படைப்பு வாசகனை சிந்திக்கத் தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாயும் இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு செயல்பட்டு வருபவர் இராசேந்திரசோழன். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இவருடைய பள்ளிப்படிப்பு பல்வேறு ஊர்களில் கழிந்தது. மேற்கல்வியை மயிலம் பள்ளியில் தொடர்ந்தார். ஆசிரியர் பயிற்சிக்குப் பின் ஆசிரியப் பணிபுரியத் துவங்கினார். சிறுவயது முதல் பல்வேறு ஊர்களில் வாழ்ந்த அனுபவங்களும், வாழ்க்கை சொல்லிக் கொடுத்த பாடங்களும், வாசிப்புப் பயிற்சியும் இவரது எழுத்தார்வத்துக்கு நெய் வார்த்தன. 1971ல் ஆனந்தவிகடன் நடத்திய மாவட்டச் சிறுகதைப் போட்டியில் இவருடைய சிறுகதைக்கு முதல்பரிசு கிடைத்தது. சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம் என எழுத்துப் பயணம் தொடர்ந்தது.
பொதுவுடைமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவரது படைப்புகளில் சமூக அக்கறை மிகுந்திருக்கும். இவரது கதை மாந்தர்கள் சாதாரண மாந்தர்கள். தேவையற்ற வர்ணனைகள், சிடுக்கு மொழிகள், வார்த்தை ஜாலம் ஏதுமில்லாது நேரடியாகக் கதை கூறும் பாணி இவருடையது. மனித மனங்களின் இயல்புகளை, ஆசைகளை, ஏக்கங்களை யதார்த்தமாக விவரிப்பதில் தேர்ந்தவர். உறவுச் சிக்கல்களையும், மனப் போராட்டங்களையும் உள்ளடக்கியதாகவே இவரது பல கதைகள் அமைந்துள்ளன. இவர் படைப்புபற்றி, "திறமையான சிறுகதைப் படைப்பாளி என்று எழுபதுகளில் செம்மலர், உதயம், அஃ போன்ற சிற்றிதழ்களில் எழுதிய 'அஸ்வகோஷ்' என்ற ஆர். ராஜேந்திரசோழனைச் சொல்ல வேண்டும். தமிழின் நவீன இலக்கிய கர்த்தாவான அசோகமித்திரன், ராஜேந்திர சோழனை 'promising writer' எனறு குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. ராஜேந்திரசோழன் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவே இருந்தார். அவர்களது கட்சிப் பத்திரிகையான செம்மலரில் 'அஸ்வகோஷ்' என்ற புனைபெயரில், பல அற்புதமான, கலாபூர்வமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அந்த நாட்களிலிருந்தே நானும் வண்ணதாசனும் ராஜேந்திர சோழனின் வாசகர்கள். தனது எழுத்து, முற்போக்கு எழுத்து என்று தம்பட்டம் அடிக்காமலேயே கலாபூர்வமாக எழுதிய ஒரே இடது கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர் அஸ்வகோஷ்" என்று பாராட்டுகிறார் வண்ணநிலவன்.
இந்தப் புனைபெயரில் இராசேந்திரசோழன் எழுதிய சிறுகதைகளும் நாடகங்களும் குறிப்பிடத்தகுந்தவை. பாதல் சர்க்காரிடம் பயிற்சி பெற்ற அனுபவம் கொண்ட இராசேந்திரசோழன் அந்த அனுபவத்தையும், தனது முற்போக்குச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்து பல நாடகங்களை எழுதி, இயக்கி மக்களிடம் கொண்டு சென்றார். 'நாளைவரும் வெள்ளம்' என்ற நாடகம் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து எழுதப்பட்டதாகும். "எமெர்ஜென்ஸி குறித்த அவருடைய தயாரிப்பான 'விசாரணை' என்னும் நாடகத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் பார்வையாளர்கள் மனம் கொந்தளிக்கும் விதமாக நிகழ்த்தப்பட்டவை. ஏழ்மை, இல்லாமை, அதன் காரணமாக மனித மனங்கள் அடையும் அவமானங்கள், சிதையும் மனித மாண்புகள், அதையும் மீறி வெளிப்படும் அன்பும் நேசமும் இவைதான் பெரும்பாலான அவரது கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை" என்கிறார் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்.
தான் சார்ந்த முற்போக்கு முகாமை மிகக் கடுமையாகக் கிண்டல் செய்து விமர்சித்து எழுதியிருந்த 'சவாரி' சிறுகதை இராசேந்திரசோழனுக்கு ஆதரவையும், எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் தந்தது. 'பறிமுதல்', 'எட்டு கதைகள்', 'தற்செயல்' போன்றவை இவரது ஆரம்பகாலச் சிறுகதைத் தொகுப்புகள். 'சிறகுகள் முளைத்து', '21வது அம்சம்' போன்றவை நாவல்கள். 'வட்டங்கள்', 'மீண்டும் வருகை', 'நாளை வரும் வெள்ளம்' போன்றவை நாடகங்கள். 'கடவுள் என்பது என்ன?' என்ற கட்டுரை நூலும் மிக முக்கியமானது. இவரது தேந்தெடுத்த 50 சிறுகதைகளைத் தொகுத்து 'இராசேந்திர சோழன் கதைகள்' என்ற பெயரில் தமிழினி வெளியிட்டுள்ளது. இவரது குறுநாவல்களும் தொகுக்கப்பட்டு 'இராசேந்திரசோழன் குறுநாவல்கள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளன. இவை தவிர 'மார்க்ஸிய மெய்யியல்', 'பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும்', 'அணுசக்தி மர்மம்: அறிந்ததும் அறியாததும்' போன்றவை குறிப்பிடத் தகுந்த படைப்புகளாகும். இவரது சில நாடகங்கள் தொகுக்கப்பட்டு 'அஸ்வகோஷ் நாடகங்கள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. செம்மலரில் தொடராக எழுதிய 'அரங்க ஆட்டம்' என்னும் நாடகம் பற்றிய தொடர்கட்டுரை குறிப்பிடத் தகுந்தது. இது பின்னர் நூலாகவும் வந்து வரவேற்பைப் பெற்றது.
