மார்ச் 29, 2014 அன்று அட்லாண்டாவிலுள்ள லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 26ஆவது ஆண்டு விழா, மார்கரெட் வின் ஹோல்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறுவர்கள் சரவணனும், சஞ்சயும் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு அட்லாண்டா தமிழ்ச் சபையின் அருட்தந்தை. பால்மர் பரமதாஸ் தலைமை தாங்கினார்.
மழலைப் பாடல்கள், தேசப்பற்றுப் பாடல்கள், நடனம், நகைச்சுவை, கவிதை என்று களைகட்டிய நிகழ்ச்சியில், பாரதியாக அஷ்வினும், சேலை கட்டிய தமிழ்ப் பெண்ணாக நேத்ராவும், குண்டக்க மண்டக்க ஜோசியராக சித்தார்த்தும் வந்து வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தனர். மழலையில் தடுமாற்றமில்லாமல் திருக்குறள் சொன்ன ரிஷப், சிலப்பதிகாரக் காட்சியில் கண்ணகியாக நீதி கேட்ட செளமியா இவர்களுடன் நிஷாந்த், சிவமலை, வருண், கயல்விழி ஆகியோர் மனதில் நின்றனர். 'முல்லா' நாடகம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. "ஒளவையார் யார்?" என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.
தமிழ் நாட்டு நதிகள், புலவர்கள், இலக்கியங்கள், கைத்தொழில்கள், பழக்க வழக்கங்கள் ஆகிய தலைப்புகளில், பிள்ளைகள் காட்சிகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். திருமதி. சுசீலா பரமதாஸ் குழந்தைகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். திருமதி. சங்கரி வரவேற்புரை, செல்வன். திருநிறை நன்றியுரை வழங்கினர்.
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |