சென்னை மாநகர ஆணையர், டி.ஜி.பி., சென்னைப் பல்கலைப் பேராசிரியர், ஜைனத் துறை ஆய்வாளர், எழுத்தாளர் என பல்துறைகளில் தனது தனித்திறமையை நிரூபித்த எஸ். ஸ்ரீபால் மார்ச் 25 அன்று காலமானார். 76 வயதான ஸ்ரீபால், ஏப்ரல் 4, 1938 அன்று சொர்ணபத்திரன்-விஜயலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். லயோலா கல்லூரியின் பொருளாதாரப் பட்டதாரியான இவர், 1960ல் ஐ.பி.எஸ். தேர்வு பெற்றார். சட்டம், ஒழுங்குத்துறை, சிறைத்துறை, உளவுத்துறை, பல்லவன் போக்குவரத்துத் துறை, காவலர் பயிற்சிப் பள்ளி எனப் பல துறைகளில் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய இவர் 1995ல் ஓய்வு பெற்றார். சென்னை காவல் ஆணையராக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர் ஸ்ரீபால்தான். தமிழகக் காவல்துறையை நவீனமாக்கியதில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. மத்திய அரசின் காவல்துறைப் பதக்கம், குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான பதக்கம் உட்படப் பல்வேறு அங்கீகாரங்கள் பெற்றவர். நட்ராஜ் ஐ.பி.எஸ்., விஜயகுமார் ஐ.பி.எஸ். போன்றோர் இவரது சீடர்கள்.
சமண சமூக ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராக இருந்த ஸ்ரீபால், அச்சமயம் பற்றி ஆராய்ந்து பல நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னை பல்கலைக் கழகத்தில், சமணத் துறையில் கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்த இவர். திடீர் மாரடைப்பால் காலமானார். மனைவி டாக்டர் கமலா ஸ்ரீபால் புகழ்பெற்ற மருத்துவர். ’கோகுலம் கதிர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரும்கூட. மகள் ஹேமா ஸ்ரீபால் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர். கலைமாமணி விருது பெற்றவர். மற்றொரு மகள் அமெரிக்காவில் டாக்டராகப் பணிபுரிகிறார். மகன் தொழிலதிபர்.
|