மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும்
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக்களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை என்ன, திருதிராஷ்டிரன் வகித்தததாகச் சொல்லப்படும் பதவிதான் என்ன என்பதைப் பற்றிச் சில கேள்விகளை எழுப்பினோம். ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். இதிகாசம் நெடுகிலும் திருதிராஷ்டிரன் 'அரசர்க்கரசனே, சக்ரவர்த்தியே, ராஜனே' என்றெல்லாம் அழைக்கப்படுகிறான்; துரியோதனனும் அவ்வாறு அழைக்கப்படுகிறான். ஆனால், இவர்கள் வகித்த பதவிக்கு இந்த அழைப்பு மொழி ஆதாரமாக முடியாது. வனவாச காலத்தில், அரசிழந்து வனத்தில் இருந்த தருமனையும் அவன் தம்பியர் நால்வரையும் கூடத்தான் 'பாரத, மன்ன, அரச, மன்னர் மன்னா' என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஐவருமே சூதாட்டத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆகவே, பிறர் அழைக்கும் விதம், அவரவர் வகித்துக் கொண்டிருக்கிற பதவியின் அடையாளம் என்பதைக் காட்டிலும், ஒரு மரபு அல்லது வழக்கம் என்றுதான் சொல்ல முடியும்.

இப்போது அர்ஜுனனோடு தொந்த யுத்தம் செய்வதற்குக் கர்ணன் விரும்பிய அந்த ஆட்டக் களத்துக்குத் திரும்புவோம். அந்தச் சமயத்தில், கர்ணனுக்கு அங்கநாட்டு மன்னனாகப் பட்டம் சூட்டுவதற்கே அவனால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லையே! இந்த விஷயத்தில் கும்பகோணத்துத் தமிழ்ப்பதிப்பான பாரதம் சொல்வதைப் பார்ப்போம். துரோணருடைய மாணவர்கள், தாம் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலையில் செய்து காட்டிய ஆட்டக் களத்திலே பிரவேசித்த கர்ணன், அர்ஜுனனைத் தொந்த யுத்தத்துக்கு அழைக்கிறான். இதற்கும் முன்னால், களத்தில் நுழைந்ததும் கர்ணன் பேசத் தொடங்கிய முதல் வாக்கியம் "அர்ச்சுனா! நீ என்ன காரியம் செய்தாயோ அதற்கு மேற்பட்ட செய்கையை, பார்த்திருக்கும் மனிதர் முன்னிலையில் செய்யப் போகிறேன். உன்னைப் பற்றியே நீ கர்வப்படாதே” என்பதுதான். (கும்பகோணப் பதிப்பு, தொகுதி 1, ஆதி பர்வம், அத். 146, பக். 546) அதாவது, அர்ஜுனன் யாருடனும் யுத்தம் செய்யாமல், தான் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலயில் 'செய்து காட்டினான்'. இன்றைய மொழியில் சொல்வதானால், டெமான்ஸ்ட்ரேட் செய்தான். அப்படியானால் "நீ என்ன காரியம் செய்தாயோ அதற்கு மேற்பட்ட செய்கையை, பார்த்திருக்கும் மனிதர் முன்னிலையில் செய்யப் போகிறேன்" என்பதற்கு என்ன பொருள் வருகிறது? கர்ணனும், அர்ஜுனன் செய்ததைப் போலவே தான் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலையில் செய்துகாட்டப் போகிறான் என்பதுதானே? இந்த நிலையில், கர்ணன் பங்கேற்கத் துரோணர் அனுமதி கொடுக்கிறார். "கர்ணன், துரோணரால் அனுமதிக்கப்பட்ட பிறகு, அங்கே அர்ச்சுனன் செய்தவற்றையெல்லாம் செய்தான்" (மேற்படி, பக். 547). துரோணர், டெமான்ஸ்ட்ரேஷனுக்கு அனுமதியளித்தார். கர்ணன் அவ்வாறு செய்து காட்டியதும், துரியோதனன் அவனை அணுகி, நான் உன் நட்பை விரும்புகிறேன்; நீ என்னையும் கௌரவர்களுடைய ராஜ்யத்தையும் உன்னிஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்" (மேற்படி.) இப்போது, தன்னிடம் பேசிய துரியோதனனுக்கு பதில் சொல்லும்போது கர்ணன், "பிரபுவே! நான் அர்ச்சுனனுடன் தொந்த யுத்தம் செய்ய விரும்புகிறேன்" (மேற்படி) என்று சொன்னான்.

