நரேந்திர மோதி: புதியன புகுதல்
2014 மக்களவைத் தேர்தலில் முக்கியமான இரண்டு நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன: ஒன்று, தொங்கு பார்லிமெண்ட்தான் இனி இந்தியாவின் கதி என்பது. இரண்டு, தன் குடும்பம், ஜாதி, மதம், கட்சிக்காரர்கள் என்று இத்தகைய குறுகிய வட்டத்தின் நலனுக்காகவே தொடர்ந்து உழைத்து வந்தாலும், 'மதச்சார்பின்மை' என்று விடாமல் சொல்லிவந்தால் போதும், ஓட்டு வாங்கிவிடலாம் என்பது. அத்தோடு, 'மக்கள் முட்டாள்கள்' என்ற நம்பிக்கையைத் தகர்த்ததையும் மகிழ்ச்சியோடு சேர்த்துக் கொள்ளலாம்.

'அனைவருடனும் சேர்ந்து அனைவர்க்கும் மேன்மை' ('சப்கா சாத் சப்கா விகாஸ்) என்ற நம்பிக்கையூட்டும் வாசகத்தை முழங்கியவண்ணம் நரேந்திர மோதி பிரதம மந்திரி ஆகியிருக்கிறார். பதவி ஏற்பதற்கு முந்தைய நாள் பாராளுமன்ற மைய அரங்கத்தில் நடந்த எம்.பி.க்களின் கூட்டத்திலும் அவர் முந்தைய ஆட்சியைப் பழிக்கவில்லை. "நமக்கு முன்னால் பல அரசுகள் இருந்துள்ளன. அவர்கள் செய்ததில் பல நல்லவை உள்ளன. அதிலிருந்து நாம் மேற்கொண்டு எடுத்துச் செல்வோம்" என்றுதான் கூறினார். "இந்தியா எனது தாய். அவளுக்கு நான் செய்வது கருணை அல்ல, கடமை!" என்று உணர்ச்சி ததும்பக் கூறியபோது பலர் தமது கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்க்க முடிந்தது.

மோதியின் தந்தை தேநீர்க்கடை வைத்திருந்தவர். கடையில் மோதி அவருக்கு உதவியதுண்டு. தாயார் வீடுவீடாகச் சென்று பாத்திரம் தேய்த்தவர். மிகக் கீழ்நிலையிலிருந்து ஒருவர் பிரதமராக முடியும் என்பது ஓர் இந்திய ஜனநாயகக் கனவாகவே இருந்தது. அந்தக் கனவை மோதி நனவாக்கி இருக்கிறார். இதை ஒபாமா அதிபரானதோடு ஒப்பிடுவோர் உள்ளனர்.

தமது பதவி ஏற்பு விழாவுக்கு SAARC நாடுகளின் தலைவர்களை அழைத்ததையும், அவர்கள் அதனை ஏற்றதையும் ஒரு பெரும் ராஜதந்திரச் செயலாகப் பலர் பேசுகின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு என்று நம்மைச் சுற்றிய நாடுகளை நமக்கு எதிராகத் திருப்பி ஒரு சக்கர வியூகத்தைச் சீனா ஏற்படுத்தியுள்ள அசுர ஆபத்தை அறியாத பலர் இதனை ஒரு நாடகம் என்றும் இன்னும் பிற அரசியல் வண்ணங்கள் பூசியும் விமர்சித்தனர். மோதியின் அழைப்புக்கு விடையாகத் தமது நல்லெண்ணத்தைக் காட்டும் விதமாகப் பாகிஸ்தானும், ஸ்ரீலங்காவும் சிறையிலிருந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவு பிறப்பித்தன. முன்னறிவிப்பின்றி ஆஃப்கனிஸ்தானுக்குச் சென்றிறங்கிய ஒபாமாவைச் சந்திக்காத ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், மிகுந்த மகிழ்ச்சியோடு ராஷ்டிரபதி பவன் விழாவுக்கு வந்திருந்தார். மோதி பதவியேற்ற மறுநாளே ஒவ்வொரு சார்க் நாட்டுத் தலைவருடனும் தனிப்படப் பேசி இந்தியாவின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அவர் உறுதியான குரலில் கூறியதும் குறிப்பிடத் தக்கது.

