அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த காலகட்டத்தில் பிறந்து, அவ்வாறே வாழ்க்கைச் சூழல் அமைந்தும்கூட அதிலிருந்து மீண்டு, சிறந்த படைப்பாளியாகப் பரிணமித்தவர் ரங்கநாயகி என்னும் இயற்பெயர் கொண்ட குமுதினி. இவர், 1905ல் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீனிவாசாச்சாரியார், லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். ஸ்ரீனிவாசாச்சாரியார் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். லக்ஷ்மி அம்மாள் கொடியாலம் வாசுதேவ ஐயங்காரின் மகள். பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பம். ஸ்ரீனிவாசாச்சாரியார் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்தவர். இலக்கிய ஆர்வம் மிக்கவர். அக்கால வழக்கப்படி வீட்டில் இருந்தபடியே குமுதினிக்குக் கல்வி போதிக்கப்பட்டது. தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் பயின்று தேர்ந்தார்.
குமுதினிக்குப் பத்து வயதானபோது பதினாறு வயது ஸ்ரீனிவாசனுடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு கூடியது, கல்வி தடைப்பட்டது என்றாலும் அவரது வாசிப்பார்வம் குறையவில்லை. கணவரது ஆதரவில் பல நூல்களைப் பெற்று வாசித்தார். ஸ்ரீனிவாசாச்சாரியாரும் பல நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகளை வாங்கிவந்து தந்தார். இயல்பாகவே சுதந்திரச் சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட குமுதினிக்கு வாசிக்க வாசிக்க எழுத்தின் நயம் பிடிபட்டது. தானும் எழுதினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
குமுதினியின் குடும்பம் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். சமையல், காய்கறி நறுக்குதல், அப்பளம் இடுதல் என வேலைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. அவரது எழுத்தார்வத்திற்கு கணவரது வீட்டில் இடமில்லை. ஆனால் தான் வாசித்தவற்றில் தனது கற்பனையைக் கலந்து விதவிதமாகத் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தார். குடும்பத்தின் மன அழுத்தங்கள் அவரது கதைகளில் நகைச்சுவையுடன் வெளிப்பட்டன. இந்நிலையில், திடீரென அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தன. முதலில் இது குமுதினிக்கு அளவற்ற வருத்தத்தைத் தந்தாலும், அதையே ஒரு சவாலாகக் கருதி வாசிப்பதில் முழுக் கவனத்தைச் செலுத்தினார்.
கணவர் சீனிவாசன் அவருக்கு மிக ஆதரவாக இருந்தார். பதிப்பகங்களில் இருந்தும், புத்தகக் கடைகளில் இருந்தும் நூல்களை வரவழைத்து வாசிக்கக் கொடுத்தார். சார்லஸ் டிக்கன்ஸ், சர். வால்டர் ஸ்காட், ஜெரோம் கே. ஜெரோம், ஹென்றி ஜேம்ஸ், டூமா, பால்ஸாக், லியோநார்ட் என்று பல எழுத்தாளர்களின் புதிய உலகங்கள் அவருக்கு அறிமுகமாகின. அதே சமயம் நாட்டில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டமும் அவரது கவனத்தை ஈர்த்தது. கணவன், மனைவி இருவருமே காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கை மீது ஆர்வம் கொண்டனர். எங்கும், எப்போதும் கதர் மட்டுமே உடுத்துவது என்று தீர்மானித்துச் செயல்பட்டனர். ஆனால் குமுதினியின் மாமனார் ராவ்பகதூர் பட்டம் பெற்றவர். பிரிட்டிஷ் அரசின் மீது மதிப்புக் கொண்டவர். இதனால் குடும்பத்தில் அவ்வப்போது மன விலகல்கள் ஏற்பட்டன என்றாலும் தனது விட்டுக்கொடுக்கும் குணத்தாலும், அரவணைத்துச் செல்லும் பழக்கத்தாலும் குமுதினி அதனைச் சமாளித்தார். எழுத்தும் வாசிப்புமே இதுபோன்ற நேரங்களில் அவருக்கு மிக்க உறுதுணையாக இருந்தன.