இப்போது, துரியோதனன், 'நீ என்னை உன்னிஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று சொன்னது சரியே. ஏனெனில், அவனுக்கு அவன்மீது உரிமையிருக்கிறது. ஆனால், 'கௌரவ ராஜ்ஜியத்தை' என்றொரு இலவச இணைப்பைக் கொடுத்தான் பாருங்கள்.... அங்கேதான் அவனுக்கு உரிமையில்லாத ஒன்றை, உரியவர்களின் சம்மதத்தைப் பெறும் முன்னரே சொல்லியிருக்கிறான். சற்றுப் பொறுங்கள். இதை விளக்குகிறேன். இப்போது, தொந்த யுத்தம் அல்லது துவந்த யுத்தம் என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது. துவந்தம், சங்குலம் என்று யுத்தம் இருவகைப்படும். சமமானவர்களுக்கிடையில் நடப்பது துவந்த அல்லது தொந்த யுத்தம். தேராளி, தேராளியுடன்; யானை வீரன், யானை வீரனுடன்; குதிரை வீரன், குதிரை வீரனுடன்; வில்லாளி, வில்லாளியுடன்... இப்படிக் கருவியாலும், ஏறியிருக்கும் வாகனத்தாலும், மற்ற எல்லா விதங்களிலும் சரிக்குச் சரி சமமாக இருப்பவர்களுக்கு இடையில் நடப்பதே தொந்த யுத்தம். இவ்வாறல்லாமல் free for all முறையில் நடப்பது சங்குல யுத்தம். இது, யுத்த களத்தில், மன்னர்களோடு மன்னர்கள் மோதிக்கொள்ளும் நிலையில் உச்சகட்டப் போராக நடைபெறுவது. இது தற்காலத்திலும் உண்டு. இன்ஃபன்ட்ரி எனப்படும் காலாட்படையினர் மோதுகையில், நேருக்கு நேர், அருகருகே நின்று போராடும் சமயத்தில் பயன்படுத்துவதற்காகத்தான், ஒவ்வொரு குண்டாகச் சுடும் துப்பாக்கிகளின் முனையில் பயனட் அல்லது கத்தி பொருத்தப் பட்டிருந்தது. இப்போது சடசடசடவெனச் சுட்டுத் தள்ளும் துப்பாக்கிகளுக்கு அது தேவையில்லாமல் போய்விட்டது.

கதைக்குத் திரும்புவோம். வெறுமனே வித்தைகளை மக்களுக்கு முன்னிலையில் செய்து காட்டத்தான் கர்ணனுக்கு துரோணர் அனுமதி வழங்கினார். கர்ணனும் தொடக்க காலத்தில் துரோணருடைய சீடனே. பின்னர் அவன் துரோணரிடம், 'நான் அர்ச்சுனனை எதிர்க்க விரும்புவதால் எனக்கு பிரமாத்திர வித்தையைக் கற்பிக்க வேண்டும்' என்று வெளிப்படையாகவே, தான் கற்பதன் நோக்கம் அர்ஜுனனை எதிர்ப்பதற்காகத்தான் என்று சொல்லியே கேட்டபடியால், ஒரே குழுவுக்குள் யுத்தக் கலகம் விளைவதை அனுமதிக்க முடியாதவராகிய துரோணர், பல காரணங்களைக் காட்டி மறுத்ததன் பிறகுதான், கர்ணன் பரசுராமரிடத்தில் பொய் சொல்லி, சீடனாகச் சேர்ந்தான். ஆகவே, கர்ணனும் துரோணரின் மாணவன்தான். அவனுக்கு அவர் அவன் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலையில் செய்து காட்ட அனுமதி கொடுத்ததில் எந்தப் பிறழ்வும் ஏற்படவில்லை.

