காதல் என்றாலே கசப்பதாய்த் தன் மகள் சொன்னபோது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் அம்பலமானது போல அதிர்ந்தார் ஆதிகேசவன். அதைவிட அதிர்ந்தார் மகள் தன்னிடம், "நீங்களும் அம்மாவும் காதல் கல்யாணம் பண்ணிட்டு வாழற வாழ்க்கையைப் பார்த்த பின்னும் நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை" என்றபோதுதான்!
இந்த 2014ல் இப்படி ஒருபொண்ணா எனக் குடும்பமே தலையில் கைவைத்துவிட்டது! தரகர் ரங்கசாமி குஷியாகிப்போனார். "கவலைப்படேல் ஆதிகேசவரே! இப்பல்லாம் பையனைப் பெத்தவங்கதான் அதிகம். நிகிலாவோட அழகுக்கும் அறிவுக்கும் க்யூவுல நிப்பாங்க" என்றார். எத்தனை ஜாதகங்களைப் பார்த்தாயிற்று? எல்லாவற்றையும் குறை சொல்லித் தட்டிக் கழித்துவிட்டாள் நிகிலா.
"நிகி! கல்யாணத்துக்கு யெஸ் சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்," இரண்டு வருஷம் முன்பு நிகிலா எம்சிஏ முடித்ததும் இப்படித்தான் வீட்டில் அப்பாவுக்கும் மகளுக்கும் பேச்சு ஆரம்பமானது.
"நான் MCA படிச்சிருக்கேன்ப்பா."
"அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் பையனா பார்த்துடலாம்."
"BE படிச்ச பையனா? அது UGதானே. நான் PG படிச்சிருக்கேனே?"
"சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்."
"ME, MCAவைவிடப் பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே."
"சரிம்மா. அப்ப MCA படிச்சவராவே பார்த்துடலாம்." "எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே."
"என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்னதான் படிச்சிருக்கணும்!"
"PG பண்ணிருக்கணும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கணும்."
"முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அப்புறம்?"
"எனக்கு என் கெரியர்தான் முக்கியம்."
"டிஃபன் கேரியரா? அதுக்கென்னமா நல்லதாப் பார்த்து வாங்கித் தரச் சொல்றேன்." "அப்பா கடி ஜோக்குன்னு கடுப்பேத்தாதீங்க!. நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விடச் சொல்லக்கூடாது." "சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்குப் போற பொண்ணு வேணும்னு சொல்ற மாப்பிள்ளையா பார்த்துட்டா போகுது."
"அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போகமுடியாது. என் இஷ்டப்படிதான் நான் வேலைக்குப் போவேன்." "சரிம்மா. உன் இஷ்டப்படி மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு." "கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியணும், பேசறதுல ஷாருக் கான் மாதிரி இருக்கணும், டேலண்ட்ல அமீர் கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு என்னைத் தாலாட்ட வருவாளா பாடின அந்த இளம் விஜய்மாதிரி தெரியணும்."
"மொத்ததுல உன் கண்ணுக்கு ஹீரோவா தெரியணும். மத்தவங்க கண்ணுக்கு உன் தம்பி கணக்குல வாங்கற ஜீரோவாத் தெரியணும் அப்படித்தானே?"
"ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது நான்வெஜ் சமைக்கத் தெரியணும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைச்சுப் போடணும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடு பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்." "ஆஹா அதுக்கென்னம்மா. காஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்யத் தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்."
"கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்சென்ட்ல பேச தெரிஞ்சிருக்கணும்."
"ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இன்ஃப்ளூவன்ஸ் இருக்கக் கூடாதுனு சொல்லுவ போல!"
"அதெல்லாம் இல்லைப்பா. இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூட்டிகிட்டு போனா அந்த அக்சென்ட்ல பேசினாதான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்." "சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்தாப்புல சொல்லு."
"கண்டிஷன் நம்பர் 6. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னை டிபன்டென்ட் வீசால கூட்டிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என்கூட டிபன்டென்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை."
"சரிம்மா. உனக்குதான் வீசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?"
"இப்பல்லாம் வீசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்." "சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையா பார்த்துடுவோம்." "இதுதான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்சம் ஜாலி டைப். அது உங்களுக்குத் தெரியும். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக் கூடாது." "உன் ஃப்ரெண்ட்ஸ்கூட நீ பேசறதால என்னம்மா பிரச்சனை. உன் ஃப்ரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினாதானே பிரச்சனை?" "நான் சொல்ற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்கதான் செலவு பண்ணி ஃபோன்ல ஜாலியா மொக்கை போடுவாங்க."
"சரிம்மா. நீ உன் பசங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசும்போது பிரச்சனை பண்ணாம, அந்தப் பையனை அவனோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசச் சொல்லிடுவோம்."
"நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை வந்து முழுநாள் தங்கிட்டுப் போகலாம். ஆனா என்னை சமைக்கச் சொல்லக்கூடாது."
"இது ஒரு கண்டிஷனாம்மா? முதல் வாரம் நீ சமைச்சுப் போட்டா அவுங்க உன் வீட்டுப் பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?"
"இதுதான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆயிடுச்சினா...." "நிக்கீ... ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாயக் கழுவும்மா!" "கூல் கூல் டாட்! சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆயிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கணும்." "இங்க... இங்கதாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற!"
"அதெல்லாம் இல்லை அப்பா. அதுக்கப்பறம் அந்தப் பையன்மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்!"
"அம்மாடி. உனக்கு என்னால பையன் பாக்க முடியாதும்மா. அடுத்த வாரமே சுயம்வரம் வைக்கிறேன். நீயாப் பாத்துப் பேசி செலக்ட் செய்துக்கோ தாயே!"
ஷைலஜா |