மார்ச் 22, 2014 அன்று AIMS தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து வாஷிங்டன் தமிழ் சங்கம் 'ஓடிபோலாமா' என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வசந்த் வசீகரன் குழுவின் நேர்த்தியான பின்னணி இசை, அவர்களின் திறமையை மட்டுமல்லாமல் நிகழ்ச்சிக்கு எத்தனை ஒத்திகை செய்திருக்கின்றனர் என்பதையும் காட்டியது. உள்ளூர்ப் பாடகர்கள் மற்றும் நியூ ஜெர்சியிலிருந்து வந்திருந்தவர்கள் அனைவருமே பல மேடைகள் பார்த்தவர்கள் என்பது அவர்கள் பாடியதில் தெளிவாகத் தெரிந்தது.
சாமி படத்தில் 'ஓடிபோலாமா' பாடலைப் பாடிய ஸ்ரீலேகா பார்த்தசாரதி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், அந்தப் பாடலைப் பாடியபொழுது அரங்கத்திலிருந்த அத்தனை குழந்தைகளும் மேடையேறி நடனமாடியது காதுக்கும் கண்ணுக்கும் விருந்தாக அமைந்தது. ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் கிருஷ்ணா பாடிய பல மெல்லிசை பாடல்கள் அவரின் இசை ஆளுமையைத் தெளிவாக்கியது என்றாலும் அவர் பாடிய 'காசு பணம் துட்டு மணி மணி', 'ஊதா கலரு' பாடல்களுக்கு கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது. கனக்டிகட் பகுதியில் இருந்த பாடவந்திருந்த இளைஞர் பரத்தின் குரலில் எதிர்காலத் தமிழிசை வல்லுநர் ஒருவர் எதிரில் நிற்பது தெரிந்தது. பதினான்கே வயதான சிறுவன் ஜெரிமியின் வயலின் இசையில் அரங்கம் நனைந்தது என்றே சொல்லவேண்டும். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு, அடுத்த மாதம் வெளிவர இருக்கும் நெடுஞ்சாலை படத்தில் இருந்து 'இன்ஜாதே' என்ற மெல்லிசைப் பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்ததே.
ஒரு நல்ல தமிழிசை நிகழ்ச்சியை கேட்ட திருப்தி மட்டுமன்றி, தமிழகத்தில் பொருளாதரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் AIMS தொண்டு நிறுவனத்தின் மூலமாக உதவமுடிந்த ஆத்ம திருப்தி பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. |