மே 2014: வாசகர் கடிதம்
ஏப்ரல் தென்றலில், எழுத்தாளர் குமுதினி கட்டுரையில் அவர் இளம் வயதிலேயே எழுதும் திறமை பெற்றிருந்தார் என்பதும், பத்து வயதில் திருமணமானாலும், திடீரென கேட்கும் திறனை இழந்துவிட்டதால், அதையே ஒரு சவாலாகக் கொண்டு, வாசிப்பதில் முழுக் கவனத்தை செலுத்தி, கணவரின் துணையோடு படைப்புக்களை வெளியிட்டார் என்பதும் தெரிந்தது. பெண்கள் கல்வி கற்பதொன்றே ஆண்களுக்கு நிகராக அவர்களை முன்னேற்றும் என்பதை அவர் உறுதியாக நம்பியது அவரின் படைப்புக்களில் தெரிகின்றது. தென்றலுக்கு நன்றி.

கலாக்ஷேத்ராவின் இயக்குநர் ப்ரியதர்ஷினி கோவிந்த் அவர்களின் நேர்காணல் அருமை. அவர் கலாக்ஷேத்ராவின் வளர்ச்சிப் பணிகளை மிகுந்த நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு திருக்குறளையும், உள்வாங்கி நடப்போமேயானால், நாம் தவறே செய்யமாட்டோம் என்ற குறளரசி கீதா அருணாச்சலம் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் பின்தொடருவோம்.

நம்மிடையே இளஞ்சாதனையாளர்கள் பெருகி வருகிறார்கள் என்பது மிக பெருமைப்படக் கூடிய விஷயமாகும். 'விளைநிலம்' நல்ல சிறுகதை. நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு ஈடான தமிழ் வார்த்தைகளை, கதிரவன் எழில் மன்னன், மரு. வரலட்சுமி நிரஞ்சன் தொடர்களில் தெரிந்துகொள்ள முடிகிறது புதினம் நன்றாக ஆரம்பமாகியுள்ளது, சுயம்வரம், இந்தக் கால பெண்களின் மனோபாவத்தின் நிலைக் கண்ணாடியே. மேரிமூர் பூங்கா ஒரு வானவில் அனுபவம் என்பது உண்மையே. மகாபாரதத்தில் தோன்றும் கேள்விகளும், அதற்கான ஆராய்ச்சிகளும் மிகவும் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஹரி கிருஷ்ணன் அவர்களின் ஆதாரத்துடன் கூடிய பதில்களுக்காக அவரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா

*****


ஏப்ரல் தென்றல் இதழில் நீங்கள் குமுதினி பற்றி எழுதியிருந்தீர்கள். அவரது மருமகள் நான். நியூ ஜெர்சியிலிருந்து என் மருமான் எனக்கு கட்டுரைப் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பியிருந்தார். பின்னர் வேறொரு நண்பர் அமெரிக்காவிலிருந்து வரும்போது ஓர் இதழைக் கொண்டுவந்து தந்தார்.

நீங்கள் குமுதினி அவர்களுக்கு இடம் ஒதுக்கியதோடு அவரது சிறுகதை ஒன்றையும் வெளியிட்டிருப்பது கண்டு எனக்கு மகிழ்ச்சி. அவர் தனித்துவம் மிக்கவர் என்பதோடு, பொருள் பொதிந்த நகைச்சுவையிலும் இணையற்றவர். அவர் எந்த வீட்டில் வாழ்நாள் முழுவதும் இருந்தாரோ அதே வீட்டில்தான் நான் வசிக்கிறேன் என்பது உங்களுக்குச் சுவையான செய்தியாக இருக்கலாம்.

அவருடைய நூல்களை மறுபதிப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன். 'சில்லறை சங்கதிகள் லிமிடட்' என்ற கட்டுரைத் தொகுப்பொன்றை 2005ல் அவரது நூற்றாண்டின்போது வெளிக்கொணர்ந்தோம். இளைய தலைமுறை அவற்றை ஆங்கிலத்தில் படிக்க ஆர்வம் காட்டவே என் மகள் ஆஹனா லக்ஷ்மி 'From the Inner Space' நூலை வெளியிட்டார்.

பிற கட்டுரைகள், நேர்காணல்கள், கதைகள் ஆகியவற்றையும் படித்து மகிழ்ந்தேன். இளைய தலைமுறையின் சாதனைகளையும்தான். உங்கள் இதழ் வளமான எதிர்காலம் பெறட்டும். ஆசிரியர் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.

பிரேமா நந்தகுமார்,
ஸ்ரீரங்கம், தமிழ்நாடு.

© TamilOnline.com