சிரிப்பானந்தா
சிலரைப் பார்த்துச் சிரித்தால் கோபித்துக் கொள்வார்கள். இவரோ தன்னைப் பார்த்து எல்லோரும் சிரிக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். "சிரிப்பே யோகம்; சிரிப்பே தவம்; சிரிப்பே சிவம்" என்கிறார் சிரிப்பானந்தா என்கிற திரு. சம்பத். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் சிரிக்க வைக்கிறார். தமிழகம் முழுவதிலும் கிட்டத்தட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறிச் சிரிக்க வைத்திருக்கிறார். சிரிப்பரங்கம், சிரிப்பு யோகா இவற்றோடு ஔவை ஆன்மீகப் பேரவை, அம்பத்தூர் கம்பன் கழகம், இலக்குவனார் இலக்கியப் பேரவை, 'அக்கறை' மனித மேம்பாட்டு அமைப்பு என்று பலவற்றுடன் இணைந்து செயல்படுகிறார் "எல்லோரையும் சிரிக்க வைப்பதே என் வாழ்க்கையின் லட்சியம்" என்று செயல்படும் அவருடன் ஒரு "கலகல" உரையாடல்.

கேள்வி: யோகா தெரியும். அதென்ன சிரிப்பு யோகா?
பதில்: சிரிப்புடன் யோகாசனங்கள், தியானம், மூச்சுப்பயிற்சி என எல்லாவற்றையும் இணைத்துத் தருவது 'சிரிப்பு யோகா'. சிரிப்பு என்பது உணர்ச்சிக்கு மட்டுமே வேலை கொடுக்கிறது. சிரிப்பு யோகா, மூளை, உடல் என இரண்டையும் ஒரே சமயத்தில் திறம்பட இயங்க வைக்கிறது. யோகா செய்கிறோம் என்பதே தெரியாமல், சிரிப்புடன் கலந்து தருவதுதான் சிரிப்பு யோகா.

கே: இதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
ப: நான் M.Com. படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென எனக்குச் சர்க்கரை நோய் வந்துவிட்டது. மருத்துவர், "மருந்து, மாத்திரைகளால் மட்டும் இது குணமாகாது. நீங்கள் நிறைய ஹ்யூமர் க்ளப்புகளுக்கெல்லாம் போகலாமே! உங்களுடைய ஸ்ட்ரெஸ் குறையுமே" என்றார். நான் அண்ணாநகர், மைலாப்பூர் ஹ்யூமர் க்ளப்புகளுக்குப் போனேன். என் ஜோக்குகளைப் பலரும் ரசிக்க ஆரம்பித்தனர். கூடவே உடலிலும் நல்ல முன்னேற்றம். நாம் வசிக்கும் அம்பத்தூரில் ஒரு ஹ்யூமர் க்ளப் ஆரம்பிக்கலாம் என்று தோன்றவே 2003ல் என்னுடைய அலுவலகத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதுதான் 'அம்பத்தூர் ஹ்யூமர் க்ளப்' எனப்படும் 'சிரிப்பரங்கம்'. (சிரிப்பான தொடக்கத்தைப் பார்க்க: youtube.com)

ஆரம்பத்தில் 5, 10 பேர் வந்தார்கள். இன்றைக்கு எந்த விளம்பரமும் இல்லாமலேயே நூற்றுக் கணக்கானவர்கள் வருகின்றனர். அதிலும் புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிறப்பு விருந்தினர்களாக வரும்போது பார்வையாளர்கள் வெளியில் நின்று கேட்டு ரசிக்கும் அளவுக்குக் கூட்டம் வந்திருக்கிறது. இதுவரை 127 சிரிப்பரங்க நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். ஃபேஸ்புக்கில் உள்ள எங்களது சிரிப்பரங்கக் குழுமத்தில் (Facebook) 29000 உறுப்பினர்கள் உள்ளனர். சிரிப்பரங்கத்தின் அடுத்த கட்டமாகத்தான் 'சிரிப்பு யோகா'விற்கு வந்தேன்.



