ஏப்ரல் 5, 2014 அன்று விரிகுடாக் கலைக்கூடத்தின் (Bay Area Fine Arts) திருக்குறள் விழா மில்பிடாஸ் ஜெயின் ஆலயத்தில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் செல்வி. சாரா கெளசிக் கடவுள் வாழ்த்துப் பாட, விரிகுடாக் கலைக்கூட இணை நிறுவனர் திரு. சங்கர் பிரசன்னன் வரவேற்புரையுடன் துவங்கியது. “ஜனனி ஜனனி” பாடலை செல்வி. கீதா சங்கர் தன் வீணையில் வாசித்தார். திருமதி. லதா ஸ்ரீனிவாசனின் கிருஷ்ணலீலா நடனம் பரவசப்படுத்தியது. தொடர்ந்து திருமதிகள் சுபா மற்றும் கெளரியின் மேற்பார்வையில் அரங்கேறிய சாம்ராட் அசோகன் நாடகம் வெகு அழகு. திருமதி. இந்துமதி கணேசனின் ந்ரித்யோல்லசா நாட்டியப் பள்ளி மாணவிகள் திருக்குறள் சொன்ன நவரசங்களை அபிநயத்த போழ்து அரங்கம் அதிசயித்தது. செல்வி. சகானா சேஷாத்ரியின் திருக்குறள் பற்றிய உரை, விருந்தாக அமைந்தது. விரிகுடாப் பகுதியின் பிரபல பாடகர் திரு. வெங்கடேஷ் விஸ்வநாதன் வழங்கிய திரையிசையுடன் கலைநிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அன்று காலை நடந்த திருக்குறள் போட்டியின் நான்கு பிரிவுகளில் பங்கேற்று முதல் பரிசுகள் பெற்ற குழந்தைகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். திருக்குறளைப் பொருளுடன் ஒப்பித்த அனைத்துக் குழந்தைகளுக்கும் சான்றிதழும், பரிசுத்தொகையும் பலத்த கைதட்டலுக்கிடையே வழங்கப்பட்டன. திரு. சாலமன் பாப்பையா, நடிகரும் தமிழ் ஆர்வலருமான திரு. சிவகுமார் ஆகியோரின் அணிந்துரை தாங்கிய விழா மலரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர். ஜார்ஜ் ஹார்ட் வெளியிட, சிறப்பு விருந்தினர் டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் திரு. வேலு ராமன் பெற்றுக்கொண்டார். இம்மலரில் கட்டுரைகளும், சிறுவர்கள் தீட்டிய வள்ளுவர் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. செல்வி. பிரியங்கா பாலகுமார் (14 வயது) தீட்டிய பரிசுபெற்ற ஓவியம் முன்னட்டையை அலங்கரித்தது.
விரிகுடாக் கலைக்கூட நிறுவனர்கள் திரு. திருமுடி துளசிராமன், திரு சங்கர் பிரசன்னன் இருவரின் வழிகாட்டுதலில், திரு. அகஸ்தீஸ்வரன், திருமதி. சித்ரா அகஸ்தீஸ்வரன் மேற்பார்வையில், தன்னார்வத் தொண்டர் குழுக்ககள் பணியாற்ற, இத் திருக்குறள் திருவிழா இனிதாக நடந்தேறியது. பிரபல தொழிலதிபர் திரு. K.B. சந்திரசேகர், திரு. ஜெய் விஜயன் (CIO, Tesla Motors) சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இத் திருக்குறள் விழா நிகழப் பேருதவி அளித்த திரு. வேலு ராமன் விரிகுடாக் கலைக்கூடத்தின் முயற்சியைப் பாராட்டியதோடு, ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற வாழ்த்தினார்.
விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த வளைகுடாத் தமிழ் மன்றம் மற்றும் பாரதி தமிழ்ச் சங்கத் தலைவர்கள் இந்நிகழ்வை வாழ்த்திப் பேசினர். கலைக்கூட நிறுவனர் திரு. திருமுடி துளசிராமன் நன்றியுரை வழங்க விழா நிறைவுற்றது. |