மேகலா இராமமூர்த்தி
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். தந்தையார் முனைவர் இராம. இராமமூர்த்தி தமிழ்ப் பேராசிரியர் என்பதால் தமிழார்வம் இளமையிலேயே ஏற்பட்டுவிட்டது. காரைக்கால் 'விவேகானந்தர் வாலிபர் சங்கம்' நடத்திய திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் தனது பத்தாவது வயதில் 1330 திருக்குறளையும் ஒப்பித்து பொற்கிழியைப் பரிசாகப் பெற்றார். கணினித்துறைப் பேராசிரியாய்ச் சிலகாலம் பணியாற்றிய போது, முனைவர் சத்தியசீலன், திரு. அறிவொளி, போன்ற தமிழறிஞர்கள் தலைமையில் பட்டிமன்றங்களில் பேசியதைப் பொற்காலம் என்கிறார். காரைக்கால் பண்பலை வானொலியில் (FM Radio) அறிவிப்பாளர், நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணி செய்ததுண்டு. திருமணத்திற்குப் பின் 2003ம் ஆண்டு அமெரிக்கா வந்து, ஹவாயிலுள்ள ஹானலூலூவில் ஓராண்டு வசித்த பின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள தாம்பாவிற்குக் குடிபெயர்ந்தார். தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து தமிழ் வகுப்புக்களை நடத்தினார். அங்கே நடந்த தமிழ் இலக்கியக் கூட்டத்தில் குறுந்தொகை, புறநானூறு பாடல்களைச் சுவைபடப் பகிர்ந்துகொள்வார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009ம் ஆண்டு விழாக்களில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றுள்ளார்.

மேகலா 2009ல் ஆபர்ன், அலபாமாவுக்குக் குடிபெயர்ந்தார். தமிழர் அதிகமில்லாத இந்த இடம் எழுத்தார்வத்தைத் தூண்டிவிட, அதற்குத் தீனி போடுவதாய் 'வல்லமை' அமைந்தது. தமிழார்வலர் நிரம்பிய மின்னஞ்சல் குழுமங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில், 'புறநானூற்றுவழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் உரையாற்றியது குறிப்பிடத் தகுந்தது (இதைக் காண). தற்போது தலைநகரத் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க conference call மூலம் சிலப்பதிகார வகுப்புகளை ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்திவருகிறார். இவரது வலைப்பதிவு: manimidaipavalam.blogspot.com. திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்களோடு உரையாடியதிலிருந்து...

*****


கே: எம்.ஏ. தமிழ் பயின்று கணினியும் கற்றது வித்தியாசமானதாக இருக்கிறதே. எப்படிச் செய்யத் தோன்றியது?
ப: நான் கல்லூரியில முதல்ல MCA தான். அதுக்கப்புறம், கல்லூரியில கணினித் துறைப் பேராசிரியராப் பணிசெஞ்சிட்டிருந்தப்பதான் தொலைதூரக் கல்வி வழியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. படிச்சேன். காரணம், தமிழ்ல சிறந்த பேச்சாளராவும், எழுத்தாளராவும் வர விரும்பின எனக்கு, என்னோட தமிழறிவையும், புலமையையும் மேம்படுத்த முறையான தமிழ்க்கல்வி அவசியம்னு தோணிச்சு; அதோட, இயல்பாவே எனக்கிருந்த தமிழார்வம், எங்க அம்மா அப்பாவோட தூண்டுதல் எல்லாமும் சேர்ந்துதான் தமிழ் முதுகலைப் படிப்புக்கு வழி வகுத்துச்சு.



