தென்றல் பேசுகிறது...
சீனா உலகின் உற்பத்திக்கூடமாகி விட்டது. இன்னதுதான் என்றில்லாமல் காது குடையும் பஞ்சிலிருந்து கடவுளர் படம்வரை சீனத் தயாரிப்புகள் கடைகளில் வந்து குவிகின்றன. நகர்ப்புறமாதலும், வசதிகளும், வாகனங்களும் அங்கே பெருகிவிட்டன. அதற்கேற்ப அவர்களது ஆற்றல் தேவைகள் அதிகரித்துவிட்டன. பல்வேறு ஆஃப்ரிக்க, அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், நிலக்கரி என்று சீனா கணக்கின்றி வாங்குகின்றது. ஆண்டுக்கு 38 பில்லியன் கனமீட்டர் இயற்கை எரிவாயு வாங்குவதற்கு ரஷ்யாவுடன் சீனா தற்போது ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சாரம் தயாரிக்க நிலக்கரியைப் பயன்படுத்துவதால் சீனாவில் காற்று மாசுபடுதல் மிக அதிகமாக உள்ளது. இப்போது இயற்கை எரிவாயுவை அதற்கு மாற்றாகப் பயன்படுத்துகையில் மாசுபடுதல் குறையும். ஆனாலும் சீனாவின் ஆற்றலுக்கான அசுரப்பசி தீராது. காரணம் உலகநாடுகள் எதுவும் அதன் அடிமாட்டு விலைத் தயாரிப்புத் திறனோடு போட்டி போட முடியாததுதான். அதன் காரணமாக அந்நியச் செலாவணி கஜானாவும் அங்கே நிரம்பி வழிகிறது. இன்றைய நிலையில் உலகுக்கே சீனா ஒரு பெரும் சவால்தான்.

*****


செயலூக்கம், போக்கை மடை மாற்றும் திறன், நெடுநோக்கு இவற்றில் புதிய பாரதப் பிரதமர் மோதி, சீனாவின் டெங் சியாவ்பிங்கோடு ஒப்பிடத் தக்கவர் என்று சிலர் கூறுகிறார்கள். இந்தியாவின் பொருளாதார மறுபிறப்பு பிரதமர் மோதியினால் ஏற்பட வலுவான வாய்ப்பு உண்டு என்று 'த எகனாமிஸ்ட்' நம்பிக்கை தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட நம்பிக்கைகளைத் தோற்றுவிக்க முடிந்த காரணத்தினால்தான் இந்தியாவின் எழுச்சிச் சின்னமாகக் கருதி, தனிப் பெரும்பான்மையை அவரது கட்சிக்குக் கொடுத்து மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். பெரிய நம்பிக்கை என்பதற்கு மற்றொரு பெயர் பெரிய எதிர்பார்ப்பு. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே நமது கடமை என்று தமது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார் மோதி. அது வரவேற்கத் தக்கதென்றாலும், செயல்முறையில் மிகக் கடினம். காரணம், மக்களவையில் அவர் பெரும்பான்மை பெற்றபோதும், மாநிலங்களவை அவருக்குச் சாதகமாக இல்லாததுதான். தம்மிடம் இருக்கும் அதே அளவுக்குத் தமது சக அமைச்சர்களிடமும் தேசபக்தி, கடுமையான உழைப்பு, நேர்மை, விரைந்து செயல்படல் போன்ற பண்புகளை மோதியால் தூண்டிவிட முடியவேண்டும். அப்போதுதான் அரசு எந்திரத்தில் காணப்படும் சுணக்கமும், மக்களிடையே காணப்படும் அவநம்பிக்கையும் விலகும். கல்வி, பொருளாதாரம், மருத்துவம், உற்பத்தி, தொழில் இன்ன பிற துறைகளில் சுறுசுறுப்பு ஏற்படும். ஏற்பட்டே ஆகவேண்டும்.

*****


சிரிப்பதையும், சிரிக்க வைப்பதையும் ஒரு சேவையாகச் செய்யும் சிரிப்பானந்தா அவர்களின் நேர்காணல் சிந்திக்கவும் வைப்பது. அதே நேரத்தில் பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் பயன்படுத்தும் சானிடரி நாபிகினைக் குறைந்த விலையில் தயாரிக்கும் முறை மற்றும் எந்திரங்களை பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே கண்டுபிடித்து உலக அளவில் பெருமை பெற்றிருக்கும் முருகானந்தத்தின் வரலாறு விடாமுயற்சிக்கு விளக்கம். தென்றல் சிறுகதைப் போட்டி என்னும் சுகமான சுமையின் பணிகளை முடித்து இதோ, இந்த இதழில் வெற்றியாளர்களை அறிவித்திருக்கிறோம். உலகின் ஏதேதோ மூலைகளிலும் தென்றல் அறியப்பட்டுள்ளது என்பதை இந்தப் போட்டி எமக்குக் காட்டியது. கதைகளைப் படியுங்கள், அவை உங்களை உலுக்கும், மனம் சிலிர்க்கும்.
தென்றல் வாசகர்களுக்குத் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஜூன் 2014

© TamilOnline.com