கடலைப்பருப்பு கார போளி
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
கேரட் - 1 (பெரியது)
முள்ளங்கி - 1
வெங்காயம் - 1 (பெரியது)
முருஙைக்கீரை - சிறிதளவு
மைதா மாவு - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
கடலைப்பருப்பை 1/4 மணிநேரம் ஊற வைத்து, சிறிது தண்ணீரில் வேகவைக்கவும். கேரட், முள்ளங்கி, வெங்காயம் மூன்றையும் பொடியாக துருவிக் கொள்ளவும். வெந்த பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும். மைதா மாவைச் சிறிது உப்பு போட்டு மஞ்சள் பொடி சேர்த்து சிறிது நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும். மசித்த கடலைப்பருப்பு, துருவிய காய்கறிகள், தேங்காய்த் துருவல், முருங்கைக்கீரை, உப்பு, மிளகாய்ப் பொடி எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டுப் பிசையவும்.

மைதா மாவை சிறிய பூரிகள் போல் செய்து, மேலே சொன்னவற்றைப் பூரணம்போல் செய்து அதை பூரிக்குள் வைத்து போளியாகச் செய்து தோசைக் கல்லில் போடவும். ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு சிறிது நெய் விட்டு சப்பாத்தி போல் செய்யவும். கார போளி தயார்.

இதில் காய்கறிகளைத் துருவி வேக வைக்காமல் பச்சையாகவே போடுவதினால் வாய்க்கு ருசியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். அதே சமயம் சத்தும் குறையாது. உப்பு, காரம் இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாமல் சாப்பிடலாம். வேண்டுமானால் நெய் விழுதோ, வெல்லமோ தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

வசந்தா

© TamilOnline.com