ஏப்ரல் 2014: வாசகர் கடிதம்
அன்புள்ள சிநேகிதியின் நேர்காணல் பிரமாதம். அம்மையார் எழுத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடி ஏகத்துக்கு வீசுகிறது. இல்லாவிட்டால் கல்யாண மோர் எப்படி அவரிடத்தில் இடம் பிடிக்கும்? கல்யாண மோர் என்றால் என்ன? குறிப்பாக தஞ்சாவூர்-கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகுநேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருது. அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். பக்கவாத்தியக்க்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப்பெரிய கூட்டம் வரும். கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை-எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று? சமையல் கலைஞர் சொல்வார், "கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்" என்று.

சரி. ஆனால் மோருக்கு வழி? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். "மோரு பலே ஜோரு" என்று சொல்லி, தாம்பூலம் வாங்கிக்கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜனலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை. அதைத்தான் திருமதி சித்ரா வைத்தீஸ்வரன் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கலாம் என்பது என் அனுமானம்.

திருகோடிகாவல் வைத்யநாதன்,
பிரான்க்ஸ், நியூ யார்க்

*****


தென்றல் (மார்ச், 2014) இதழில் டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன் நேர்காணல் அவருடைய அக்கறையான சமூகப் பார்வையையும் சகமனிதர் மீதான பரிவையும் காட்டியது. அவருடைய ஆஸ்திரேலிய அனுபவம் எனக்கு 1963ம் ஆண்டில் அமெரிக்காவில் நான் எதிர்கொண்ட சம்பவங்களை நினைவூட்டியது. அவற்றில் ஒன்று. மிசௌரி பல்கலை கழகம், கொலம்பியா நகரம். அங்கிருந்து 60 கல் தொலைவிலுள்ள கால்நடை வளர்ச்சிப் பண்ணை ஒன்றுக்கு 18 மாணவர்களும் ஒரு பேராசிரியரும் சென்று கல்லூரி ஊர்தியில் திரும்பி வருகிறோம். மதிய உணவு நேரம் ஆகிவிட்டது. சாலையோர உணவு விடுதி ஒன்றினுள் சென்றோம். என்னைச் சேர்த்து இந்திய மாணவர் நால்வர் ஒரே மேஜையில் அமர்ந்தோம். பணிப்பெண்கள் எல்லோரிடமும் ஆர்டர் எடுத்துச் சென்றனர். எங்களிடம் மட்டும் கேட்கவில்லை. பின்பு கேட்பார்கள் என்று நாங்கள் பொறுத்திருந்தோம். எல்லோருக்கும் உணவு வந்துவிட்டது. எங்களிடமிருந்து இன்னும் ஆர்டேரே எடுக்கவில்லை. தொலைவில் அமர்ந்திருந்த பேராசிரியர் இதை கவனித்து விட்டார். பணியாளிடம் விசாரித்தார். பணியாள், இங்கு கலர் ஆட்களுக்கு சர்வ் செய்ய மாட்டோம் என்றார். "இவர்கள் இந்திய மாணவர்கள். கலர் அல்ல" என்று ஆசிரியர் கூற விடுதியின் உரிமையாளரே ஆசிரியரிடம் வந்து "We don't care who they are, we just don't serve colors" என்றார். ஆசிரியர் முகம் சிவக்க விருட்டென்று எழுந்து "Boys let us go" என்று உரத்த குரலில் கட்டளையிட்டார். எல்லோருக்கும் அனேகமாக உணவு வந்துவிட்டது. ஆனாலும் சாப்பாட்டில் கை வைக்காமலேயே அனைவரும் எழுந்து வெளியேறினர். எங்கட்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு பொறாது ஆசிரியர் கொதித்தெழ, எல்லா மாணவர்களும் அவர் சொற்கேட்டு வெளியேறிய காட்சி எங்களை நெகிழச் செய்துவிட்டது. சித்ரா அவர்களின் அஞ்சலக அனுபவத்துடன் ஒப்பீடு செய்தால், நல்லவர் அல்லவர் இருவரையும் எங்கும் காணலாம்.

வி.ஜி. தேவ்,
நேஷ்வில், டென்னசி

© TamilOnline.com