கே: ஏன், என்ன காரணம்?
ப: சிரிப்பரங்க நிகழ்ச்சிகளில் ஜோக் சொல்வோம், மிமிக்ரி செய்வோம். சிரிப்போம். அங்கு வந்தும் சிலர் சிரிக்க மாட்டார்கள். அவர்கள் வருவதே நிகழ்ச்சியைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அவர்கள் சிரிப்பதில்லை. அல்லது அவர்களைச் சிரிக்கவைக்க எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சிரிக்க வைக்க வழி தேடினேன். அப்போதுதான் டாக்டர். மதன் கட்டாரியா (பார்க்க: www.laughteryoga.org/english/) பற்றித் தெரியவந்தது. அவர் மும்பையில் (தற்போது பெங்களூரில்) ஒரு மருத்துவர். "சிரிப்பதற்கு நகைச்சுவை உணர்ச்சி தேவையில்லை. யார் வேண்டுமானாலும் சிரிக்கலாம்" என்பது அவரது கொள்கை. அது எனக்குப் பிடித்திருந்தது. ஜோக் இல்லாமல், கோமாளித்தனங்கள் செய்யாமல் சிரிக்கலாம். உடற்பயிற்சி போன்றே செய்து எல்லாரையும் சிரிக்க வைக்கலாம். இது மூளைக்கும் உடலுக்கும் நன்மை தருகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார். "Fake it till you make it", "பாவித்தால் போதுமடா பரமநிலை எய்துவதற்கே!" என்று சொல்லியிருக்கிறார்கள். செயற்கையாகச் சிரிப்பதே கூட உண்மையாக மனம் விட்டுச் சிரிப்பதன் பயனைத் தந்துவிடும் என்பதைக் கண்டறிந்தார்.

முதலில் செயற்கையாகச் சிரி; நாளடைவில் அது இயற்கையான சிரிப்பாக மாறிவிடும். நம் உடல் என்பது ஒரு கருவி. அது நீ எப்படி சிரித்தாலும், சிரிப்புக்கான பலனைத் தந்துவிடும்; அட்ரினலின் சுரப்பது, எண்டோர்ஃபின் சுரப்பது, நரம்பு மண்டலங்கள் செயல்படுவது இவையெல்லாம் செயற்கையாகச் சிரித்தாலும் நடந்துவிடும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்து சொன்னார். அவர் அறிமுகம் செய்ததுதான் சிரிப்பு யோகா. அதற்கு அவர் பயிற்சி நடத்திவந்தார். அவரைச் சந்திக்க மும்பைக்குச் சென்றேன்.

கே: அப்புறம்...
ப: அங்கே அவரது பயிற்சிகளைப் பார்த்ததும் எனக்குக் கற்கும் ஆர்வம் ஏற்பட்டது. பயிற்சி எடுத்துக் கொண்டேன். அவர் நடத்தி வந்த கோர்ஸில் மொத்தம் 27 பேர் பயின்றோம். அந்த பேட்சில் ஐந்து பேர்தான் இந்தியர்கள். பிறர் எல்லாம் வெளிநாட்டவர்கள். அந்த ஐந்திலும் கூடத் தமிழகத்தில் இருந்து சென்ற ஒரே ஆள் நான்தான்.

கே: சரி, இதென்ன தாடி, மீசை, தொப்பி? பூச்சாண்டி மாதிரி இருக்கிறதே!
ப: ஹா.. ஹா... ஹா... ஹா... சிரிப்பரங்க நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும், நாம் பேசினால் கவனிக்க வேண்டும்; எங்கு பார்த்தாலும் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக தாடி, மீசை, தொப்பியைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆனால் இதெல்லாம் பின்னால் வந்ததுதான். எனது இளமைக் காலத்தில், ஆன்மீகத் தேடலில் இருந்தபோது தாடி வளர்த்தது நல்ல பயனைத் தந்தது. தாடி, மீசை வைப்பதற்கு முன்னால் இருந்த தியான லெவலுக்கும் அது வைத்துக்கொண்ட பின்னால் இருந்த தியான லெவலுக்கும் வேறுபாடு இருந்தது.அதன் பயனை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். அந்தக் கால முனிவர்களில் ஆரம்பித்து கவிஞர் தாகூர், யோகிராம் சுரத்குமார் எனப் பல கவிஞர்கள், ஆன்மீகவாதிகள், சிந்தனாவாதிகளின் அடையாளமாக தாடி இருந்திருக்கிறது. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில், "நான் எதிர்காலத்தில் நீண்ட தாடி வைத்துக்கொண்டு திரிவேன். அதற்கு ஒரு மகத்துவம் இருக்கிறது" என்று சொல்கிறார். ஆகவே இந்தத் தாடி, மீசையில் என்னமோ இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். நம்புகிறேன்.