அமைச்சர்கள் தமது சொந்தக்காரர் யாரையும் தனிப்பட்ட பணியாளர்களாக வைத்துக்கொள்ளக் கூடாது என்று முதல்நாளே மோதி அறிவுறுத்திவிட்டார். மோதியின் தாய் உட்படக் குடும்பத்தினர் யாரும் அவரது பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை, மாறாக வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில்தான் பார்த்தார்கள் என்பது கவனிக்கத் தக்கது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கறுப்புப்பண விவரத்தைத் தோண்டி எடுத்து, அதை விரைந்து திரும்பக் கொண்டு வர ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நீதியரசர் M.B. ஷா அவர்களின் தலைமையில் முதல் காரியமாக அறிவித்ததும் மோதி செயல்பாட்டின் விரைவுத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

சிறிய அமைச்சரவை, திறமிக்க நிர்வாகம், விரைந்த செயல்பாடு இவற்றை மோதி குஜராத்திலிருந்து இப்போது டெல்லிக்குக் கொண்டு வந்திருக்கிறார். அவர் எடுத்து வைக்கும் முதல் எட்டுக்கள் நம்பிக்கை தருவனவாகத்தான் உள்ளன. ஆனாலும், அவரை எதிர்நோக்கும் சவால்கள் மிகப்பெரியவை. காங்கிரஸ் விட்டுச் சென்றிருப்பவை: வழங்கப்பட வேண்டிய மானிய பாக்கி ஒரு லட்சம் கோடி, திருப்பித் தரப்பட வேண்டிய வருமான வரி நிலுவை ஒரு லட்சம் கோடி என்று பத்திரிகைகள் கூறுகின்றன. இவற்றைத் தாண்டித்தான் நிதி நிலைமையை, அந்நியச் செலாவணிக் கையிருப்பை, வேலையில்லாப் பிரச்சனை இன்னும் பிற சவால்களை எதிர்கொண்டாக வேண்டும். ஏனென்றால் CAG தணிக்கை செய்தாலொழிய என்ன நடக்கிறதென்பது பிரதமருக்கே தெரியாத நிலையில்தான் பத்தாண்டுக் காலமாக நடுவண் அரசு செயல்பட்டு வந்ததாகத் தோன்றுகிறது.

மோதியின் வெற்றி வாசனை காற்றில் வரத்தொடங்கிய உடனேயே இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, பங்குச் சந்தை சரசரவென்று ஏறியது, தங்கம் விலை குறைந்தது. ரூபாயின் மதிப்பு உயர்வால் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையவும், அதன் தாக்கத்தால் ஏனைய பொருள்களும் விலை குறைந்து சாமான்யனின் வாழ்க்கை எளிதாகவும் வாய்ப்புக் கூடியுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, உலக அரங்கில் இந்தியன் என்றாலே கடைசி பெஞ்சு மாணவன் போல ஏதோ கூச்சத்துடன் நெளிந்து கொண்டிருந்த நிலை மாறி, தன்மானம், தன்னம்பிக்கை இவற்றோடும், ஒரு பெரிய ஜனநாயகம் தன்னை நிரூபித்துக்கொண்ட பெருமிதத்தோடும் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை வந்திருக்கிறது என்பது பாரபட்சமில்லாமல் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

இப்படியொரு வெற்றியை நரேந்திர மோதி ஏதோவொரு மதத்தின் அல்லது கட்சியின் ஆதரவினால் மட்டும் பெற்றுவிடவில்லை. மிகுந்த நம்பிக்கையின் பேரில், மாற்றத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்கள், இன-மத-கட்சி மாறுபாடுகளைக் கடந்து வோட்டளித்து அரசுக்கட்டில் ஏற்றியிருக்கிறார்கள். அவரும் இந்த முறை பா.ஜ.க.வின் வழக்கமான கோஷங்களைக் கூறி வோட்டுக் கேட்கவில்லை. "பாரதத்தின் சாத்தியக்கூறு பிரம்மாண்டமானது. 125 கோடி மக்களும் சேர்ந்து ஒரே ஒரு அடி எடுத்துவைத்தால் போதும். நாம் 125 கோடி அடி தூரம் முன்னகர்வோம்" என்று அவர் கூறியது இன்னும் காதில் ஒலிக்கிறது. 'அனைவருடனும் சேர்ந்து அனைவருக்கும் மேன்மை' என்பதைத்தான் நாமும் விரும்புகிறோம்.

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தவராயினும் ஒன்றே

என்ற யுகக்கவிஞன் பாரதியின் சொற்களை நினைவுகூர்ந்து, நரேந்திர மோதியையும் அவரது அரசையும் வாழ்த்தி வரவேற்போம்.

மதுரபாரதி

© TamilOnline.com