அமெரிக்கருக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் பனைநிலம் (தென் கேரலைனா) தமிழ்ச் சங்கத்தினர் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஜனவரி 17, 2014 அன்று ஆஷ்லே ஹால் (Ashley hall school) பள்ளியில் நடைபெற்ற தமிழ்க் கல்வி நிகழ்ச்சியில் 250 மாணவ மாணவியர் பங்கேற்றனர். ஜனவரி 23ம் தேதி மௌல்ட்ரி நடுநிலைப் பள்ளி (Moultrie Middle School) பயிற்சி வகுப்பில் 40 மாணவ மாணவியர் பங்கேற்றனர். திரு. ஹரிநாராயணன் ஜானகிராமன் பாடங்களை நடத்தினார். ஜனவரி 27ம் தேதி பியூஸ்ட் அகாடமியின் (Buist Academy) 100 மாணவ மாணவியருக்குத் திரு. சந்தோஷ் மணி பயிற்சி வகுப்புகள் நடத்தினார்.
பள்ளியில் கூடுதலாக ஏதாவது ஒரு மொழியைக் கற்க விரும்பும் அமெரிக்கக் குழந்தைககள் லத்தீன் அல்லது சீன மொழிகளைத் தேர்கிறார்கள். தமிழ் குறித்து அறிவதில்லை என்பதால் இவர்களுக்குத் தமிழ், அதன் தொன்மை, சிறப்புகள் மற்றும் தமிழர் பண்பாடு, கலாசாரம் பற்றியும் எடுத்துரைக்கும் முயற்சியைப் பனைநிலம் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்துள்ளது கூடவே கோலம், கும்மிப் பாடல்கள் போன்றவையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
திருவள்ளுவர், திருக்குறள், தஞ்சைப் பெரியகோவில், இட்டலி, தோசை உட்படப் பாரம்பரிய விவரங்களை மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். அவர்கள் நடுவே தமிழர் உடையான வேட்டி, சட்டை அணிந்து இரு ஆசிரியர்களும் வகுப்பெடுத்தது குறிப்பிடத் தக்கதாகும்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கக் குழந்தைகளை தமிழ்ப் பள்ளிக்கு அழைத்து தமிழ் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக சங்கத் தலைவர் சந்தோஷ் மணி தெரிவித்தார். ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் கடந்த ஆண்டு சில மாணவர்களைத் தமிழ்ப் பள்ளியில் சேர்த்துள்ளனர். தலைவர் கூறுகையில், நம் மொழி அறிந்தோர் தொகையை அதிகரிக்க வேண்டுமென்றால் வேற்று மொழியினருக்கும் தமிழ் கற்பிக்க வேண்டும். இன்னொரு மொழி தேடும் ஆர்வமுள்ள அமெரிக்கக் குழந்தைகள் அதற்குச் சரியானவர்கள். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தமிழ் மேலும் தழைக்கும் என்றார்.
சின்னமணி |