ஆனால், இப்போதோ கர்ணனும் துரியோதனனும் ஒன்றாகி விட்டார்கள். உண்மையில், கர்ணன் துரோணரிடத்தில் பயின்ற காலத்திலேயே, சொல்லப் போனால், அதற்கு முன்னரேயே கூட துரியோதனனுடைய நெருங்கிய நண்பன்தான். இந்த உண்மையை யுத்தம் முடிந்ததன் பிறகு வரும் சாந்தி பர்வத்தில்தான் காண முடியும். இருக்கட்டும். இப்போது, திடீரென்று நட்பு பூண்ட பாவனையில் இருவரும் பேசிக் கொள்வதும், ஒருவரை ஒருவர் உற்சாகப் படுத்திக் கொள்வதும் அமளி துமளிப்பட, இப்போது "நான் அர்ச்சுனனுடன் தொந்த யுத்தம் செய்ய விரும்புகிறேன்" என்று சதுரங்கக் காய் நகர்த்துகிறான் கர்ணன். இதுவோ, கற்ற வித்தைகளைச் செய்து காட்டும் ஆட்டக் களம். சண்டைக்கான அமர்க்களமன்று. அமர்-களம் என்கிறேன். இப்போது சொல்லும் பொருளிலில்லை! சரி.

இந்தச் சமயத்தில், 'இவன் மன்னனில்லை. எல்லா வகையிலும் சமமானவர்களுக்கிடையே மட்டுமே அனுமதிக்கப்படும் துவந்த யுத்தத்துக்கான அனுமதியை இவன் பெறமுடியாது என்றால், இவனை மன்னனாக்கி விடுகிறேன். அதன் பிறகு இவனும் அர்ஜுனனும் சமமாகி விடுவார்கள்' என்று சொன்ன துரியோதனன், உண்மையிலேயே அப்படியொரு முடிவெடுக்க உரிமையுள்ளவனாக இருந்திருந்தால், தன் சுயவிருப்பத்தின் பேரிலல்லவா அங்க தேசத்தின் அரசனாகக் கர்ணனை நியமித்திருக்க வேண்டும்? கும்பகோணம் பதிப்பு சொல்வது: "இந்த அர்ச்சுனன் ராஜனல்லாதவனோடு யுத்தம் செய்ய விரும்பானாயின், அந்தக் காரணம் பற்றியே நான் இந்தக் கர்ணனை அங்க தேசத்தின் ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்கிறேன்' என்று சொன்னான்" (பக். 548). பிறகு துரியோதனன் அப்படியே நேரடியாகக் கர்ணனுடைய பட்டாபிஷேகத்தை நடத்தியிருப்பானாயின், நான் இப்போது எழுப்பப் போகும் கேள்விக்கு இடமேயில்லை. ஆனால் என்ன செய்தான்? "பிறகு, ராஜாவான த்ருதராஷ்டிரனையும் பிதாமகராகிய பீஷ்மரையும் அனுமதி கேட்டுக் கொண்டு, அபிஷேகத்துக்கு வேண்டிய சாமக்கிரிகளைப் பிராமணர்களைக் கொண்டு சேகரித்து......." அதன் பிறகே கர்ணனுக்கு அங்க தேசத்தரசனாக மகுடாபிஷேகம் செய்விக்கிறான்.

இப்போது என் கேள்வி இதுதான். துரியோதனன் அரசனாக இல்லாவிட்டாலும், இளவரசனாகவாவது இருந்திருந்தால், தன் விருப்பப்படி முடிவெடுக்க இயலாதவனா? சரி போகட்டும். தந்தை என்ற முறையில் திருதிராஷ்டிரனிடம் அனுமதி பெற்றான். அது போதாதோ? திருதிராஷ்டிரன் முழுமையான தகுதிபெற்ற மன்னன் என்றால் அவனிடம் பெற்ற அனுமதி போதாதோ? பிதாமகராகிய பீஷ்மரிடம் எதற்காக அனுமதி பெற வேண்டும்? அவர்கள் அனுமதித்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவனுக்குத் தந்தையிடம் பெற்ற அனுமதி போதாமல், பீஷ்மரிடமும் பெறவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? முக்கியமாக, இரண்டு பேர் ஒன்றிணைந்து அனுமதிக்க வேண்டிய தேவை என்ன?

இதை என் ஆறாவது கேள்வியாக வைத்துக் கொள்ளுங்கள். கேள்விகளால் குடைந்தபடிச் சென்றாலொழிய சத்திய தரிசனம் கிட்டுவது இயலாது என்பதால் இந்தக் கேள்விக் கணைகளை இன்னும் சற்று காலத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்—விரைவில் விடையளிப்பேன்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com