கே: இப்போது கணினித் துறையில் நீங்கள் பணி செய்கிறீர்களா? எங்கே என்னவாக?
ப: இப்ப நான் கணினித்துறையில பணி செய்யல. குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிச்சுக்கிட்டு வேலையும் பாக்க நெனச்ச எனக்கு நான் ஏற்கனவே செஞ்சுட்டிருந்த 8 to 5 கணினி வேலை சரிப்பட்டு வரல. அதனால குடும்பம், வேலை ரெண்டையும் பாலன்ஸ் செய்யற மாதிரி ஒரு வேலை வேணும்னு நெனச்சேன். மெடிகல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் துறையில பட்டயப் படிப்பு படிச்சேன். இப்ப மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷனிஸ்டா வீட்டிலிருந்தபடியே வேலை செய்யறேன். குழந்தைங்க கொஞ்சம் வளந்த பிறகு திரும்பவும் கணினித்துறையிலேயே பணியைத் தொடரவும் திட்டம் இருக்கு.

கே: பத்து வயதிலேயே அத்தனை குறள்களையும் மனப்பாடமாகக் கற்றீர்கள். பின்னால், அவற்றில் ஏதாவதொன்றன் பொருளை வாழ்க்கையில் அனுபவிக்கும்போது, "ஆஹா, வள்ளுவர் இப்படிக் கூறியிருக்கிறாரே!" என்று நினைத்துப் பார்க்க நேர்ந்ததுண்டா?
ப: நெறைய! உதாரணமா, ஏதாவதொரு சங்கடமோ, துன்பமோ எம் மனச வருத்தறப்போ, "இன்பத்தை விரும்பாதவனாய், துன்பம் வாழ்வில் இயல்பானது என்ற பக்குவத்தோடு இருப்பவனைத் துன்பம் துன்புறுத்துவதில்லை"ங்கற வள்ளுவப் பேராசானோட வைர வரிகள் பளிச்சுன்னு மனசுல தோணும். அதுவே எனக்குப் பெரிய ஆறுதலாவும், வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைக்கிறதாவும் இருக்கும்; மனசும் வருத்தத்திலேர்ந்து பெருமளவு விடுபடறத நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன்.

அந்தக் குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
(குறள்: 628)

அதேமாதிரி, இன்றைய கணினி யுகத்தில நாம பல பேரை நேர்ல பாக்காமலே, பழகாமலே அவங்க எழுத்துக்கள் மூலமாவோ அல்லது அவங்க ரசனைகளால ஈர்க்கப்பட்டோ நண்பர்கள் ஆக்கிக்கிறோம். இது சரியான அணுகுமுறையான்னு சில சமயங்கள்ல எனக்குச் சந்தேகம் வர்றதுண்டு. அந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல, 'ஒத்த ரசனையும், ஈடுபாடும் கொண்டவங்களோட நட்பு கொள்றதில எந்தத் தப்பும் இல்ல'ங்கற பொருள் தர்ற குறள் ஒண்ணு என் ஞாபகத்துக்கு வரும்; சந்தேகம் தீந்துடும்!

நட்பின் இலக்கணம் கூறும் அந்தக் குறள்…
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
(குறள்: 785)

"நட்புச் செய்வதற்குத் தொடர்பும், பழக்கமும் தேவையில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்" அப்படிங்கறார் வள்ளுவர்.

இணைய நட்புக்கள் எல்லாமே இந்த ரகத்தைச் சேர்ந்தவைதானே! கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையாருக்கும் அந்தக் காலத்தில் ஏற்பட்ட முகமறியாத அகமொத்த நட்பைக்கூட நாம இதுக்கு உதாரணமாச் சொல்லலாம்.



கே: நீங்கள் எண்ணி எண்ணி வியக்கும் குறள் எது, ஏன்?
ப: ஒண்ணா, ரெண்டா? அந்தப் பட்டியல் ரொம்பப் பெருசு! ரெண்ட மட்டும் இங்க பகிர்ந்துக்கறேன்...

'உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, அதற்குப் பொருந்திய வகையில் நாமும் நடந்துகொள்வதே அறிவு' - இதுதான் வள்ளுவர் அறிவுக்குத் தரும் விளக்கம். இதைவிடச் சுலபமா 'அறிவை' யாரும் விளக்கிட முடியாதுங்கறது என் எண்ணம்!

