'நவசக்தி' பத்திரிகையில் எனக்கு ஆற்பட்டிருந்த வேலைகளில் ஒன்று, காந்திஜியின் கட்டுரைகளை மொழி பெயர்த்தல். பொதுவாக என்னுடைய மொழிபெயர்ப்பு திரு.வி.க.வுக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை மகாத்மா தமது கட்டுரையொன்றில், பரம்பொருளைக் குறிப்பிடும் இடத்தில் 'லார்ட் சிவா' என்று எழுதியிருந்தார். தமிழ் மொழிபெயர்ப்பில் நான் 'சிவபெருமான்' என்று நியாயமாகப் போட்டிருக்க வேண்டும். எதனாலோ - காரணம் எனக்கே தெரியவில்லை - "இறைவன்" என்று எழுதிவிட்டேன். ஆங்கிலத்தில் கட்டுரையைப் படித்து தமிழ் மொழிபெயர்ப்பையும் படித்த திரு.வி.க.வுக்கு என் பேரில் சந்தேகம் உண்டாகிவிட்டது.
அந்தரங்கமாக என்னை அழைத்து என்னுடைய மதக்கோட்பாடுகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தார். "உனக்கு எந்த மதத்தில் பற்று?" என்றார். "ஒரு மதத்திலும் பற்று கிடையாது. மதங்களைப் பற்றிய உண்மையை நான் இன்னும் நன்கறியவில்லை" என்றேன். "எந்த மதத்தின் பேரிலாவது கோபம் உண்டா?" என்று கேட்டார். "இல்லவே இல்லை. மதம் என்னை என்ன செய்தது?" என்றேன். "ஒருவேளை சிவனை உனக்குப் பிடிக்காதோ?" என்று கேட்டார். "சிவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது நெற்றிக் கண்ணை மட்டும்தான் அவ்வளவாகப் பிடிக்காது. இதெல்லாம் எதற்குக் கேட்கிறீர்கள்" என்றேன்.
அவர் விவரம் சொன்ன பிறகு, "சிவன் என்பதற்குப் பதிலாக 'இறைவன்' என்று போட்டதினால் சிவனைத் தூக்கிதானே வைத்திருக்கிறேன்! சிவன்தான் இறைவன் என்று ஏற்படுகிறதல்லவா?" என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டேன்.
திரு.வி.க.வுக்கு உண்மையிலேயே மதவேற்றுமை உணர்ச்சியே கிடையாது. எனக்கு ஒருவேளை அந்த மாதிரி பைத்தியக்கார வேற்றுமை உணர்ச்சிகள் இருக்குமோ என்று சந்தேகித்துத்தான் மேற்கண்டவாறு குறுக்கு விசாரணை செய்தார். அம்மாதிரி ஒன்றும் இல்லை என்றதும் பெரிதும் திருப்தி அடைந்தார்.
"கல்கியின் சிறந்த கட்டுரைகள்" நூலிலிருந்து... |