பிப்ரவரி 1, 2014 அன்று ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகத்தின் முதல் நிகழ்ச்சியாகும் இது. டாலஸிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளிலிருந்தும் வந்திருந்த 35 குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.
முதலில் 'சங்கே முழங்கு' பாடலுக்கு வித்தியாசமான முறையில் புவனா நடனம் அமைத்திருந்தார். அடுத்து வந்த ஈஸ்வரா நாட்யாலாவின் கிராமிய நடனத்தில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து, கிரிஜா வடிவமைத்த சிறாரின் திருப்புகழ் நடனம் மனதை அள்ளியது.
'ஒரு வார்த்தை நூறு டாலர்' என்ற தமிழ் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியில் கோப்பல், அவ்வை மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 14 குழுக்களாகப் பங்கேற்றனர். அர்ஜுன், சங்கமன், அனிரூத், ப்ரணவ் ஆகியோர் கொண்ட குழு வெற்றிபெற்றது. நிகழ்ச்சியை அன்னபூரணி தொகுத்து வழங்க, மணிமேகலை மற்றும் சித்ரா நடுவர்களாக பங்கேற்றார்கள். குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் 65 குழந்தைகள் பங்கேற்றனர். ஒன்பது வயதுக்குட்பட்டோர் பிரிவில் விதுலாவும், 10-13 வயதுப் பிரிவில் பிரகத்தும் முதல் பரிசு பெற்றனர். 14–17 வயதுப் பிரிவில் செல்போனுக்குள் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் App வரைந்து அர்ச்சிதா முதல் பரிசு பெற்றார். பெண்களுக்கான கோலப்போட்டியில் பத்மினி, லட்சுமி, உமா குழுவினர் வெற்றி பெற்றார்கள்.
பெரியவர்களுக்கு 'சூப்பர் ஜோடி' போட்டியில் ருமிதா–கிருபா சங்கர் தம்பதியினர் முதல் பரிசும், அனிதா–சங்கர் இரண்டாவது பரிசும், ஹரி–சுஜி ஜோடி மூன்றாவது பரிசும் பெற்றார்கள். ஏ.ஆர். ரகுமானின் திருக்குறள் பாடலுக்கு குழந்தைகளின் நடனம் இடம்பெற்றது. தலைவர் கீதா வரவேற்புரை ஆற்றினார். பின்னர், சங்கத்தில் பணியாற்றும் பல்வேறு குழுக்களை அறிமுகப்படுத்தினார். கீதா சுரேஷ் குழுவினரின் நடனத்தைத் தொடர்ந்து , நிகழ்ச்சியின் இறுதியாக டெக்சஸ் பல்கலைக்கழக மாணவியரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கச் செயலாளர் கஸ்தூரி கோபிநாத் நன்றியுரை ஆற்றினார். சங்க வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்..
தகவல்: சின்னமணி புகைப்படங்கள்: சுதிர் ஃபோட்டோகிராஃபி |