கே: சரி, இருக்கட்டும். அதென்ன பெயர் 'சிரிப்பானந்தா?'
ப: ஒருநாள் நான் டாக்டரிடம் போயிருந்தேன். அவர் என் பெயரைக் கேட்டார். சம்பத் என்றேன். "இருக்க முடியாதே. உங்களுடைய தோற்றத்தைப் பார்த்தால் வேறு மாதிரி தெரிகிறதே! உண்மையான பெயரைச் சொல்லுங்கள்!" என்றார். நான் விளையாட்டாக, "அப்படின்னா 'சிரிப்பானந்தா'ன்னு வச்சுக்கங்களேன்" என்றேன். அவரும் மருந்துச்சீட்டில் அந்தப் பெயரையே எழுதிக் கொடுத்தார். அன்று முதல் 'சிரிப்பானந்தா' ஆகிவிட்டேன்.

கே: சிரிப்பு யோகாவின் அவசியம் மற்றும் தேவை என்ன?
ப: இன்றைக்கு உலக அளவில் சிரிப்பு யோகாவிற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. நம்மிடம்தான் அதுபற்றிய அறிதலும், புரிதலும் குறைவாக இருக்கிறது. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் இருந்தது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வோம்; ஒருவரது பிரச்சனையை மற்றவர்கள் தோளில் சுமந்து பக்கபலமாக இருப்போம். அதெல்லாம் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. மூன்று வயதுக்குழந்தை கூட "ஐயோ இந்த ஹோம் வொர்க் ஒரே டென்ஷன்" என்று சொல்கிறது. கணவன்-மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் செல்லவேண்டிய சூழல். நமது வாழ்க்கை எந்திரமயமாகி விட்டது. அதன் விளைவு டென்ஷன், கோபம், ரத்த அழுத்தம், ஷுகர், கொலஸ்ட்ரால் என்று வியாதிகள். இவற்றைச் சமாளிப்பது எப்படி?

மருந்து, மாத்திரைகளோடு கூடவே நமது மனதையும் மகிழ்ச்சியாக, அமைதியாக வைத்துக் கொள்வது அவசியத் தேவையாக இருக்கிறது. மன இறுக்கத்தைப் போக்க வேண்டியிருக்கிறது. அதற்குச் சிரிப்பு யோகா மிகவும் உதவுகிறது. இது முக்கியத் தேவை. சிறுவர்களும் கூட 90-95% மார்க் வாங்க வேண்டும்; டான்ஸ், பாட்டு, யோகா, கராத்தே எல்லா வகுப்புக்கும் போகவேண்டும். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. அந்த வாய் விட்டுச் சிரிப்பதையே யோகாவோடு தருவதுதான் "சிரிப்பு யோகா".


கே: பார்வையற்றோர், மீனவக் குழந்தைகள், மூளை வளர்ச்சிக் குறைபாடு உடையவர்கள் என்று பல தரப்பட்டவர்களுக்கும் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...
ப: ஆமாம். அவை மறக்க முடியாதவை. முதலில் பார்வையற்ற பள்ளி மாணவர்களைச் சந்திக்கச் செல்லும் முன்னால் தனியறையில் அமர்ந்து அதற்காக ஒத்திகை பார்த்தேன். ஏனென்றால் சிரிப்பு யோகாவில், நான் சொல்லியபடிச் செய்து காண்பிப்பதை மற்றவர்கள் பார்த்து அப்படியே செய்வார்கள். ஆனால் பார்வையற்றவர்களுக்கு அது முடியாது. அதனால் வழக்கமான பலவற்றைத் தவிர்த்து, அவர்களால் கேட்டுப் புரிந்து செய்யக் கூடியதை மட்டும் சொல்வோம் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பள்ளியில் கிடைத்த அனுபவம் நான் நினைத்ததற்கு மாறாக இருந்தது.

