காலத்தில் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கினார். தமிழறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம், தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த முருகவேள் ஆகியோர் நாட்டாரின் மாணாக்கரே! தமது ஓய்வு நேரத்தில் இலக்கண, இலக்கியங்களை ஆராய்ந்து எழுதி, சிறந்த உரையாசிரியர் என்று பாராட்டப் பெற்றார். தேர்ந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். சமயம், இலக்கியம், அரசியல் என எல்லாத் துறைகளிலும் நுண்மாண் நுழைபுலத்தோடு பேசும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். தமிழகத்தின் பல இடங்களுக்கும் தமது சொந்தச் செலவில் சென்று, சன்மானம் வாங்காமல் உரையாற்றினார். 1930ல் சென்னைப் பல்கலையில் இவர் உரையாற்றிய தொல்காப்பியச் சொற்பொழிவு அறிஞர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. அது நூல் வடிவம் பெறாதது பெரும் இழப்பே. திருச்சி வானொலி நிலையத்திற்காக ஆற்றிய சொற்பொழிவுகள் இவருக்கு நீடித்த புகழைப் பெற்றுத் தந்தன. திருச்சி சைவ சித்தாந்த சபை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம், மதுரை தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ் மற்றும் சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதற்காக இலங்கை உட்பட பல ஊர்களுக்கும் பயணங்கள் மேற்கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். தமிழ் மற்றும் சைவத்தின் பெருமையை விளக்கும் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார்.

திருச்சியைத் தொடர்ந்து அண்ணாமலைப் பலகலைக்கழகம் இவரை அழைத்தது. அங்கு தமிழ்ப் பேராசிரியராக ஏழு ஆண்டுகள் பணியாற்றிப் பின் பணி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் கரந்தைக் கவியரசு தமிழவேள் உமாமகேசுவரனாரின் வேண்டுகோளுக்கிணங்க கரந்தை புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணியாற்றினார். ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்ச் சொற்களை புழக்கத்தில் கொண்டுவந்த முன்னோடி ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்தாம் என்று சொல்லலாம். 1911ல் கரந்தை தமிழ்ச் சங்கம் நிறுவுவதற்கான பணிகளை நாட்டார் மேற்கொண்டார். வக்கீல் 'வழக்குரைஞர்' ஆனதும், இஞ்சினியர் 'பொறியாளர்' ஆனதும், கோர்ட் 'நீதிமன்றம்' ஆனதும், ஜட்ஜ் 'நீதிபதி' ஆனதும் இவரது முயற்சியால்தான்.

'வேளிர் வரலாறு', 'கள்ளர் சரித்திரம்', 'கண்ணகி வரலாறும் கற்பின் மாண்பும்', 'சோழர் சரித்திரம்' போன்ற இவரது நூல்கள் இவரது மேதைமைக்கும், ஆராய்ச்சித் திறனுக்கும் சான்றுகள். 1926ல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் தலைமையில் நாவலர் வேங்கடசாமியார் சோழர் சரித்திரம் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவுகளே பின்னர் நூல்வடிவம் பெற்றுப் புகழ்தேடித் தந்தன. குறிப்பாக 'கள்ளர் சரித்திரம்' கள்ளர் இனத்தைப் பற்றிய மிக முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. இதைப் பற்றி டாக்டர் உ.வே.சா., "கலாசாலை மாணவர்கள் படித்துப் பயனெய்துமாறு இது பாடமாக வைக்கத் தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சாதியாரை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தி எழுதப்பட்ட நூல் அல்ல. கள்ளர் என்போர் யாவர், அவர் வழிவழியாக தமிழக நிலப்பரப்பில் எத்தகைய ஆதிக்கம் செலுத்தினர், ஆண்ட பரம்பரையினரான அவர்கள் நலிவுற்றது எப்படி, ஏன் என்பதைத் தனது நூலில் பல்வேறு இலக்கிய, வரலாற்று, கல்வெட்டுச் சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளார். "கள்ளர்கள் தொன்றுதொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீந்தாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர்சட்டத்திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும்" என்று தனது கள்ளர் சரித்திரம் நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வேங்கடசாமியார், தனது நூலின் நோக்கம் பற்றி, "கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை யடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நன்மையடைதற்குத் துணைபுரிதலே இஃது எழுதியதன் முதல் நோக்கமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு இலக்கியங்களை ஆராய்ந்து இவர் எழுதிய 'நக்கீரர் வரலாறு' பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. 'கபிலர் வரலாறு' பிற ஆய்வாளர்களால் பாராட்டப்பட்டதுடன் பல்கலைக்கழகப் பாடநூலாகவும் ஏற்கப்பட்டது. 'அகநானூறு', 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை' இவற்றோடு 'இன்னா நாற்பது', 'களவழி நாற்பது', 'கார் நாற்பது', 'ஆத்திசூடி', 'கொன்றை வேந்தன்', 'வெற்றிவேற்கை', 'மூதுரை', 'நல்வழி', 'நன்னெறி' என்று பல நூல்களுக்கு இவர் எழுதியிருக்கும் உரைநூல்கள் குறிப்பிடத் தக்கன. 'உரை நூல்களின் முன்னோடி' என்று போற்றப்படுமளவுக்கு பல நூல்களுக்கு இவர் உரை செய்திருக்கிறார். பல உரைகளைத் திருத்திச் செப்பம் செய்து புதிதாகவும் எழுதியிருக்கிறார். அ.ச.ஞா.வின் தந்தை அ.மு. சரவண முதலியாருடன் இணைந்து இவர் எழுதியிருக்கும் திருவிளையாடற் புராண உரை குறிப்பிடத் தகுந்தது. இவரது 'கட்டுரைத் திரட்டு' ஒன்றும் வெளிவந்துள்ளது. அது ஓர் அறிவுச் சுரங்கமாகும். இவர் எழுதிய சிலப்பதிகார உரை மிகவும் புகழ்பெற்றது. சிலம்பில் ஏற்படும் பல சந்தேகங்களுக்கு அக்கால அறிஞர்கள் இவரை நாடியே தெளிவுபெற்றனர். பாரதியாரும் அவர்களில் ஒருவர் என்ற ஒரு கூற்றும் உண்டு. இவரது தமிழ்ப் பணியையும், சொல்லாற்றலையும் போற்றும் வண்ணம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தாரால் இவருக்கு 1940ல் 'நாவலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ் மற்றும் சைவ வளர்ச்சிக்காகவே வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட வேங்கடசாமியார், மணிவிழா நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென உடல் நலிவுற்று மார்ச் 28, 1944 அன்று காலமானார். தமிழ் வளர்ச்சிக்காக தனித்ததொரு தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. அதற்காக அவர் தம் வாழ்நாளிலேயே 'திருவருள் கல்லூரி' என்ற ஒரு கல்லூரியை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அவை வெற்றியைத் தரவில்லை. அவரது மறைவிற்குப் பல ஆண்டுகள் கழித்து 1990ல் உருவான தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அவரது கனவை நிறைவேற்றியது. 'ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி' என்ற கல்லூரியும் பின்னால் தஞ்சையில் அமையப்பெற்று அவரது இலட்சியத்தை நிறைவு செய்தது. அந்த வளாகத்திலேயே அவருக்கு சிலை ஒன்றும் நிறுவப்பெற்றது. நாட்டார் அவர்களின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. அவர் எழுதியுள்ள அனைத்து நூல்களும் 24 தொகுதிகளாக தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு வேங்கடசாமி நாட்டாரின் 130வது ஆண்டு. தமிழர்கள் என்றும் மறக்கக்கூடாத ஒரு முன்னோடி அறிஞர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com