அரங்கேற்றம்: ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன்
ஜனவரி 11, 2014 அன்று செல்வி. ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசனின் பரதநாட்டிய அரங்கேற்றம், சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யாபவனில் நடைபெற்றது. இவர் குரு திருமதி. மீனா லோகன் நடத்திவரும் புஷ்பாஞ்சலி நாட்டியப் பள்ளியின் மாணவி. நிகழ்ச்சி புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து, கோட்டீஸ்வர ஐயரின் "வாரணமுக" பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதன்பின் வசந்தா ஜதீஸ்வரத்தைத் தொடர்ந்து அரங்கேற்றத்தின் நடுநாயகமான சாருகேசி ராகத்தில் "இன்னும் என் மனம்" வர்ணத்தில் ஸ்ரீவித்யா தன் உடல்மொழியாலும், அழகான அபிநயத்தாலும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவக் குறும்புக் காட்சிகளை அழகாகக் காட்டினார்.

முத்துஸ்வாமி தீக்ஷிதரின் "கஞ்சதளாயதாக்ஷி", பாபநாசம் சிவனின் "ஆடும் தெய்வம்", அண்ணாமலை ரெட்டியாரின் "புள்ளிக்கலாப மயில்" என்ற காவடிச் சிந்து ஆகியவற்றுக்குச் சிறந்த அபிநயத்துடன் ஆடித் திறனை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

சிறப்பு விருந்தினரான ராகசைலசுதா நாட்டியப் பள்ளியின் ஆசிரியர் திருமதி. ஷைலஜா தலைமை தாங்கினார். கௌரவ விருந்தினராக யுவகலா பாரதி திரு. கே. சண்முகசுந்தரம் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சிக்குக் கலைமாமணி திருமதி. கிரிஜா ராமசாமி (வாய்ப்பாட்டு), திரு. என் ராமகிருஷ்ணன் (மிருதங்கம்), திரு. ஸ்ரீனிவாசன் (வயலின்), திருமதி. ஸ்ருதி ஸாகர் (புல்லாங்குழல்) ஆகியோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

கல்பனா,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com