கே: என்ன அது?
ப: ஒருவரை ஒருவர் கண்ணால் பார்ப்பதினால் சிரிப்பு தூண்டப்பட்டு, அதிகரிக்கும். ஒருவர் மற்றவர் கண்களைப் பார்த்துச் செய்வது அவசியம் என்பதுதான் மதன் கட்டாரியாவின் அடிப்படைக் கொள்கை. ஆனால் இங்கு என் அனுபவம் அதற்கு மாறாக இருந்தது. நான் எதையெல்லாம் இவர்களுக்கு வேண்டாம்; இவர்களால் செய்ய இயலாது என்று ஒதுக்கி வைத்துப் போனேனோ அவற்றை என்னையும் அறியாமல் வழக்கம்போல நிகழ்த்த ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! நான் சொன்னதை அவர்கள் அப்படியே நான் அதிசயிக்கும்படிச் செய்து காட்டினார்கள். உதாரணமாக, "வலப்பக்கம் உடலைத் திருப்பிக் கைதட்டுங்கள்" என்று ஒரு சொல்லி, வலப்பக்கமாக உடலை வளைத்து இரு கைகளையும் தட்டுவேன். அதைப் பார்த்து அப்படியே செய்வர். இங்கும் அவர்களிடம் அதேபோலச் சொன்னேன். நான் சொன்னதைப் புரிந்துகொண்டு, உடலை வளைத்துச் சாய்த்து கை தட்டினர். எனக்கு ஒரே பிரமிப்பு. மற்றப் புலன்கள் நம்மைவிடக் கூர்மையாக இருப்பதைப் புரிந்துகொண்டேன். இறைவனின் படைப்பில் உள்ள விசித்திரத்தை அளவிட நாம் யார் என்று நினைத்தேன்.

கே: மூளை வளர்ச்சியற்றவர்களுக்குச் செய்து காட்டிய பயிற்சிகள் சவாலாக இருந்திருக்குமே!
ப: ஆம். அங்கு பல வயதினர் இருந்தார்கள். அவர்கள் பைத்தியங்களல்ல. யாரிடமும் பேசாதவர்கள், பழகாதவர்கள், மனம் இறுக்கமானவர்கள், மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு ரகம். தனி உலகம். அவர்களை ஒரு வரிசையில் நிற்க வைப்பதே கஷ்டமான விஷயம். நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று, அவர்களை அணைத்து, அன்பாகப் பேசி, அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தேன். உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும், அதை முதலில் செய்வோம் என்று ஊக்குவித்தேன்.

ஒருவர் எனக்குப் பாடத் தெரியும் என்று சொல்லி "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடலை அற்புதமாகப் பாடினார். அவர் இதற்கு முன் பாடியதேயில்லையாம். யாருடனும் பேச மாட்டாராம். அவரை அன்று பாட வைத்தது எது? அன்புதான் என்று நினைக்கிறேன். பின்னர் அதன் நிர்வாகி என்னைத் தொடர்பு கொண்டு, "சார்.. இத்தனை வருடங்களில் அவர்கள் இன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இதுமாதிரி அவர்கள் இதற்கு முன் சந்தோஷமாக இருந்ததே இல்லை. உங்களுக்கு மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள்" என்றார். இது எனக்கு மனநெகிழ்வைத் தந்தது. மாதம் ஒருமுறை அங்கு சென்று வருகிறேன்.

கே: மீனவர்களிடம் செய்த பயிற்சிகள் பற்றி..
ப: "நட்சத்திரா" என்ற அரசுசாரா அமைப்பு என்னை அழைத்திருந்தது. அவர்களுடைய வாழ்க்கை மிகக் கடினமானது. வறுமை, சண்டை, சச்சரவு என்று பல பிரச்சனைகள். அவர்கள் மிகவும் ரசித்து எனது பயிற்சிகளைச் செய்தார்கள். நிகழ்ச்சி நடந்த ஐந்தாம் நாள் நட்சத்திரா நிர்வாகிகள் என்னை திரும்பக் கூப்பிட்டார்கள். "சார். இவர்கள் உங்கள் பயிற்சியை மிகவும் விரும்புகிறார்கள். ரசிக்கிறார்கள். மறுபடியும் எப்போ வருவீர்கள் என்று கேட்கிறார்கள். இப்போது தேர்வுகள் வரப்போகின்றன. இப்போது நீங்கள் வந்தால் நன்கு மனம் ரிலாக்ஸ் ஆவார்கள். நன்கு படிப்பார்கள். மீண்டும் ஒருமுறை வந்து நடத்துங்கள் ப்ளீஸ்" என்று அழைத்தார்கள். அது ஒரு நல்ல அனுபவம்.

