இரண்டாம் ஜாமங்களின் கதை
அது ஒரு ரகசிய சமூகம் என்றே நான் எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன்.

பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால் சற்றே உயரமான வெள்ளை ஸ்தம்பமும், கிளிப்பச்சை நிற கொடிக்கம்பமும் அதனை அடையாளப் படுத்தும். கொடியில் வெள்ளி ஜரிகையில் பிறைச்சந்திரன் மடங்கித் தெரியும். நீலக் கூம்பு லவுட் ஸ்பீக்கரில், ஒரு நாளின் பொழுதுகளைப் பகுப்பது போல குரான் ஓதும் குரல் அங்கிருந்து ஒலிக்கும்.

தர்கா காலனியின் வீடுகள் குடிசை வீடு, மண் சுவர் வீடு, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, மாடி வீடு எனப் பலவிதம். பெரும்பாலான வற்றில் பிரத்யேகமாகக் கண்களுக்குத் தெரிபவை வெளிர் பிஸ்தா பச்சைநிற சுவர்களும் 786 என்ற எண் பொறித்த வாயில்களும்தான். அந்த வீடுகளின் பின்கட்டு அறைகளுக்குள்ளே என் போன்ற முஸ்லீம் அல்லாத பையன்கள் போனதேயில்லை.

தர்கா காலனியிலிருந்து ஆண் பிள்ளைகள் மட்டும் எங்களுடன் விளையாட வருவார்கள். பெண்பிள்ளைகள் பள்ளிக்குப் போய்விட்டு வருவதோடு சரி. அவர்கள் சக பெண்களைத் தவிர ஆண் பிள்ளைகளுடன் பேசிப் பார்த்ததில்லை. வயதிற்கு வந்த பெண் களைப் பள்ளிக்கூடத்தில் பார்க்க முடியாது. இப்பிள்ளைகளின் அப்பாமார்கள் துபாய் போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர் களாகவும், இல்லை உள்ளூரிலேயே சைக்கிள் கடை, பலசரக்குக் கடை வைத்திருப்பவர்களாகவும், இல்லை வீட்டி லேயே பாய் முடைவது, கிடா வெட்டி விற்பவர்களாகவும் இருந்தார்கள். அவர் களை தர்காவின் வெளியில் தொழுகைக்கு முன்னும் பின்னும் பார்க்கலாம்.

தர்கா காலனிக் குடும்பப் பெண்களையோ, வயது வந்த பெண்களையோ வெளியில் சுலபத்தில் பார்த்துவிட முடியாது. முஸ்லீம் நண்பர்களைப் பார்க்க எப்போதாவது போனால், அடைக்கப்பட்டிருக்கும் உள் கதவுகளுக்குப் பின்னிருந்து குரல் மட்டும் தான் வெளியே வரும். அவர்களை, எப்பொழுதாவது ரேஷன் கடையிலோ, பால் வாங்குமிடத்திலோ தலையைத் துப்பட்டியில் மறைத்து, ஏதேனும் வெளி ஆண்கள் பார்த்துவிடப் போகிறார்களே என்று கவலையுடன் சாமான்களை வாங்கி விரைவதைப் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் அதிகம் மற்ற காலனி மக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. அவர்களது சுகதுக்கங் கள், சடங்குகள், அவர்களுக்குள்ளேயே அடங்கி அமிழ்ந்திருக்க வேண்டும். எப்பொழுதும் மர்மம் நிறைந்த ஒரு சமூக மாகவே தர்கா காலனியை நான் நினைத்து வந்திருக்கிறேன். சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை'யைப் படிக்கும் வரை.

தமிழ்நாட்டின் ஒரு முஸ்லீம் சமூகத்தினுள் நம்மைக் கொண்டு நிறுத்தி, பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்ட அவர்களது வாழ்முறைகளை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இரண்டாம் ஜாமங் களின் கதை. அதிலும் குறிப்பாக அடிப்படை உரிமைகள் சுத்தமாக மறுக்கப்பட்டு, சிறைப் பட்டிருக்கும் பெண்ணினத்தின் அவலங்களை எந்த மிகைப்படுத்தலுமின்றி அம்பலப் படுத்துகிறது இப்புத்தகம். அந்த ரகசிய சமூகத்தின் அங்கத்தினர்கள் வேற்று கிரஹத்து வாசிகள் அல்ல. அவர்களும் மானுட வாழ்வின் கூறுகளான பிறப்பு, இறப்பு, மதத்தொழுகை, படிப்பு, வேலை, வியாபாரம், திருமணம், பிள்ளைப்பேறு, கள்ளக்காதல், சகோதர பாசம், சண்டைகள், துவேஷம், பரத்தை உறவு, பெண்ணை ஒடுக்குதல் போன்ற அனைத்தையும் அனுபவித்து உழலும் சாதாரண மனிதர்கள் என்பது தெளி வாகிறது. இதைப் படித்த போது எனக்கு தர்கா காலனியின் கதவுகள் எல்லாம் உடைந்து நொறுங்கிவிட்டாற் போன்றிருந்தது.

