அரங்கேற்றம்: கீர்த்தனா ஸ்ரீகாந்த்
பிப்ரவரி 22, 2014 அன்று ஃப்ரீமான்ட் ஓலோனி கல்லூரி வளாகத்திலுள்ள ஜாக்ஸன் தியேட்டரில் குரு இந்துமதி கணேஷ் அவர்களின் ந்ருத்யோல்லாசா டான்ஸ் அகாடமியின் மாணவி செல்வி. கீர்த்தனா ஸ்ரீகாந்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது.

புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்து, மகாசிவராத்திரியை முன்னிட்டு நடராஜ ஸ்லோகத்திற்கு அற்புதமாக ஆடினார் கீர்த்தனா. தொடர்ந்து வெங்கடாஜலபதியின் பெருமைகளை வர்ணிக்கும் சண்முகப்ரியா வர்ணத்தில் மகாபலியையும் வாமன அவதாரத்தை கனகச்சிதமாக வெளிக் கொணர்ந்து 55 நிமிடங்கள் ஆடி அவையினரை ஆனந்தப்படுத்திய பெருமை கீர்த்தனாவுக்கும் குருவுக்கும் நிச்சயம் உண்டு. மஹிஷாசுர வதத்தை அர்த்தபுஷ்டியுடன் விவரித்து ஆடியபின், 'அசைந்தாடும் மயில்' பாடலுக்கு கிருஷ்ணன் மயிலைப்போல ஆடியதையும், புல்லாங்குழல் இசைக்கு கோபியரும் வனவிலங்குகளும் மயங்கியதையும் கண்முன் கொணர்ந்தார் கீர்த்தனா. முகபாவங்களை அற்புதமாக வெளிக்காட்டினார் 'அதுவும் சொல்லுவாள்' என்ற பாடலுக்கு. தில்லானாவில் நட்டுவாங்கத்துடன் தனியாக ஒலித்த மிருதங்கத்துக்கு நாட்டியமாடிச் சபையினரை எழுந்து நின்று கைதட்ட வைத்துவிட்டார் கீர்த்தனா.

குரு இந்துமதி கணேஷ் (நட்டுவாங்கம்), திருமதி. ஆஷா ரமேஷ் (பாட்டு). திருமதி. சாந்தி நாராயணன் (வயலின்), திரு. நாராயணன் (மிருதங்கம்) ஆகியோரின் ஒத்துழைப்பு அற்புதம்.

சசிரேகா சம்பத்குமார்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com