கே: நீங்கள் இதை இலவசமாகச் செய்து வருகிறீர்களா அல்லது கட்டணம் உண்டா?
ப: நான் இதைத் தொழில் ரீதியாக, அதாவது இத்தனை நாட்கள் பயிற்சி, இவ்வளவு கட்டணம் என்பதாக ஆரம்பிக்கவில்லை. 90% இலவசமாகத்தான் நடத்தி வருகிறேன். வணிகரீதியாகச் செயல்படுகிறவர்களிடம் ஓரளவு கட்டணம் வாங்குகிறேன். எனக்குப் பணம் முக்கியம் அல்ல. இதைத் தமிழ்நாடு முழுவதும் அனைவரும் அறியச் செய்ய வேண்டும், அதனால் அவர்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், வணிகக் குழுமங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் என்று பல இடங்களிலும் சிரிப்பு யோகா நடத்தி வருகிறேன்.

கே: யாரைச் சிரிக்க வைப்பது ரொம்பக் கஷ்டம்?
ப: எல்லோரையும் சிரிக்க வைத்து விடலாம். ஆனால் பணக்காரர் நிரம்பிய கூட்டத்தைச் சிரிக்க வைப்பது ரொம்ப கஷ்டம். பிறர் முன் சிரித்தால் கௌரவம் குலைந்து விடும், மற்றவர்கள் தப்பாக நினைத்து விடுவார்கள் என்று ஒரு எண்ணம் அவர்களிடம் இருக்கும். மிகவும் இறுக்கமாக இருப்பார்கள். ஒருமுறை சோழா ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி. வந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள், மெத்தப் படித்தவர்கள். யாரும் சிரிக்கவில்லை என்றால் நான் நிகழ்ச்சியை நடத்திப் பலனில்லை. அது திடீரென்று கிடைத்த வாய்ப்பு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் செய்யக் கூடாத ஒன்றைச் செய்தேன். சொல்லக் கூடாத ஒன்றைச் சொன்னேன்.

கே: ஐயய்யோ.. என்ன அது?
ப: நானாக ஒன்றும் செய்யவில்லை. வள்ளுவர் சொன்னதை வழி மொழிந்தேன் அவ்வளவுதான். அதாவது வள்ளுவர் சொல்கிறார்,

"நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு"


என்கிறார். முகம் மலர்ந்த சிரிப்பு, ஈகைத் திறன், இனிய சொல் பேசுதல், இகழாது பேசுதல் போன்ற குணங்கள் ஒருவனிடம் இல்லையென்றால் அவன் நல்ல குடியிலேயே பிறக்கவில்லை என்று வள்ளுவர் சொன்னதை நான் அங்கே கூறினேன். அதைச் சொல்லிவிட்டு ஆரம்பித்தேன். அன்றைய நிகழ்ச்சிக்கு அவ்வளவு வரவேற்பு.

கே: உங்கள் சிரிப்பு யோகாவினால் நன்மை பெற்றவர்கள் உங்களிடம் அதுபற்றிச் சொல்லியிருக்கிறார்களா?
ப: நான் டாக்டர் அல்ல. தெரபிஸ்ட் அல்ல. சிரிப்பு யோகா ஸ்பெஷலிஸ்ட். அவ்வளவுதான். வியாதியை குணமாக்குவது இதன் வேலை அல்ல. ஆனால் இதைச் செய்வதால் வியாதி குணமாகும். இந்த அம்பத்தூர் பூங்காவில்தான் நான் சிரிப்பு யோகா செய்வது வழக்கம். நிறையப் பேர் பலன் பெற்றதாக நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்து நன்றி சொல்லியிருக்கிறார்கள்.



