ஃபிப்ரவரி 22, 2014 அன்று ரிச்மண்ட் தமிழ்ச் சங்கமும், ரிச்மண்ட் மலையாளிகள் சங்கமும் இணைந்து, மதுரை அக்ஷயா டிரஸ்ட் நிறுவனத்திற்கும், திருவனந்தபுரத்தின் 'தெருவோரம்' அமைப்புக்கும் நிதி திரட்டுமுகமாக ஒரு மெல்லிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பால் ஞானோதயன் தலைமையிலான 'ரிச் மெலடிஸ்' குழு இந்நிகழ்ச்சிக்குப் பின்னணி இசை வழங்கிற்று. இந்த நிகழ்ச்சியில் துவக்கப்பள்ளிச் சிறுவர்கள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள்வரை இருபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். பாடியதோடு மட்டுமல்லாமல் இசைக்கருவிகளையும் வாசித்தனர்.
இந்த விழாவின் இன்னொரு சிறப்பம்சம் தமிழர்கள் மலையாளப் பாடல்கள் பாடியதும் மலையாளிகள் தமிழ்ப் பாடல்களைப் பாடியதும் ஆகும். இந்த முறை 'ரிச் மெலடிஸ்' குழுவில் நிறையப் புதுமுகங்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல்களும் ஐந்து மாதங்களுக்கு முன்பு வந்த பாடல்களும் பாடப்பட்டதால், அனைத்து வயதினரையும் இந்த இசை நிகழ்ச்சி மகிழ்வித்தது.
மனதை நெகிழவைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் சுமார் ஐநூறு நல்லுள்ளங்கள், உதவி கோரி நின்ற இவ்விரு இயக்கங்களுக்கு நிதி அளித்து உதவியதுதான்.
நாராயணன் சுப்பிரமணியன், ரிச்மண்ட், வர்ஜீனியா |