எவ்வ துறைவது உலகம் உலத்தோடு
அவ்வ துறைவது அறிவு.
(குறள்: 426)

"When in rome do as the romans do"ன்னு ஓர் ஆங்கிலப் பழமொழி இருக்கில்லையா? அது இந்தக் குறளோட பிரதிபலிப்புதான்.

இன்னொரு குறள்…. யாராவது நமக்கு (ஏதாவது) கெடுதல் செஞ்சுட்டாங்கன்னா அவங்களச் சந்தர்ப்பம் கெடக்கறப்பப் பழிவாங்கிடணும்னு துடிக்கறதுதான் சாதாரண மனுஷ இயல்பு இல்லையா? இந்தப் பழிவாங்கற குணத்தை ஊக்கப்படுத்தற வகையிலே "கண்ணுக்குக் கண்", "பல்லுக்குப் பல்னு" எத்தனையோ பழமொழிகள் வேற இருக்கு. ஆனா முதிர்ந்த அறிவாளியும், சிறந்த சிந்தனையாளருமான வள்ளுவர் சொல்லித்தர்ற பழிவாங்கும் முறை இது இல்ல.

"நமக்குக் கெடுதல் செஞ்சவங்களுக்கும் நல்லதையே திருப்பிச் செய்யலேன்னா நாம சான்றோர்னு சொல்லிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு"ன்னு கேள்வி எழுப்பறார் அவர்.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
(குறள்: 987)

இப்படியெல்லாம் நம்ம வள்ளுவரைத் தவிர வேற யாரல சிந்திக்க முடியும் சொல்லுங்க!

கே: பன்னாட்டுப் புறநானூறு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அனுபவம் குறித்துக் கூறுங்கள்.
ப: கிடைத்தற்கரிய பெரும் வாய்ப்பு அது. தமிழகத்தின் புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்திருந்த தமிழறிஞர்களான முனைவர் மருதநாயகம், முனைவர் அறிவுநம்பி, முனைவர் முருகரத்தினம், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செஞ்சிருக்கிற திருமதி. வைதேகி ஹெர்பர்ட் இவங்களையெல்லாம் சந்திச்சது என் வாழ்க்கையில மறக்கமுடியாத இனிய அனுபவம். புறநானூற்று மாநாடுங்கறதால வந்தவங்க அத்தனை பேருமே புறநானூறு பத்திதான் உரை நிகழ்த்தினாங்க.

புறநானூற்றிலே சொல்லப்பட்டுள்ள அரசியல் சித்தாந்தங்கள் பத்தி நான் பேசினேன். நீர் மேலாண்மை குறித்துக் 'குடபுலவியனார்' சொன்ன கருத்து, குடிமக்களிடம் அதிகப்படியா வரிவாங்கக் கூடாதுங்கறதை வலியுறுத்தி 'வெள்ளைக்குடி நாகனார்', 'பிசிராந்தையார்' போன்ற புலவர்கள் அரசர்களுக்கு எடுத்துச் சொன்ன ஆலோசனைகள் இவைகளைப் பத்தியெல்லாம் விளக்கிச் சொன்னேன். எங்க அமர்வை நெறியாள்கை செய்த கவிஞர் அறிவுமதி என்னோட உரை சிறப்பா இருந்ததுன்னு குறிப்பிட்டுப் பாராட்டினது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது!

கே: உங்களுக்குப் பிடித்த புறநானூற்று வரி, அதன் பொருள் மற்றும் சிறப்பு...
ப: திருக்குறள் மாதிரியே புறநானூறும் தமிழரின் பண்பாட்டுக் கருவூலம்னு சொல்லுவேன். அதில வெறும் போர் பத்தின செய்திகளும், அரசர்களைப் புலவர்கள் அளவுக்கு மீறிப் புகழ்ந்து பாடின பாட்டுக்களும்தான் இருக்குன்னு நெறய பேர் நெனச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா அது உண்மையில்ல. நீதி தவறுகிற அரசர்களுக்குப் புலவர்கள் நல்ல அறிவுரை கூறித் திருத்தற பாடல்களுக்கும் புறநானூற்றுல பஞ்சமில்ல. இப்படிப் புலவர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்றதுக்குச் 'செவியறிவுறூஉ'ன்னு பேரு. எனக்குப் பிடிச்ச, கோவூர்க் கிழாரோட பாட்டு ஒண்ணு…