கே: வல்லமை இணையதளத்தில் எழுதிய கீதை தொடர் என்ன ஆச்சு?
ப: பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சு) அவர்கள் "பாமரகீதை" என்ற தலைப்பில் ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போல கீதையை சுருக்கமாக எழுதியிருந்தார். நான் அவரது ஆசிபெற்று "சிரிக்கச் சிரிக்க கீதை" என்ற தலைப்பில் நகைச்சுவையாக எழுத முற்பட்டேன். "வல்லமை" இணையதளத்தில் சில அத்தியாயங்கள் எழுதினேன். இன்னும் விரிவாக ஆராய்ந்து எழுத வேண்டும். அதாவது 700 ஸ்லோகங்களுக்கும் அதில் விளக்கம் இருக்க வேண்டும். அதில் சங்கரர், ராமானுஜவர், மத்வர், ஏன் ஓஷோவின் விளக்கமும் இருக்க வேண்டும். அதே சமயம் எளிமையாக, நகைச்சுவையாக இருக்க வேண்டும். என் எதிர்காலத் திட்டங்களில் இதுவும் ஒன்று.

கே: பொதுவாக பிறரைச் சிரிக்க வைப்பவர்களின் வாழ்க்கை துன்பமயமானதாக இருக்கும் என்று சொல்வார்கள். அது சரியா?
ப: அப்படிச் சொல்வதுண்டுதான். ஆனால் நல்ல வேளையாக எனக்கு அப்படி எந்த ஒரு சோகமும் இல்லை. அம்மா, அப்பா, அண்ணா, மன்னி, குழந்தைகள் என்று குடும்பத்துடன் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். "பணம் கொண்டு வரவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான்" என்று ஒருநாள் கூட எங்கள் குடும்பத்தில் யாரும் குறை சொன்னதில்லை. எல்லாருமே என்னைப் புரிந்து கொண்டவர்கள். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தது உண்மையிலேயே நான் செய்த பாக்கியம். தவம். எனக்கு நான்கு அண்ணா. ஒரு அக்கா. எல்லாருக்கும் திருமணம் ஆகி, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆவடியில் அம்மா, அப்பா, அண்ணா, மன்னி, குழந்தைகள் என்று கூட்டுக் குடும்பமாக நாங்கள் வசித்து வருகிறோம். அப்பா ஓய்வுபெற்ற தமிழாசிரியர், எழுத்தாளர். அம்மா இல்லத்தரசி.

கே: "சிரிப்பே கடவுள்" என்கிறீர்கள். எப்படி?
ப: ஏழை, பணக்காரன், மேல்சாதி, கீழ்சாதி, ஆண், பெண் என எந்த வேறுபாடும் சிரிப்புக்குக் கிடையாது. கடவுளுக்கு முன் எல்லாரும் எப்படிச் சமமோ, அதே போன்று சிரிப்பிற்கு முன் எல்லாரும் சமம். அதனால்தான் "சிரிப்பே கடவுள்" என்கிறேன். சரிதானே!

கே: சரிதான். உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி...
ப: "சிரிப்பு யோகா" நிகழ்ச்சிகளை நானும் சித்திரை சங்கர் என்ற நண்பரும் சேர்ந்துதான் நடத்தி வருகிறோம். அவர் பாட்டுப் பாடுவார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பார். நான் யோகா செய்வேன். நெருங்கிய நண்பர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். மற்றும் வெங்கட்ராமன், குருமூர்த்தி, அம்பத்தூர் சத்சங்கத்தினர், லோகல் பத்திரிகையாளர்கள், நிருபர்கள், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என்று பலரும் எனக்கு ஆதரவாக, உந்துசக்தியாக இருந்து வருகின்றனர்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: 2014 முடிவதற்குள் குறைந்தது 10001 நபர்களையாவது ஓரிடத்தில் கூட்டி எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பது முதல் திட்டம். ஜிபரிஷ் மொழி என்பது தியான மொழி வகையில் ஒன்று. ஜிபரிஷ் என்றால் உளறல். ஜிப்பர் என்ற அறிஞர் பெயரால் இது வழங்கப்படுகிறது. நம் உள்ளே இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை வெளியேற்றுவதற்கான ஒரு வழிமுறை இது. ஓஷோ இதை வலியுறுத்தியிருக்கிறார். அதை ஒரு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் - அதாவது எல்லாரும் முழுக்க முழுக்க பொருளில்லாமல் உளற வேண்டும். குத்து விளக்கு ஏற்றுவது முதல், பொன்னாடை போர்த்துவது, சிறப்பு விருந்தினர் வரவேற்பு, பேச்சு என்று எல்லாமே ஜிபரிஷில் இருக்க வேண்டும். என் வாழ்நாளில் ஒரு கோடி மக்களையாவது சிரிக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