இன்னும் கதவுக்குள் அடைபடாத சிறுமி ராபியாவைக் கொண்டு கதை தொடங்கு கிறது. ராபியாவிற்கு எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் இருக்கின்றன. டேலாக்கட்டியை ஆண்கள் எதற்குப் பயன்படுத்துவார்கள்? வயதிற்கு வருவது என்றால் என்ன? அப்படி வந்துவிட்டால் ஏன் பெண்களைப் பள்ளிக்கோ, வெளியிலோ அனுப்பமாட்டேன் என்கிறார்கள்? கல்யாணம் எதற்குச் செய்து கொள் கிறார்கள்? பிர்தவஸ் சித்தி கல்யாணம் ஆன சில நாட்களிலேயே ஏன் அவள் அம்மா வீட்டிற்குச் சென்று விட்டாள்? புதிதாகத் திருமணமான வஹிதா அக்காவின் புருஷர் எதற்குத் தன்னைக் கட்டிப் பிடித்துச் சீண்டுகிறார்? அஹமதின் அத்தனை உதா சீனங்களை அனுபவித்தும் அவனது அருகாமையை ஏன் அவள் மீண்டும் மீண்டும் நாடுகிறாள்? மதினாதான் வயதிற்கு வந்துவிட்டாளே, அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்குமோ? அவளது அறியாமையில் பிறக்கும் எளிய கேள்விகள் காலம் கால மாகப் புழங்கி வரும் நிறைய விஷயங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகின்றன.

கதவிற்குள் அடைபட்ட வஹிதாவிற்கோ நடக்க இருக்கும் திருமணத்தில் சம்மதம் இல்லை. அவளது அத்தா (அப்பா), தன் சகோதரிக்கு வாக்குக் கொடுத்துவிட்டார். அவளது அம்மாவுக்குத் தடுத்து நிறுத்தும் உரிமை இல்லை. சம்பிரதாயத்திற்காக அவளிடம் திருமணம் நடக்கும் போது சம்மதமா என்று கேட்டுக் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்கள். அது அர்த்தம் இழந்துவிட்ட ஒரு சடங்கு என்று வஹிதா விற்குப் புரிகிறது. நேற்றுவரை, அவளது அவயவங்களை நிலைக்கண்ணாடியில்கூடப் பார்த்துக்கொள்ளக்கூடாது என்று தடை விதித்த சுற்றம், இன்று வெட்கங்களை யெல்லாம் கட்டவிழித்துவிட்டுப் படுக்கை யறை ரகசியங்களைப் பட்டவர்த்தனமாகப் பேசி அவளை நெளிய வைக்கிறது. புகுந்த இடத்திலோ சாத்தியிருந்த அவளது படுக்கையறை வாயிலிலேயே வாயிற்காவலன் போல் அமர்ந்திருந்து, அவள் அருவருப்பின் எல்லையிலும், துடிக்கும் வலியுடனும் அதிகாலையில் வெளிவருகையில், " ரொம்ப வலிக்க நடந்துக்கிட்டானா?" என்று கேட்கும் மாமனாரைச் சகிப்பது எப்படி என்று அவளுக்கு புரியவில்லை. திருமணம் என்னும் பட்டுப்பூச்சிக் கூட்டுக்குள் வலிந்து திணிக்கப்படும் வஹிதா பட்டாம்பூச்சியாக வெளிவராமல் அருவருத்து நெளியும் புழுவாய்ச் சிதைந்து வெளிவருகிறாள்.

