கணக்கிலடங்கா விருதுகள் பெற்றவரும், சிற்பக்கலை என்றாலே சிந்தனைக்கு வருபவருமான பத்மஸ்ரீ S.M. கணபதி ஸ்தபதி அவர்களின் விரிவான சந்திப்பைத் தென்றலில் படித்து மகிழ்ந்தேன். மஹா பெரியவாள் சொன்ன கருத்துக்களையும் ஸ்தபதி அவர்கள் தெய்வ வாக்காகவே கடைப்பிடித்து வாழ்கிறார் என்பதும், சிற்பங்கள் வெறும் பொம்மைகள் அல்ல என்பது பற்றியும் அழகாகச் சொல்லியுள்ளார்கள். இந்தச் சந்திப்பு தெய்வத்தை வடிவமைக்கும் தெய்வீகத் தொழில் செய்யும், விஸ்வகர்மா வழியில் வந்த வாழும் பிரம்மாவாகவே மனதிற்குத் தோன்றி, என்னை பிரமிக்கச் செய்தது.
திருலோக சீதாராம் தெலுங்கு பேசுபவரானாலும் தமிழின்மீது பெருவிருப்பு வைத்துச் செய்திருக்கும் தொண்டு சாதாரணமானதல்ல. அவர் நடத்திய இதழில் அறிமுகம் செய்யப்பட்ட பலர், தமிழ் நாட்டில் அனுபவமிக்க நல்ல அரசியல்வாதிகளாகவும், எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் புகழ் பெற்றுள்ளனர் என்று அறியும்போது அவர்மேல் அளவில்லா மரியாதை தோன்றுகிறது.
கர்நாடக சங்கீத வித்வான் மதுரை G.S. மணி அவர்கள், தேவாரம், திருவாசகம், பஜனைகள் போன்றவற்றிற்கு இசையமைத்து மக்களைப் பாடும்படி செய்து பெரும்புகழ் அடைந்துள்ளார். அதில் தென்னவன் இசை உலாவும் ஒன்று என்பதைத் தென்றலில் படித்து மகிழ்ந்தேன். தமிழ் மன்றங்களின் மூலம் தமிழ் அமெரிக்காவில் மிக வளமாக வளர்ந்து கொண்டிருப்பதை நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறுகதைகள் யாவும் உயிரோட்டமானவை. மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள் வழியே ஹரி கிருஷ்ணன் அவர்களின் ஆராய்ச்சிகளும் ஒப்பீடுகளும் விளக்கங்களும் வியக்க வைக்கின்றன. சீதா துரைராஜ் அவர்களின் சமயம் கட்டுரைகள், கோவிலுக்கே சென்று சுவாமி தரிசனம் செய்வது போன்ற நிறைவைத் தருகின்றன. சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிடி, கலிஃபோர்னியா. |