சூப்பர் பௌல் விளம்பரத்தில் பாடிய சுஷ்மிதா சுரேஷ்
ஜனவரியில் நடந்த சூப்பர் பௌலின்போது வந்த கோககோலா விளம்பரமான 'அமெரிக்கா இஸ் பியூடிஃபுல்' பாடலைப் பாடிய ஒன்பது சிறுமிகளில் இந்தி வரியைப் பாடியவர் சுஷ்மிதா சுரேஷ். இந்தப் பதினைந்து வயதுத் தமிழ்ப் பெண் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இல்லினாய் மாகாணத்தின் அரோரா புறநகரத்தில் வசிக்கிறார்.

இவருடைய உறவினர் ரம்யா கிருஷ்ணமூர்த்தி ஒரு விளம்பர நிறுவனம் இந்தியில் பாடப் பதினைந்து வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்ணைத் தேடுவதாக அறியவந்து, சுஷ்மிதாவின் பெற்றோரைத் தொடர்பு கொண்டாராம். சுஷ்மிதா பாடிய சில Youtube பதிவுகளை ரம்யாவிடம் கொடுக்க, அதை அவர் அனுப்பி வைத்தார். விளம்பர நிறுவனம் சுஷ்மிதாவை தொடர்பு கொண்டு, நியூ யார்க் வருமாறு கூற, பின்னர் நடந்தது சரித்திரம்!

பத்து வருடங்களாக சுஷ்மிதா, திருமதி. வசந்தி ஐயரிடம் கர்னாடக சங்கீதம் பயில்கிறார். தவிர, மேற்கத்திய இசையும், பியானோவும் கற்கிறார். சுஷ்மிதா நாள்தோறும் 2 மணி நேரமாவது வீட்டில் பயிற்சி செய்கிறாராம். 5 வயதில் தாயார் பாடும் கர்னாடக சங்கீதம் கேட்டு இசையில் ஆர்வம் ஏற்பட்டதென்கிறார் சுஷ்மிதா. வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், இசையில் அதீத ஆர்வம் காட்டிய சுஷ்மிதாவுக்கு அவரது பெற்றோரும் பக்கபலமாக இருக்கின்றனர். இசையை மேற்பாடமாக கல்லூரியிலும் படிக்க விரும்பும் சுஷ்மிதாவுக்கு Audio Engineering படிக்க ஆர்வம் உள்ளதாம்.

ராஜி விவேக்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com