முன்னோட்டம்: 'சுதேசி ஐயா'
இணையப் பின்னலில் சிக்கிய நவீன உலகின் குறைகளையும் நம் பாரம்பரியத்தின் நிறைகளையும் ஒருசேர ஏற்கும் வகையில் கூறுவது எளிதல்ல. ஆனால் நாடகத்திலகம் திரு. Y.G. மகேந்திரா இயக்கத்தில் உருவான 'சுதேசி ஐயா' நாடகம் இதைத்தான் செய்ய விழைகிறது. இந்த அறிவியல் சார்ந்த நகைச்சுவை நாடகம், அமெரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வரும் மே-ஜூன் மாதங்களில், சிகாகோ திரிவேணி குழுவினரால் அரங்கேற்றப்பட உள்ளது.

பழமைவாதியான சங்கரராமனுக்கும், நவீன உலகின் பிரதிநிதிகளாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே எழும் சிக்கல்களையும், தர்க்கங்களையும் நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது நாடகம். ஃபேஸ்புக், சாட், லேடீஸ் கிளப், டி.வி. மோகம் என நவீனமயத்தின் தாக்கத்தில் சிக்கியிருக்கும் குடும்பத்தினருக்கு சதா போதனை செய்யும் சங்கர்ராமனை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். ஆனால், தன் நண்பர் விஞ்ஞானி தோத்தாத்திரியின் உதவியுடன் கால எந்திரத்தில் தன் குடும்பத்தை 1945 மதராசுக்கு கடத்திச் செல்கிறார் சங்கர்ராமன். அங்கே என்ன நடக்கிறது? அந்த அனுபவங்கள் குடும்பத்தினரை எப்படி பாதித்தன? தற்செயலாக மகாத்மா காந்தியைச் சந்திக்கும் அவர்களுக்கு நம் பாரம்பரிய பெருமைகள் புரிந்தனவா?

ஆழமான கருத்துகளைச் சிரிப்போடு கலந்து 'சுதேசி ஐயா' உங்களுக்கு விடை தருவார். Y.G. மகேந்திரா ஸ்கைப் மூலமாக வழிநடத்த, திரிவேணி குழுவினர் சிகாகோ, மில்வாக்கீ, மின்னியபோலிஸ் நகரங்களிலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒத்திகை பார்த்து வருகின்றனர். சிகாகோவில் தமிழ்நாடு அறக்கட்டளைக்காகவும், கலிஃபோர்னியாவில் அக்ஷயா டிரஸ்டுக்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விரைவில் உங்கள் ஊர்களில் பவனிவர இருக்கிறார் 'சுதேசி ஐயா'.

மேலும் விவரங்களுக்கு:
ரங்கா - 630.654.4832
கார்த்திக் - 262.546.0622

ரங்கநாதன்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com