வாழ்வின் மீது தணியாத ஆசை கொண்ட பிர்தவஸிற்கோ, அவள் அக்கா புருஷன் பார்த்துக் கட்டிவைத்த மாப்பிள்ளையை அடியோடு பிடிக்கவில்லை. தன்னுடைய அழகிற்கு ஏற்றவனில்லை என்று தலாக் வாங்கிப் பிரிவதில் பிடிவாதம் காட்டி மணவாழ்வைத் துறக்கிறாள். துறந்தவளுக்கு அதற்குப்பின் வாழ்க்கையை முன்னகர்த்த எந்தத் தேர்வும் இல்லை என்பது வெகு விரைவில் உள்ளிறங்குகிறது. வயதான மாப்பிள்ளைகளே இரண்டாம் தாரமாகவோ, வைப்பாட்டியாகவோ கேட்டு வந்து நிற்கிறார்கள். சுயவிரக்தியின் எல்லையில் மதம் சொல்லும் ஒழுக்கத்திற்கு ஏற்ப அவள் தன் ஆசைகளை அடக்கப் பிரியப்படவில்லை. மாறாக அவற்றிற்குத் தன்னை ஒப்படைத்து விடுகிறாள். ஒரு காபிருடன் (முஸ்லீமல்லாதவன்) தொடர்பு வைத்துக்கொள்கிறாள். அதற்குப்பின் அவளுக்கு ஒரே ஒரு இறுதித் தேர்வு தான் வாய்க்கிறது. முஸ்லீமல்லாத குடியானவப் பெண்களை வைப்பாட்டி களாய் வைத்தி ருக்கும் ஆண்களின் ஆளுமையில் ஊறிய இந்தச் சமூகத்தில் பெண்ணினத்தின் மொத்த உரிமைக்குமாய் மெளனமாய்ப் போராடி மாய்கிறாள் பிர்தவஸ்.

இவர்கள் மட்டும் அல்ல. நாவல் முழுதும் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கதையிருக்கிறது. காலம்காலமாக உரிமை களை இழந்து நிதம்நிதம் மெளனமாகப் புழுங்கி அழும் அத்தியாயங்கள் அதில் நிறையவே இருக்கின்றன. அவற்றின் யதார்த்தம் பிசகாமல் ஒரு சிறு ஜன்னலைத் திறந்து காட்டுவதைப்போல், இப்படைப்பில் சல்மா நம் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

நாகரீக வளர்ச்சியின் பயனாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் முஸ்லீம் பெண்களின் ஸ்தானத்தில் நிறைய முன் னேற்றங்களைப் பார்க்க முடிவதால் சல்மா காட்டும் இந்த தமிழ்நாட்டுக் கிராமம் ஒருவித அதிர்ச்சியைத்தான் நமக்குக் கொடுக்கிறது. சல்மா இது போன்ற ஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்தாலும், உரிமைகள் மறுக்கப் பட்டவர்களுக்காக அரசியல் வாழ்க்கை யிலும் புகுந்து போராட்டங்களையும் பல நற்பணிகளையும் செய்துவருபவர். திருச்சியருகே துவரங்குறிச்சி கிராமத்தின் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப் பவர். அச்சமூகத்தில் விழிப்புணர்வு பரவத் துவங்கிவிட்டதற்கு அவரே நம்பிக்கை யளிக்கும் அடையாளமாக இருக்கிறார்.

ஒன்பதாம் வகுப்பு வரையே படித்திருக்கும் சல்மாவின் தமிழ் ஒரு தேர்ந்த கதை சொல்லியின் எளிமையோடும் தெளிவோடும் புதினம் முழுதும் பளிச்சிடுகிறது. முகமதியப் பண்டிகைகள், திருமணம், மரணச் சடங்குகள் பற்றி விளக்கப்படம் போல் வரும் பகுதிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் இந்த நாவல் ஒரு நல்ல இலக்கிய முயற்சி என்றே தோன்றுகிறது.

நாவலின் கதாபாத்திரங்கள் திருமணம் நன்றாக நடக்க வேண்டுமே என்று நேர்ந்து கொண்டு தர்காவிற்கு விளக்குப் போடு கிறார்கள். பண்டிகை நாட்களில் அதிரசம், பணியாரம் செய்கிறார்கள். ரம்ஜான் நோன்பிருக்கிறார்கள். ஒவ்வொரு சுப காரியத்தின் போதும் தர்காவிற்குப் பணம் ஒதுக்குகிறார்கள். பெயரளவில் மதமும், கடவுளும் வேறே ஒழிய எத்தனையோ ஒற்றுமைகளை இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் இதில் பார்க்க முடிகிறது.

நாவலில் வரும் உருதுச் சொற்களுக்கு, கடைசியில் அகராதி போட்டிருப்பதும், நாவலின் எண்ணற்ற கதை மாந்தர்களின் சுருக்கமான குடும்ப வரைபடத்தை தொடக் கத்தில் கொடுத்திருப்பதும் பதிப்பாளர்களின் சிரத்தையைக் காட்டுகிறது.

தர்கா காலனியை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். அங்கும் ஒரு ராபியாவோ, பிர்தவஸோ, வஹிதாவோ இருந்திருக்கலாம். இரவு என்பது எல்லாருக்கும் பொதுவானது தானே. அப்படித்தான் இரண்டாம் ஜாமமும் அதன் ரகசியத் துக்கங்களும்...

இரண்டாம் ஜாமங்களின் கதை
சல்மா
காலச்சுவடு பதிப்பகம்
டிசம்பர் 2004
kalachuvadu@sancharnet.in

மனுபாரதி

© TamilOnline.com