பீர்பல் இடித்த வீடு
மாமன்னர் அக்பரின் அவையில் இருந்த மதியூகிகளில் பீர்பல் முதன்மையானவர். மன்னருக்கு அவர்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு. பீர்பல் குடும்பத்தோடு வசிப்பதற்காக நகரின் அழகான வீடு ஒன்றின் கீழ்ப்பகுதியை அக்பர் அன்பளிப்பாகத் தந்தார். பீர்பலும் மகிழ்ச்சியுடன் அதில் வசித்து வரலானார். அதன் மேல்தளத்தில் ஒரு வீடு காலியாக இருந்தது. சில மாதங்கள் சென்றன.

அந்த வீட்டின் மேல்பகுதியைப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தன் படைத்தளபதி ஒருவருக்கு அளித்தார் அக்பர். அவரும் குடிபுகுந்தார். பீர்பலும் நல்ல நண்பர் நமக்குக் கிடைத்தார் என எண்ணி மகிழ்ந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

தளபதியின் மனைவி மிகுந்த வாய்த்துடுக்குக் கொண்டவள். தினந்தோறும் கோதுமையை அவள் கல் உரலில் மாவு இடிப்பாள். நேரம் காலம் பார்க்காமல் நினைத்தபோது எல்லாம் மாவு இடிப்பாள். அது பீர்பலுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய தலைவலி ஆனது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பீர்பல், ஒருநாள் அந்தத் தளபதியிடம் சென்று, "இதோ பாருங்கள். உங்கள் மனைவி மாவிடிப்பது எங்களுக்குப் பெரிய தொந்தரவாக உள்ளது. அதுவும் இரவில் நாங்கள் உறங்கும் போதெல்லாம் கூட இடிக்கிறார். குழந்தைகள் உள்பட நாங்கள் யாருமே சரியாகத் தூங்க முடிவதில்லை. உங்கள் மனைவியை மாவிடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. நேரம் பார்த்து, அதுவும் கொஞ்சம் மெதுவாக இடித்தால் நல்லது. சொல்லப்போனால் கீழேகூடப் பின்பகுதியில் உரல் உள்ளது. அதில் அவர்கள் தாராளமாக இடித்துக் கொள்ளலாம். இது என் வேண்டுதல். பரிசீலியுங்கள்" என்றார் பணிவாக.

அதைக் கேட்ட தளபதிக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. "இதோ பார்... நான் இந்த நாட்டின் தளபதி. இது என் வீடு. இதில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க உனக்கு உரிமையில்லை. நீ போகலாம்" என்றார் சீற்றத்துடன். அவரது மனைவியும் அங்கே வந்து பீர்பலைக் கன்னாபின்னா என்று பேசினாள். காதைப் பொத்திக்கொண்டு வெளியேறினார் பீர்பல்.

சில வாரங்கள் சென்றன. ஒருநாள் திடீரென பீர்பல் வசித்த கீழ்ப்பகுதி வீட்டிலிருந்து தடதடவென்று சத்தம் வர ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல அந்த சத்தம் அதிகமானது. தளபதியால் அதைப் பொறுக்க முடியவில்லை. "ஏய், கீழே என்ன செய்கிறாய், ஏன் இந்த சத்தம்?" என்று மாடியில் இருந்து கத்தினார்.

பீர்பலிடமிருந்து பதில் இல்லை. ஆனால் சத்தம் மேலும் அதிகமானது. தளபதி ஆத்திரத்துடன் கீழே வந்தார். பார்த்தார். திகைத்தார். பீர்பலும் சில ஆட்களும் வீட்டின் கீழ்ப்பகுதியை கடப்பாரையால் இடித்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்துப் பதறிய தளபதி "ஏய் முட்டாள்... நீ என்ன செய்கிறாய்?" என்று கூவினார்.

"ஓ.. அதுவா? கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துவிட்டுப் புதிதாக வீடு கட்டப் போகிறேன். அதைத்தான் ஆட்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்."

"என்ன முட்டாள்தனம் இது! நீ கீழ்வீட்டை இடித்தால் மேலே இருக்கும் என் வீடு என்ன ஆகும் என்று யோசித்தாயா?"

"ஐயா. இது என் வீடு. மன்னர் எனக்கு அளித்தது. என் வீட்டை நான் இடிப்பேன். உடைப்பேன். நொறுக்குவேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீங்கள் யார்? இதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்றார் பீர்பல் கிண்டலாகச் சிரித்தவாறே.

தான் அவமானப்படுத்தியதற்கு, இன்று தன்னை அவர் பழிவாங்குகிறார் என்பதை உணர்ந்தார் தளபதி. பீர்பலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் மாடியில் மாவிடிப்பதையும் உடனடியாக நிறுத்தச் செய்தார். அன்றுமுதல் பீர்பலின் நண்பரானார்.

புத்திமான் என்றுமே பலவான்தான் இல்லையா?

சுப்பு தாத்தா

© TamilOnline.com