ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) ஞாயிறு மாலை 9 மார்ச் 2014 அன்று ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் தமிழ்க் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் பக்கத்துப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நூலுக்கான தேர்வுக்குழு 400க்கு மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து தகுதிபெற்ற 78 கவிதைகளைப் பதிப்பித்திருக்கிறது. எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா), மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செல்வா கனகநாயகம் தொகுப்பை மேம்படுத்தியிருக்கிறார். முதன்முறையாக இப்படியான இருமொழி நூல் ஒன்றுக்கு ஒன்ராறியோ ட்ரில்லியம் அமைப்பு நிதியுதவி வழங்கி ஆதரித்திருக்கிறது.

இந்த அமைப்பின் தலைவி சாவி சிங் நூலை வெளியிட்டு வைத்தார். விழாவில் பேரா. செல்வா கனகநாயகம், பேரா. சாஷா எபெலிங், பேரா. அனுஷ்யா ராமஸ்வாமி, முனைவர் மைதிலி தயாநிதி, வழக்குரைஞர் மனுவல் ஜேசுதாசன், கவிஞர் சேரன், கவிஞர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். ஜெர்மானியக் கவிஞர் ரெய்னெர் மாரியா ரில்கே அவர்களின் கவிதை வரியான In Our Translated World என்பதே நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. 'மிருகங்கள்கூட மாற்றமடைந்த ஓர் உலகில் சௌகரியமாக இருப்பதில்லை' என்கிறார் கவி. இந்த நூலின் பொதுத்தன்மை மாற்றமடையும் உலகில் வாழும் மனிதர்களைப் பற்றியது. அவர்களின் அவலங்கள், இழப்புகள், ஏக்கங்கள் நூலின் அடிநாதமாக ஓடுகிறது. மாறும் உலகில் அமைதியின்மை மனிதனை அலைக்கழிக்கிறது. விழாவுக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் பிற மாகாணங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

அ.முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com