தி.க.சிவசங்கரன்
எழுத்தாளரும், விமர்சகரும், மார்க்சியத் திறனாய்வாளரும், தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவருமான தி.க. சிவசங்கரன் (திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன்) திருநெல்வேலியில் காலமானார். மார்ச் 30, 1925ல் பிறந்த தி.க.சி. பாரதி, பாரதிதாசன், ஜீவா, வ.ரா ஆகியோரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். ஆர்வத்தாலும், முயற்சியாலும், இயல்பாக இருந்த மண்ணின் தாக்கத்தாலும் இலக்கியவாதியாகப் பரிணமித்தார். நெல்லையில் ஒரு வங்கியில் பணியாற்றி வந்த இவரைப் பொதுவுடைமைச் சித்தாந்தம் ஈர்க்கவே, தனது வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். சோவியத் நாடு இதழுக்காக பல கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். 'தாமரை' இதழின் பொறுப்பாசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் 'திகசி கட்டுரைகள்' என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியாயின. இவற்றிற்கு 2000 ஆண்டுக்கான சாஹித்ய அகாதமி விருதும் கிடைத்தது. '21-ஈ, சுடலை மாடன் தெரு, திருநெல்வேலி டவுன்' என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை குறும்படமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 89 வயதான தி.க.சி., புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன் போன்ற எழுத்தாளர்களின் நண்பராகத் திகழ்ந்தவர். தமிழகத்தின் இன்றைய முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கும் நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தார். எழுத்தாளர் வண்ணதாசன் (கவிஞர் கல்யாண்ஜி) தி.க.சி.யின் மகன். தி.க.சிவசங்கரன் அவர்களுக்குத் தென்றலின் அஞ்சலி!



© TamilOnline.com