கச்சேரி: மாளவிகா ஸ்ரீராம்
மார்ச் 21, 2014 அன்று மில்பிடாஸ் ICC அரங்கில் செல்வி. மாளவிகா ஸ்ரீராமின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது. தனது 35வது ஆண்டு விழாவை இவ்வருடம் கொண்டாடும் South India Fine Arts இந்நிகழ்ச்சியை இளையோர் கச்சேரிகள் வரிசையில் ஏற்பாடு செய்திருந்தது.

நளினகாந்தி ராகத்தில் இனிதே துவங்கிய வர்ணத்தைத் தொடர்ந்து ரேணுகா ராகத்தில் தியாகராஜ கீர்த்தனையுடன் கச்சேரி களைகட்டியது. நெகிழ்ச்சியான ரஞ்சனி ராக ஆலாபனையுடனும் விறுவிறுப்பான ஸ்வர ப்ரஸ்தாபங்களுடன் “துர்மார்க்கச்சரா” கீர்த்தனையை ஸ்ருதி சுத்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் அளித்தார் மாளவிகா. பைரவியில் அமைந்த சியாமா சாஸ்திரி ஸ்வரஜதியும், ஆபேரி, கமாஸ், மதுவந்தி ராகங்களில் ராகம்-தானம்-பல்லவியும் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். மாளவிகா பாடியவிதமும் அவர் நிகழ்ச்சியை நேர்த்தியாக வடிவமைத்த விதமும், அவர் குரு திருமதி. பாம்பே ஜயஸ்ரீயை ஒத்திருந்தது என்று சொன்னால் மிகையல்ல. சிறுவன் கேசவன் ஸ்ரீவத்ஸன் தனது அபாரமான வயலின் வாசிப்பால் கச்சேரிக்கு மெருகூட்டினார். மிருதங்கம் வாசித்த சிறுவன் அக்ஷய் வெங்கடேசன் அருமையாக வாசித்து தனி ஆவர்த்தனத்தில் மிகுந்த பாராட்டைப் பெற்றார்.

வசந்தி வெங்கட்ராமன்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com