இவர் எழுத்தாளர் மட்டுமல்ல; சிறந்த சமூகச் செயல்பாட்டாளரும், தமிழுணர்வாளரும் கூட. தமிழ்மொழி எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்த இவரது கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. ஆசிரியராகப் பல ஆண்டுகள் மாணவர்கள் பயிற்றுவித்த அனுபவத்தில் இவர் எழுப்பும் கேள்விகள் புறந்தள்ளத் தக்கவையல்ல. "ஐ என்னும் உயிரெழுத்தோடு புணரும் மெய்யெழுத்துக்களை கை, ஙை, ஞை, டை என எழுதிவர - ணை, லை, ளை, னை என்னும் எழுத்துக்களை மட்டும் முன்பு தற்போது எழுதுவது போல் அல்லாமல் யானைக்கொம்பு எனப்படும் கொம்பு போட்டு எழுதும் வழக்கம் இருந்தது. அதை நீக்கி கை, ஙை முதலான எழுத்துக்களுக்குப் பொருந்தும் தருக்கம் பிற ண, ல, ள, ன ஆகிய எழுத்துக்களுக்குப் பொருந்தாதா எனக்கேட்டு, அதன்படி தற்போது நாம் எழுதுவது போன்ற நடைமுறை பழக்கத்துக்கு வந்த்து. இது சரி. ஆனால் சிலர் கை, ஙை, சை, ஞை, என்று எழுதாமல் கய், ஙய், சய், மய், லய், னய் என எழுதுவதுடன் 'ஐ' என்னும் உயிரெழுத்துக்குப்பதில் 'அய்' எனவும் எழுதிவருகின்றனர். 'ஐ'க்கு பதில் 'அய்' என எழுதினால் மாணவர்களுக்குத் தமிழில் உயிரெழுத்து எத்தனை என்று சொல்லிக் கொடுப்பீர்கள்? தமிழில் உள்ள எழுத்துகளில் அதன் ஒலிக்குறிப்பில் நெடிலுக்கு இரண்டு மாத்திரையும் குறிலுக்கு ஒரு மாத்திரையும், மெய்யெழுத்துக்கு அரை மாத்திரையும் என்றும் இதன்படி உயிரெழுத்துக்களில் நெடில் ஏழுக்கும் இரண்டு மாத்திரை, குறில் ஐந்துக்கும் ஒரு மாத்திரை எனச் சொல்லிக்கொடுக்கிறோம். இப்படி இருக்க 'ஐ'க்கு பதில் 'அய்' போட்டால், ஒன்றரை மாத்திரை ஒலிக்குறிப்பில் அது இரண்டு மாத்திரை 'ஐ'யை ஈடு செய்யுமா? இது தமிழ் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்காதா?" என்ற அவரது கேள்வி சிந்திக்கத்தகுந்தது.
இதுபற்றி தன் 'மொழிக் கொள்கை' என்ற நூலில் "மொழி என்று இல்லை, இனம், சாதி, மதம் உள்ளிட்டு சமூகம் சார்ந்த எந்த ஒரு சிக்கலுமே தமிழக மக்களுக்கு அறிவுபூர்வமாக ஊட்டப்படாமல், அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தாமல் எல்லாம் தேர்தல் அரசியல்வாதிகளின் தன்னல நோக்கத்துக்கு ஏற்ப வெறும் உணர்வெழுச்சி மிக்க, அவ்வப்போதைய உசுப்பலுக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளும் உணர்வு மட்டத்திலேயே வைக்கப்பட்டு இருப்பதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்" என்று குறிப்பிடுகிறார். மேலும் அவர், "தமிழ் மொழியின் தனிச்சிறப்பாக பலவற்றைக் குறிப்பிடும் அறிஞர்கள் தமிழில் தனி எழுத்துக்களே தனிப்பொருள் தரும் தனிச் சொல்லாக விளங்குவதைக் குறிப்பிடுவர். அதாவது வா, போ, கை, தை, பை, மை, வை போன்றவை. இப்படித் தனிப்பொருள் தரும் தனிச்சொல்லுக்கு நிகரான எழுத்துக்களை பய், மய், வய், கய் என எழுதுவது நியாயமா?. இது விகாரமாகவும் இலக்கண அடிப்படைக்கு எதிராகவும் இல்லையா?" என்றும் வினா எழுப்புகிறார்.
இருபத்தோர் ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இராசேந்திரசோழன், 'உதயம்', 'பிரச்னை' என்னும் இரு இலக்கிய இதழ்களைப் பொறுப்பேற்று நடத்திய அனுபவமிக்கவர். தற்போது மண்மொழி என்ற சமூக மேம்பாட்டு இதழின் ஆசிரியராக இருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் பல சொற்பொழிவுகளை, இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தி வரும் இவர், திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் வசித்து வருகிறார். நிகரற்ற அனுபவமும், சமூகச் சீர்திருத்த நோக்கமும் கொண்ட இராசேந்திரசோழன், தொடர்ந்து நிறைய எழுத வேண்டியது இக்காலத்தின் அவசியத் தேவை.
அரவிந்த் |