சோழ அரசர்குடியில பிறந்த நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் தீராத பகை. நெடுங்கிள்ளியை ஒழிச்சுக்கட்டணும்னு போருக்குக் கெளம்பறான் நலங்கிள்ளி. அப்ப அவனோட அரசவைக்கு வர்றார் கோவூர்க் கிழார்ங்கற புலவர். நலங்கிள்ளிக்குக் கோவூர்க் கிழார் மேல நல்ல மதிப்பு உண்டு. அதனால அவர அன்போட வரவேற்கிறான். அவரும் அவனுக்கு வணக்கத்தச் சொல்லிட்டு, "எங்கப்பா இவ்வளவு அவசரமாக் கெளம்பற?" என்று கேக்கறார். அவனும் தான் போருக்குப் புறப்படற செய்திய அவர்கிட்ட சொல்றான்.

அதைக் கேட்டு சிரிச்ச புலவர், "ஏம்பா! நீ சண்டபோடப் போறியே ஒருத்தனோட…… அவன் பனம்பூ மாலை அணிஞ்ச சேரனோ அல்லது வேப்பம்பூ மாலை அணிஞ்ச பாண்டியனோ இல்ல; ஒன்னப் போலவே ஆத்தி (ஆர்) மாலை அணிஞ்ச சோழர் குடியில பிறந்தவன்தான்! அப்படியிருக்கும்போது நீ அவனோட சண்டைக்குக் கெளம்பறது நல்லாவா இருக்கு? ஒனக்கு ஒண்ணு சொல்லட்டுமா? ஒங்க ரெண்டு பேர்ல யார் தோத்தாலும் தோக்கப் போறதென்னவோ சோழர் குடிதான். அதுமட்டுமில்ல. போர்னு வந்துட்டா நீங்க ரெண்டு பேரும் ஜெயிக்கறதும் நடக்காத காரியம்!"

"ஒண்ணு மட்டும் உறுதி! உங்களோட இந்தச் சண்டையால நெஜமாவே மகிழ்ச்சி அடையப்போறது யார் தெரியுமா? எதிரி நாட்டு அரசர்கள்தான்! அதனால ஒங்க சோழ நாட்டுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தச் சண்டைய விட்டுடுப்பா"ன்னு நலங்கிள்ளிக்குப் புத்திமதி சொல்றார் அந்தப் புலவர்.

அதக் கேட்ட நலங்கிள்ளிக்குப் புலவர் சொல்றதுல இருக்கற நியாயம் புரிஞ்சுது. அவனும் போரை நிறுத்தினாங்கற செய்தியை நமக்குப் புறநானூறு சொல்லுது.

இரும்பனை வெண்தோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோ னல்லன்
நின்னகண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே
இருவீர் வேறல் இயற்கையு மன்றே, அதனால்
குடிப்பொரு ளன்றுநும் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே."
(புறம்: 45)

சோழர்களின் இன ஒத்துமையை வலியுறுத்தும் இந்தப் பாட்டு, மனித இனம் முழுசுக்கும் பொருந்தக் கூடியதாவும், எல்லாரும் பின்பற்றவேண்டிய ஒன்றாவும் இருப்பது இதன் சிறப்பம்சம், இல்லையா?