தனிமை கிடைத்தபோது சிறு கதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அவை கணவர் சீனிவாசனின் மூலமோ அல்லது தந்தை மூலமோ பத்திரிகைகளைச் சென்றடைந்தன. முதல் கட்டுரை 'பிரம்மாவின் பக்ஷபாதம்' 1932ல் வெளியானது. தொடர்ந்து ஆனந்தவிகடன், கலைமகள், கல்கி, மங்கை எனப் பல இதழ்களுக்கு அவர் புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். அவர் புனைபெயரிலேயே எழுதி வந்ததால் அவரது எழுத்துப்பற்றி கணவரைத் தவிர வேறு யாரும் அறியாமல் இருந்தனர். அவர் எழுத ஆரம்பித்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னரே குடும்பத்தாருக்கு அது தெரியவந்தது. ஆனால் அப்போது 'குமுதினி' நாடறிந்த எழுத்தாளர் ஆகிவிட்டிருந்தார். குமுதினியின் எழுத்து பற்றி கல்கி, "பதினைந்து வருஷத்திற்கு முன்பு குமுதினி எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாகவமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர் பேர் முதலியன தெரிந்து போய்விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.... எனக்குத் தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் குமுதினி அவர்கள்தான் இம்மாதிரி சில்லறை விஷயங்களைப் பற்றி ரசமாக எழுதுவதில் சிறந்த வெற்றி அடைந்திருக்கிறார். மற்றும் பல துறைகளிலும் குமுதினியின் தமிழ்த் தொண்டு நன்கு நடந்து வருகிறது.... பல பாஷைகளிலும் அரிய நூல்களைப் படித்து தமிழில் ரசமான விமர்சனங்கள் தந்திருக்கிறார். எனினும், குமுதினியின் தமிழ்த் தொண்டுகளுக்குள்ளே அவர் சில்லறை சங்கதிகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள்தான் மிகவும் சிலாக்கியமானவை என்று கருதுகிறேன்" என்று 'சில்லறை சங்கதிகள் லிமிடெட்' என்னும் குமுதினியின் நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.
1939ல் ஆனந்த விகடன் நடத்திய பாரதி தங்கப் பதக்கச் சிறுகதைப் போட்டியின் நடுவராகவும் குமுதினி இருந்திருக்கிறார். (பரிசு பெற்றவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்ற மீ.ப. சோமு மற்றும் புரசு பாலகிருஷ்ணன்) சம்ஸ்கிருதம், வங்காளம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளையும் முனைந்து கற்றார். சிறுகதை, நாவல், நகைச்சுவைக் கட்டுரைகள், பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் பல தளங்களிலும் செயல்பட்டார். தாகூரின் 'யோக யோக்' என்ற கதையை 'குமுதினி'யாக தமிழுக்குத் தந்தார். அதுதான் தமிழில் வெளியான தாகூரின் முதல் படைப்பு. அதனால் பெரும் புகழைப் பெற்றார். தொடர்ந்து வங்க நகைச்சுவை எழுத்தாளர் பரசுராமின் ஐந்து கதைகளை மொழிபெயர்த்து 'லம்பகர்ணன்' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். 'கிராம இயக்கம்', 'ஏசுநாதர் போதனை' எனும் ஜே.சி. குமரப்பாவின் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் தனது சில படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். இவை தவிர்த்து நாடகங்களும் நிறைய எழுதியிருக்கிறார். 'குடும்பக் காதல்' நாடகம் விகடனில் தொடராக வந்து வரவேற்பைப் பெற்றது. 'டில்லி சென்ற நம்பெருமாள்' நாடகம் ஸ்ரீரங்கநாதரின் மீது காதல்கொண்ட இஸ்லாமிய இளவரசியைப் (துலுக்க நாச்சியார்) பற்றியது. இவரது 'விசுவாமித்திரர்' நாடகம் மிகவும் புகழ்பெற்றதாகும். கலப்புத் திருமணத்தை மையமாகக் கொண்டு எழுதிய 'திவான் மகள்' நாவல் அக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று. அதைத் தொடராக வெளியிடப் பல பத்திரிகைகள் தயங்கியபோது கலைமகள் பிரசுரம் துணிந்து அதை நூலாக வெளியிட்டது. அதற்கு ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பும் எழுந்தது.
