BATM: சித்திரைத் திருவிழா
ஏப்ரல் 26, 2014 அன்று,சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சித்திரைத் திருவிழா ஃப்ரீமான்ட் சென்டர்வில் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக இப்பகுதியின் பத்து உணவகங்கள் கலந்துகொண்ட 'உணவுத் திருவிழா' ஆகும்.

மன்றத் தலைவர் திரு. சோலை அழகப்பன் அவர்களின் தொடக்க உரையுடன் விழா தொடங்கியது. ஃப்ரீமான்ட் நகர மேயர் திரு. பில் ஹாரிசன் , துணைமேயர் திருமதி. அனு நடராஜன், ஓலோனி கல்லூரி செயற்குழு உறுப்பினர் திருமதி. தெரசா ஹாக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். தமிழ் நாட்டின் பாரம்பரிய இசைக்கருவிகளான பறை, உறுமி பற்றிய குறிப்பைக் கூறி, இசைத்துக் காட்டினர் திரு. ஸ்ரீதரன் மைனர் மற்றும் திரு. அருண். தமிழனின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டத்தைத் திரு. வேத நாராயணன் அவர்களோடு, அமெரிக்காவில் பிறந்து வளரும் சிறுவர்கள் செய்து காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது. வாளெடுத்து திருமதி. சுகந்தி அழகுமலை ஆடிய நடனம் சிறப்பாக இருந்தது.

திரு. கோபி தலைமையில் இளையோர் நடத்திய மிருதங்கக் கச்சேரி மெய்மறக்க வைத்தது. கோலாட்டம், மயிலாட்டம், முறமெடுத்து பெண்கள் ஆடிய கிராமிய நடனம், சிறுமியர் சேலை உடுத்தி ஆடிய நடனம் போன்றவை வந்திருந்த அமெரிக்கர்களையும் மெய்மறந்து ரசிக்க வைத்தது. கரகாட்டத்தைச் சிறப்பாக ஆடியதோடு சில சாகசங்களும் செய்தனர் விஸ்வேதா கலைக்குழுவினர். 'சஹானா' இசைக் குழு மெல்லிசை நிகழ்ச்சியில் ரசிகர்களின் விருப்பப் பாடல்களைப் பாடி அவர்களை ஆட வைத்தனர். தமிழ் மன்ற அமைப்பாளர் தயா நன்றி தெரிவித்தார்.

மு. ஜெயக்குமார்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com