ஆன்மீகம் + சிரிப்பு யோகா + நான்
என்னைப் பொருத்தவரையில் ஆன்மீகம் இரண்டு வகை. ஒன்று, 'நேதி... நேதி...' என்று ஒவ்வொன்றையும் விலக்கி விட்டு உண்மையை நோக்கிச் செல்வது. மற்றொன்று எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்தி, செடி, பூ, காய், கனி முதல் எல்லா உயிரையும் தனது உயிராகப் பாவித்து உண்மையை உணர்வது. ஒன்று சூன்யம். மற்றொன்று முழுமை. இரண்டு வழிகளிலும் நமக்கு முன்னோடிகள், மகா ஞானிகள் இருக்கிறார்கள். எனது வழி, இரண்டாவது வழியான அன்பு வழி. ஆனால் நான் அதற்குமுன் தேடித்தேடி பல ஆன்மீகவாதிகளைச் சந்தித்திருக்கிறேன்.

ஆன்மீகவாதி சிரிக்கக் கூடாது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பல ஆன்மீகவாதிகள் முகத்தில் சிரிப்பே இல்லாமல், எப்போதும் கடுகடுவென்று இருக்கிறார்கள். அவர்கள் சிரிப்பையும் சேர்த்துத் துறந்து விட்டார்கள் போல. அப்படியே இந்தக் கடுகடுப்பையும், இறுக்கத்தையும் துறந்திருக்கலாமே என்று தோன்றுகிறது! சிரிக்கவே இல்லை என்றால் அவர் ஆன்மீகவாதியே அல்ல என்றுதான் சொல்வேன்.

பகவான் ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், யோகி ராம்சுரத்குமார், இவர்கள் எல்லாம் சிறந்த நகைச்சுவையாளர்கள். மனம்விட்டுச் சிரித்தவர்கள். சிரிக்க வைத்தவர்கள். ஏன் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், சித்த யோகினி அனந்தாம்பாள் எல்லாம் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்ததாக வாழ்க்கை வரலாறு சொல்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை ஆன்மீகம் தருகிறது. அதையே "சிரிப்பு யோகா"வும் தருகிறது. எனக்குத் தந்தது.

என்னைப் புறக்கணித்தவர்களை, அவமானப்படுத்தியவர்கள், கேலி செய்தவர்களையெல்லாம் கூட எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை இது எனக்குத் தந்தது. என்னைப் பொறுத்தவரை, ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்வதால் ஏற்படும் பலன், சிரிப்பு யோகா செய்வதால் கிடைத்து விட்டது. இது ஆன்மீகப் பாதையில் முன்னேற உந்துததலாக இருக்கிறது.

சிரிப்பானந்தா

*****


நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்
ஒருமுறை சன் டிவியில் எனது சிரிப்பு யோகா ஒளிபரப்பானது. அதில் எனது தந்தை, குடும்பத்தினர் என எல்லாரும் பயிற்சி செய்த க்ளிப்பிங்க்ஸ் காண்பிக்கப்பட்டது. (அதை இங்கே பார்க்கலாம்: www.youtube.com/watch?v=vIUvVXnKUyE). எனது தந்தைக்கு அப்போதுதான் கால் மூட்டில் ஆபரேஷன் ஆகி பந்து மாற்று அறுவை சிகிச்சை செய்து 6 மாதம் ஆகியிருந்தது. எல்லாருடனும் சேர்ந்து 85 வயதான என் தந்தையும் அந்த சிரிப்பு யோகா நிகழ்ச்சியில் எம்பி எம்பிக் குதித்தார். நாங்கள் அதை கவனிக்கவில்லை. வயதானவர்களை நான் குதிக்கச் சொல்ல மாட்டேன். அன்றைய டி.வி. உற்சாகத்தில் அதை மறந்து போய்விட்டோம். அதனால் ஒரு மூன்று மாதத்திற்கு அவரால் நடக்க இயலாமல் போய்விட்டது. பின்னர் சரியாகிவிட்டது. ஆனால் அந்த குதித்த விஷயம் வீணாகப் போகவில்லை. உறவுகளால் கைவிடப்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்புற்ற ஒரு பெண்மணி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்திருக்கிறார். அவர் எதேச்சையாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு "எண்பது வயதான கிழவர் எம்பி எம்பிக் குதித்து வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கும்போது நல்ல உடல்நிலையுடன் இருக்கும் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்" என்று நினைத்து தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். பின் என்னை வந்து சந்தித்து, தனது தற்கொலை எண்ணம் பற்றி, மனம் மாறியது பற்றி தெரிவித்து, சிரிப்பு யோகாவிலும் கலந்து கொண்டு விட்டுச் சென்றார். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பெருமிதம்.