கல்கி, குமுதினியின் எழுத்தை ஆதரித்து எழுதியிருந்தாலும் ஒரு பெண்ணியச் சிந்தனையாளராக அவரைப் போன்ற எழுத்தாளர்களையே கூட தனது சிறுகதை ஒன்றில் கிண்டல் செய்திருக்கிறார் குமுதினி. "ஏதாவது கல்கியும், எஸ்.வி.வி.யும் பெண்களைப் பற்றி தங்களுக்குத்தான் ரொம்பவும் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எழுதிவிட்டால், உடனே, 'இந்தாயேன், இதைப் பாரேன், எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது' என்று இவர் அதை வாசித்துக் காண்பிக்க வந்து விடுகிறார். யாருக்குப் பிடிக்கிறது? அவர்கள் ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தது முதல் ராத்திரி தூங்கும் வரையில் எவ்வளவு எண்ண முடியாத அசட்டுக் காரியங்கள் பண்ணுகிறர்கள் என்பது அவரவர் வீட்டுப் பெண்களுக்கல்லவா தெரியும்? காலையில் க்ஷவரத்திற்கு வெந்நீர் வேண்டுமென்று காப்பிகூடப் போடவிடாமல் அவசரப்படுத்திவிட்டுப் பிறகு அதை அப்படியே ஆற வைத்துவிட்டுப் பத்திரிகை படிப்பது முதல், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு புருஷனும் எந்தக் காரியம் சரியாக நாம் ஒத்துக் கொள்ளும்படிச் செய்கிறார்கள்?" என்று எழுதியிருக்கிறார்.
பெண்கள் கல்வி கற்பது ஒன்றே ஆண்களுக்கு நிகராக அவர்களை முன்னேற்றும் என்பதைக் குமுதினி உறுதியாக நம்பினார். அவற்றைத் தம் படைப்புகளில் வெளிப்படுத்தினார். பெண் விடுதலை, சுதந்திரம், தேசியம், கல்வி, காந்திய சிந்தனைகளை வலியுறுத்தியே அதிகம் எழுதினார். நகைச்சுவை, முன்னோடி சிந்தனை, விழுமிய எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டனவாக அவரது படைப்புகள் விளங்கின. இவர் கலைமகளில் தொடராக எழுதிய உளவியல் கட்டுரைகள் அக்காலத்தில் மிகுந்த வரவேற்புப் பெற்றவை. அதுபோல ஆனந்த விகடனில் குழந்தை வளர்ப்பு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'மக்கள் மலர்ச்சி' என்ற பெயரில் நூலாகி வரவேற்பைப் பெற்றன. காந்தியுடன் இவர் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். காந்தி இவருக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவை மகாத்மா காந்தியின் நூல்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறிது காலம் எழுதாமல் இருந்த குமுதினி, மீண்டும் எழுத ஆரம்பித்தார். தமிழில் சிறந்த பயணக் கட்டுரைகள் எழுதிய அக்கால எழுத்தாளர்களுள் குமுதினி குறிப்பிடத் தக்கவர். வட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கணவருடன் இணைந்து சுற்றுப்பயணம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கை, மலாயா, இங்கிலாந்து, ஃபிரான்சு, அமெரிக்கா என்று பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். அந்தக் கட்டுரைகள் மிக சுவையானவை. சீதை சிறை இருந்த அசோகவனத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இலங்கைக்குச் சென்ற அத்தைப் பாட்டி, நீச்சல் குளத்தில் ஆச்சாரமாகக் குளிக்க மடிப்புடவை எடுத்து வைத்துக் கொண்ட கதையை தனது இலங்கைப் பயணக் கட்டுரை ஒன்றில் நகைச்சுவை ததும்பக் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்நாள் முழுவதும் கதர் உடுத்திய குமுதினி காந்தியடிகள் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார். காந்தியின் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று தங்கி பயிற்சி பெற்றவரும்கூட. குமுதினி ஆரம்பித்த 'திருச்சி சேவா சங்கம்' பலஆண்டுகளைக் கடந்து இன்றும் திருச்சியில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
நம்மாழ்வாரின் 100 பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் குமுதினி. அதுதான் அவரது இறுதிப் படைப்பு. 1986 அக்டோபர் 17 அன்று அவர் காலமானார். குமுதினியின் மருமகள் டாக்டர் பிரேமா நந்தகுமார் நாடறிந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறந்த கட்டுரையாளர். அரவிந்தரின் 'சாவித்ரி'யை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். குமுதினியின் வாழ்க்கையைத் தொகுத்து இரு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது மகள் அஹானா லக்ஷ்மி குமுதினியின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். 'A Kumudhini Anthology' என்ற நூலை வெளியிட்டுள்ளார். குமுதினியின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுவதுதான் அவருக்குத் தக்க உண்மையான நினைவுகூர்தலாக இருக்கும்.
அரவிந்த் |