அன்ன சத்திரமும், ஆலயமும் கட்டுவதைவிடச் சிறந்தது "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றான் மகாகவி பாரதி. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation-TNF) நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறது. அறக்கட்டளை, சிகோகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, மே மாதம் 24, 25 தேதிகளில் இந்த மாநாட்டைச் சிகாகோவில் Phesant Run Resort, St.Charles, Illinois என்ற இடத்தில் நடத்தவிருக்கிறது.
இந்த மாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து அறிஞர்கள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். விவேக், செல் முருகன், மதுரை முத்து, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், லேனா தமிழ்வாணன், கவிஞர் மகுடேஸ்வரன் போன்றோர் இதில் அடங்குவர். சின்னத்திரை நட்சத்திரங்கள் தீபக், அர்ச்சனா தொகுத்து வழங்கும் இவ்விழாவில், இலக்கியச் சொற்போர், ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பின்னணிப் பாடகர் கார்த்திக் குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். 'சங்கம் முதல் சிலிகான்வரை' என்ற தலைப்பில் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் வழங்கும் சேர்ந்திசை (chorus orchestra) மாநாட்டின் மற்றொரு சிறப்பு அம்சம்.
சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், மாநாட்டு நிகழ்ச்சிகள் கூடுதல் சிறப்பாக அமையவிருக்கின்றன. இதன் முன்னேற்பாடாகத் தமிழ்ச் சங்கம், சிகாகோவின் புறநகர்களான நேப்பர்வில் மற்றும் ஷாம்பர்க் நகரங்களில் சிறப்புக் கண்காட்சிகளை நடத்தியது. இந்தக் கண்காட்சிகளில் பட்டாடைகள், அணிகலன்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் என்று அரங்குகள் இடம் பெற்றிருந்தன. இவற்றுக்குத் தமிழரும் மற்றோரும் வந்திருந்து சேவை நோக்கத்தை அறிந்து பொருளுதவி செய்தனர்.
தமிழ்நாடு அறக்கட்டளை 1974ல் ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து அமெரிக்க மாநிலத் தமிழார்வலர்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பின்தங்கிய கல்வி நிலையங்களுக்குக் கட்டமைப்பு உதவி, கல்வி மேம்பாடு, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, ஆசிரியர் மேற்கல்வி, தகவல் தொழில்நுட்ப கல்வி வசதி, மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான உதவிகள் என்று பலவகைத் திட்டங்களை, நடத்துகிறது. உதாரணமாக, சீர்காழியில் வளர்ச்சி குன்றிய ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கான தங்கும் விடுதி, உணவு, உடை, கல்வி பெறுவதற்கான சிறப்புக் கல்விக்கூடம் போன்றவற்றைச் சமீபத்தில் வழங்கியுள்ளது. வட, தென் ஆற்காடு மாவட்டங்களில், மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் ABC Project என்ற செயல்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.
இந்த நலத்திட்டங்களை விரிவு படுத்துவற்கான நிதி திரட்ட, அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடத்த்தப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் பெறப்படும் நன்கொடைகள் மேற்சொன்ன கல்விப் பணிகளுக்கு வழங்கப்படும்.
இனிய இலக்கிய நிகழ்வுகள், கவின்மிகு கலைநிகழ்ச்சிகள், தரமான தங்கும் வசதி, சுவையான உணவு என்று மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்பாடு ஒருங்கிணைப்பை அறக்கட்டளைத் தலைவர் பி.கே. அறவாழியும், தமிழ்ச் சங்கத் தலைவர் சோமுவும் செய்து வருகிறார்கள். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு.
இந்தச் சேவைக்கு நிதி வழங்கவும், மாநாட்டு நுழைவுச்சீட்டு வாங்கவும், விபரங்களுக்கும்: www.tnfconvention.org.
சேகர் சந்திரசேகர், சிகாகோ |