கே: உங்கள் குழந்தைகள் தமிழார்வம் கொண்டிருக்கிறர்களா?
ப: நிறையவே! எங்க அப்பா ஒரு தமிழ்ப் பேராசிரியர்ங்கறதால இளமையிலேயே எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. எங்கிட்ட இருக்கிற அந்தத் தமிழார்வத்தையும், ஈடுபாட்டையும் என் குழந்தைகளிடமும் என்னால பாக்க முடியுது. என் மகள் நிவேதிதாவுக்கு 9 வயசு ஆகுது. அவ நல்லாத் தமிழ் பேசுவா; எழுதுவா; மகன் நரேனுக்கு 2 வயசு. அவனும் இப்பவே நல்லாத் தமிழ் பேசறான். லேட்டஸ்ட் தமிழ் சினிமாப் பாட்டுக்களெல்லாம் அவங்க ரெண்டு பேருக்கும் அத்துபடின்னா பாத்துக்கங்களேன்.

கே: தமிழால் ஏற்பட்ட நெஞ்சைத் தொட்ட அனுபவம் ஒன்று....
ப: பெரிய அறிஞர்களுக்கு இணையா அமெரிக்க மேடைகளில் பேசக்கூடிய வாய்ப்பு, பல்வேறு இணைய இதழ்களில் எழுதக்கூடிய வாய்ப்பு, இனிமையான இணைய நண்பர்கள் இப்படி எல்லாமே எனக்குக் கிடைச்சது தமிழாலதான்.

சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் நெகிழ்ச்சியான அனுபவம். போன மார்கழி மாசம், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களுக்கு புதிய உரை ஒண்ணு எழுதி (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் வீதம்) இணையக் குழுமங்களில் வெளியிட்டேன். பலரும் அதைத் தொடர்ந்து படிச்சாங்க. அதில் ஒரு தமிழறிஞர், "உங்கள் வாயிலாகத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் புதிய விளக்கம் பெறுகின்றன; வயதில் இளையவராக இருந்தாலும் மிக அருமையான ஆன்மீகத் தொண்டம்மா நீங்கள் செய்துவருவது! அரனருள் உங்களுக்குப் பரிபூரணமாக வாய்க்கட்டும்!" அப்படின்னு என்னை வாழ்த்தி ஒரு மடல் அனுப்பியிருந்தார். மூத்தவரும், சிறந்த தமிழறிஞருமான அவரிடமிருந்து அப்படி ஒரு பாராட்டு எனக்குக் கிடைக்கறதுக்குக் காரணம் தமிழ்தானே!

கே: பக்தி இலக்கியங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் நீங்கள். அவற்றின் பெருமை நீங்கள் உணர்ந்தபடிச் சொல்லுங்கள்.
ப: 'சமயம்' அப்படின்னாலே (மனசைப்) பக்குவப்படுத்துபவைன்னுதான் பொருள். அது எந்தச் சமயமானாலும், சமயங்களைப் பத்தி நாம சிந்திக்க ஆரம்பிச்சாலே அடுத்து நம்ம ஞாபகத்துக்கு வர்றது ஞானிகள், அருளாளர்கள் இவங்கல்லாம் எழுதின பக்திப் பனுவல்கள், தத்துவக் கருத்துக்கள் முதலியவை! இறைவன் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவனை அடையும் வழி என்ன? அப்படிங்கற கேள்விகளுக்கெல்லாம் பாமரனும் புரிஞ்சுக்கற வகையில எளிமையாவும் தெளிவாவும் பதில் சொல்லுகின்றன பக்தி இலக்கியங்கள்.

உதாரணத்துக்குத் திருவாசகத்தை எடுத்துக்கிட்டோம்னா அதுல மாணிக்கவாசகப் பெருமான் பல பாடல்கள்ல "வானோர்க்கும், தேவர்களுக்கும் வசப்படாத நீ, அவர்களால் அறிந்துகொள்ள முடியாமல் மறைந்திருக்கும் நீ, இந்த எளியேனை ஆட்கொண்டாயே"ன்னு சிவபரம்பொருளை வியந்து வியந்து பாடறார். "இறைவனை அறிவால் அறிய முயலாதே; அன்பால் அறிய முயல்!" அப்படிங்கறதுதான் இறைவனோட அருளைப் பெற அவர் நமக்குச் சொல்லித்தரும் எளிமையான ஃபார்முலா. எளிமையான அன்பு நெறியே இறைவனை அடையப் போதுமானது.