சிரிப்பானந்தா

*****


சிறைக்குள் சிரிப்பு யோகா
வேலூர் பெண்கள் சிறையில் சிரிப்பு யோகா செய்த அனுபவம் மறக்க முடியாதது. வித்தியாசமான அரங்கமும் கூட. அதாவது தரை மட்டத்தில் நாம் இருக்க, கைதிகள் தரைக்குக் கீழ்மட்டத்தில் அமர்ந்திருந்தனர். கிட்டத்தட்ட 700 பேர் இருந்தனர். அதில் ஒரு பெண்மணி நிகழ்ச்சியை மிகவும் ரசித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் வந்த அவர், "சார் இதுநாள் வரை இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதில்லை. இங்கு பலரும் வந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். சிறைச்சாலைக்கு வந்த நாள் முதல் நான் சிரித்ததே இல்லை. இன்றுதான் நான் என்னை மறந்து மனம் விட்டுச் சிரித்தேன். உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் அடிக்கடி வந்து நிகழ்ச்சி நடத்த வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். அவர் முகத்தைப் பார்த்தபோது அவர் மெத்தப் படித்தவர், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர், சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர் என்பது தெரிந்தது. சூழ்நிலையால் அவர் குற்றவாளியாக அங்கு இருக்கிறார்.

தன் நிலை குறித்து மனம் வருந்திக் கொண்டிருந்த அவரது மனதை நெகிழச் செய்யச் சிரிப்பு யோகா காரணமாக அமைந்தது குறித்து நான் மகிழ்ந்தேன். அவர்தான் அன்று நன்றியுரை சொன்னார். கிட்டத்தட்ட 10 பேர் நிகழ்ச்சி முடிந்தும்கூட போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சொன்னார்கள், "சார் எங்கள் மன பாரமெல்லாம் இன்று குறைந்தது. குடும்பத்தைப் பிரிந்து இருக்கிறோமே என்று தினமும் கவலைப்பட்டு அழுவோம். இன்றுதான் சார் சிரித்தோம். இன்று நாங்கள் நிம்மதியாகத் தூங்குவோம். அடிக்கடி வாருங்கள்." என்றனர்.

சிரிப்பானந்தா

*****


சிரிப்பு யோகாவின் வகைகள்
சிரிப்பு யோகாவை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். 1) கைதட்டலுடன் கூடியது. 2) மூச்சுப் பயிற்சியோடு கூடியது. 3) குழந்தைகள் போன்று விளையாடுவது. 4) சிறப்பு சிரிப்புப் பயிற்சி.

ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகள், ஒவ்வொரு விதமான பலன். உதாரணமாக, தேநீர் சிரிப்பு, தேநீர் ஆற்றுவதைப் போல மேலும் கீழுமாகக் கையை வைத்துக் கொண்டு, உடலை வளைத்துச் செய்வது. சில விநாடிகளில் முடிந்து போகும். இதில் சில யோகாசனங்கள் உள்ளன. முதலில் கால்களை அகட்டிக் கொள்கிறோம். பின்னர் கைகளை விரித்து உடலை வலப்புறமாகச் சாய்த்து முழுவதுமாக வளைக்கிறோம். பின் இடப்புறமாகச் சாய்த்து முழுவதுமாக வளைக்கிறோம். பின்னர் டீயை எதிரே உள்ளவர் மேல் கொட்டுவது போல் உடலை பின்னால் வளைத்து பின் முன்னோக்கி வந்து செய்கிறோம். இதனால் உடல் வளைகிறது. இடுப்பு, வயிறு உள்ளே போகிறது. இதனால் உடல்பருமன் வராது. ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். இப்படி ஆட்டோ சிரிப்பு, சிங்கச் சிரிப்பு என்று நிறைய வகைகள் இருக்கின்றன. இவை எல்லாமே சிரிப்போடு கூடவே யோகாவும் இணைந்தவைதான்.

சிரிப்பானந்தா

© TamilOnline.com