பிப்ரவரி 1, 2014 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழாவை மவுன்டன் வியூ உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கொண்டாடியது. 1100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள் 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்ற மையக்கருத்தை ஒட்டி அமைந்திருந்தன.
சங்கத் தலைவர் திரு. எழிலன் ராமராஜன் அவர்கள் தலைமையிலான 2014-கேட்ஸ் செயற்குழு பொங்கல் விழாவினைத் திறம்பட நடத்தியது. 'நீயா நானா' புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, "நிறைவான வாழ்க்கை வாழச் சிறந்தது இந்தியாதான்! இல்லை....அமெரிக்காதான்!" என்ற தலைப்பில் விவாதமேடையை நடத்தியது விழாவின் சிறப்பம்சமாகும். நூற்றுக்கணக்கான பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை கண்கவர் நடனங்கள், நாடகங்கள், பாடல்கள் என பல்வேறு தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியது அனைவரின் ஆர்வத்திற்குச் சான்றாக அமைந்தது. முதன்முறையாக தமிழர்களின் போர்க்கலையான குத்துவரிசை, மற்றும் வர்மக்கலை மேடையில் அரங்கேறி, அனைவரையும் பெருமை கொள்ள வைத்தது.
நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
முரளிதரன் சுந்தரேசன், செயலாளர், GATS |