அதைத்தான் கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குது.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தஒண் ணாதே


என்கிறது திருமந்திரம். நாயன்மார்கள் மட்டுமல்ல, ஆழ்வார்களும் இதே கருத்தைத்தான் சொல்றாங்க….

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.


இது முதலாழ்வார்களில் ஒருவரான 'பூதத்தாழ்வாரின்' கருத்து. "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே"ங்கறார் அருட்சோதி வள்ளலார்!



இந்தப் பாடல்களையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது, கடவுள் பேரச் சொல்லி நம்ம மக்கள் செஞ்சுட்டுவர்ற ஆடம்பரமான சடங்குகளும், சம்பிரதாயங்களும்கூட தேவையில்லாதவைன்னுதான் தோணுது. பணம் படைச்சவங்க, ஆயிரக் கணக்குலேயும் லட்சக் கணக்குலேயும் பணத்தத் தண்ணியா வாரி இறைச்சு ஹோமங்களும், யாகங்களும் செய்யறதுக்குப் பதிலாக் கஷ்டப்படற சக மனுஷங்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவலாமே! அதுதான் இறைவனுக்குச் செய்யும் உண்மையான தொண்டும் கூட!

இதைத்தான் திருமூலர் ரொம்ப சிம்பிளா, "நீங்கள் நடமாடும் கோயில்களான மனிதர்களுக்கு ஒன்று ஈவீர்களேயானால் அது படமாகக் கோயிலிலே வீற்றிருக்கும் இறைவனிடம் சென்று சேரும்"னு சொல்றார். என்னைப் பொறுத்தவரை திருமூலர் சித்தர் மட்டுமல்ல, சிறந்த சீர்திருத்தவாதியுங்கூட.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே!
(திருமந்திரம்)

(தன் முயற்சிகளுக்கும் ஆர்வங்களுக்கும் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தும் தந்தையார் இராமமூர்த்தி, அன்னை ஜெயலட்சுமி, அன்புக் கணவர் முனைவர் சேஷ சாயிராமன், குழந்தைகள், நிவேதிதா, நரேன் கார்த்திக் ஆகியோருக்கு அன்போடு நன்றி கூறித் தமது உரையாடலை நிறைவு செய்தார். அவரது தமிழ்ப்பணி சிறக்க நாமும் வாழ்த்தி விடைபெற்றோம்).

உரையாடல்: மதுரபாரதி

*****


கான்ஃபரன்ஸ் காலில் சிலப்பதிகாரம்
ஒவ்வொரு மாதமும் ஒன்றுவிட்ட ஞாயிற்றுக் கிழமைகள்ல (every other Sunday) சிலப்பதிகார வகுப்பை கான்ஃபரன்ஸ் கால் மூலமா நான் நடத்தி வரேன். இதில கலந்துக்க விரும்பறவங்க, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த இவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்:

கொழந்தவேல் ராமசாமி - samyrama1@yahoo.com
பீற்றர் யெரோனிமியூஸ் - peter.yeronimuse@gmail.com

மேகலா இராமமூர்த்தி

*****


குழந்தைகள் தமிழ் கற்க...
தாய்மொழி அறியாதவங்களா பிள்ளைகளை வளர்ப்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றம். நாம் வெளியிடத்துல ஆங்கிலத்தில் பேசினாலும் வீட்டில கட்டாயமா தமிழ்லதான் பேசணும். பிள்ளைகளையும் தமிழ்லபேச ஊக்கப்படுத்தணும். அதைத்தான் நான் செய்யறேன். வீட்டிலிருக்கும்போதெல்லாம் பிள்ளைகளோட தமிழ்லதான் பேசுவேன். அவங்களையும் தமிழ்லயே பேசச் சொல்லுவேன். அதனால அவங்க தமிழறிவு நல்லாவே மேம்பட்டிருக்கு.

