பாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்
ஃபிப்ரவரி 15, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் தனது வருடாந்திர 'பாட்டும் பரதமும்' நிகழ்ச்சியை மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் அஷோக் சுப்ரமணியம் மற்றும் ஹரி தேவ்நாத் தமிழ் கீர்த்தனைகர்த்தா திரு. கோடீஸ்வர ஐயர் அவர்களின் கீர்த்தனைகளை விளக்கிக் கூறி, பாடினார்கள். கோடீஸ்வர ஐயர் தியாகராஜ சுவாமிகளின் சிஷ்யர்களான பட்டணம் சுப்பிரமணிய ஐயர் மற்றும் பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் வழியில் தமிழில் கீர்த்தனைகளை உருவாக்கியவர். ரமேஷ் ஸ்ரீனிவாசனின் மிருதங்கமும், அர்விந்த் லக்ஷ்மிகாந்தனின் வயலினும் சிறப்பாக அமைந்திருந்தன.

அடுத்து வளைகுடாப் பகுதியின் பிரபல நடன ஆசிரியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக ஆடிய செல்வி. அக்ஷயா கணேஷ் குரு. இந்துமதி கணேஷின் மகள். ந்ருத்யோல்லாசா நடனப் பள்ளியில் நடனம் பயிற்றுவிக்கிறார். அடுத்து திருச்சிற்றம்பலம் நாட்டியப் பள்ளியின் ஆசிரியை திருமதி. தீபா மகாதேவன், தன் மாணவியர் சௌந்தர்யா ஜெயராமன் மற்றும் சுமனா கிருஷ்ணகுமாருடன் சேர்ந்து ஆடினார். அடுத்து ஆடிய விஜயசாரதி, விஷ்வசாந்தி நடனப்பள்ளியில் ஆசிரியர். பின்னர் வந்த கணேஷ் வாசுதேவன் கடந்த 25 வருடங்களாக நடனத்தில் பல விருதுகளைப் பெற்றவர்.

பாரதி தமிழ்ச் சங்கம் சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. வழக்கம்போலச் சிறியோரும் பெரியோரும் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சிகள், பிரபல பின்னணிப் பாடகர்களின் இசை, பட்டி மன்றம் போன்றவை இடம்பெறவுள்ளன.

மேலதிகத் தகவல்களுக்கு:
Facebook/BharatiTamilSangam
www.bharatitamilsangam.org/BATS

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com