தமிழ்ப் பண்டிதர்கள் `தமிழ் பாஷையை ஒரு குழூஉக் குறியாகச் செய்து விட்டார்கள். அதாவது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும், எழுதியும் தமிழை "குட்டிச்சுவராய்" அடித்து விட்டார்கள். பண்டிதர்களால் தமிழுக்கு நேர்ந்த அவமதிப்பு ஒருபுறமிருக்க, ஆங்கிலம் படித்த தமிழர்கள் தமிழைப் பேசாமலே அதை அவமதிக்கத் தலைப்பட்டனர். இந்த இரண்டு அவலக் கூட்டத்தினிடையே அகப்பட்டுக்கொண்டு, தமிழ் தவித்துக் கொண்டிருக்கிறது. பண்டிதர்கள் கூடினால் விளங்காத தமிழ்! இங்க்லீஷ் படித்த தமிழர்கள் கூடினால் விளங்காத இங்க்லீஷ்! இந்தக் கட்டுப்பாடான குறும்புத்தனத்தைத் "தவிடுபொடி"யாக்கிய ஏகபோக பாக்கியமும் பாத்தியமும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கே உரித்தானதாகும். பாமரத் தமிழுக்குப் பெருமையும் பொலிவும் பலமும் உண்டு என்பதை நிலைநாட்டிய புண்ணியத்தை, எவரும் நாயுடு அவர்களுடன் பங்கு போட்டுக்கொள்ள முடியாது.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பிறகு அது என்ன பிரமாத வித்தை என்று பலர் பேசினார்கள். ஆனால் கொலம்பஸுக்கு முன் அமெரிக்காவை யாரும் காணவில்லை என்பதொன்றே, அவர்களுடைய வாயை அடைக்கப் போதுமான ஆதாரமாகும். எல்லோரும் அறியக்கூடிய எளிய தமிழில், பெரிய விஷயங்களை, சிக்கலான சங்கதிகளை, பலவிதமாகப் பேசமுடியும் என்பதை நாயுடு அவர்கள் விளக்கமாகக் காண்பித்துக் கொடுத்தார். இதில் நாம் அறிய வேண்டியது அவரது தாய் பாஷை தெலுங்கு என்பதைத்தான்.
வ.ரா. எழுதிய "தமிழ்ப் பெரியார்கள்" நூலிலிருந்து... |