குழந்தைகளுக்குத் தமிழ் பேசக் கத்துக்குடுக்கறதோட என் கடமை முடிஞ்சுட்டதா நான் நெனக்கல. தமிழ்ப் புத்தகங்களை படிக்கற திறமையும்; தமிழ்ல நல்லா எழுதற புலமையும் அவங்களுக்கு வரணும்ங்கறது என் ஆசை. அதுக்காக நிறைய தமிழ்ப் புத்தகங்களைத் தமிழ்நாட்டிலிருந்து வாங்கிவந்து படிக்கச் சொல்லிக் கொடுக்கறேன். இந்தியாவிலிருக்கிற பாட்டி தாத்தாவோட ஃபோன்ல பேசும்போதும் தமிழ்லயே பேச வலியுறுத்தறேன்.

கடந்த சில வருஷங்களா, என் மகள் நிவேதிதாவுக்குத் திருக்குறள், புறநானூறுன்னு தமிழ் இலக்கிய நூல்களிலேயும் பயிற்சி குடுத்துட்டு வரேன். போன வருஷம் (2013ல்) வாஷிங்டன் டி.சி.யில நடந்த பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டுல நிவேதிதா 10 புறநானூற்றுப் பாடல்களை மனப்பாடமா ஒப்பிச்சு முதல் பரிசு வாங்கினா. 2014 ஜூலையில நடக்கப்போற FeTNA விழாவில் குறிஞ்சிப்பாட்டுல வர்ற 99 வகையான பூக்களின் பேரையும் மனப்பாடமாச் சொல்றதுக்கு அவளை நான் தயார்ப்படுத்திகிட்டு வரேன்.

மேகலா இராமமூர்த்தி

*****


அவர்கள் நம்மை அழைத்துப் பெருமைப்படுத்த வேண்டும்!
தமிழ் அமெரிக்கர்கள் இங்கே பல்வேறு வகைகளிலும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடறாங்க. தமிழகத்திலேர்ந்து சிறந்த தமிழறிஞர்களை வரவழைச்சுக் கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் சிறப்பா நடத்தறாங்க. அவங்களோட தமிழுணர்வு ரொம்பப் பாராட்டத்தக்கதாஇருக்குங்கறதுல எந்தச் சந்தேகமும் இல்ல. ஆனால், இந்தக் கூட்டங்களால் தமிழ் அமெரிக்கர்களின் வாரிசுகளான இளைய தலைமுறையினர்' பயனடையறாங்களா? எத்தனை பேர் இந்தக் கூட்டங்கள்ல பேசப்படற கருத்துக்களைப் புரிஞ்சுக்கக் கூடிய அளவுக்குத் தமிழ்ப் புலமையோட இருக்காங்க அப்படிங்கறதுதான் நாம சிந்திக்கவேண்டிய விஷயம்!

நம்மோட அடையாளமே நம்ம தமிழ்தான்; அந்த மொழி இளைய தலைமுறையினரால் மேலும் மேலும் வளர்ச்சி அடையணும். அதுக்கு ஏத்த வகையில அமெரிக்கத் தமிழர்கள், தமிழ் மொழியை வளரும் தலைமுறையினரின் மொழியாக்க வேண்டியது மிக அவசியம்.

இந்தியாவிலேர்ந்து தமிழறிஞர்களை நாம இங்க வரவழைக்கறதுக்குப் பதிலா, இந்தியா, அமெரிக்கத் தமிழறிஞர்களை அங்க அழைச்சுப் பெருமைப்படுத்தக் கூடிய சூழ்நிலையை நாம எதிர்காலத்தில் உருவாக்கணும். அதுதான் என்னோட ஆசை. முழுமுனைப்போட முயற்சி செஞ்சா இத சாதிச்சுக் காட்டலாம்.

மேகலா இராமமூர்த்தி

*****

© TamilOnline.com